இப்னு சுபைதர்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியோடு தற்போது நாடு முழுவதும் தேசிய மக்கள் சக்தி தொடர்பான ஒரு ஈர்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனால் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகளை மறந்து பொதுமக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் அதிகமானோர் ஐக்கிய தேசியக்கட்சி சார்புள்ளவர்களாக இருந்தனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகினர். பின்னர் முஸ்லிம் கட்சிகளின் தோற்றத்தோடு இந்த ஆதரவு முஸ்லிம் கட்சிகளின் பக்கம் திரும்பி முஸ்லிம் கட்சிகளில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகினர்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் படி இம்மாவட்டத்தின் 7 ஆசனங்களில் 4 பேர் முஸ்லிம்களாக இருந்தனர். எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும், ஏ.எல்.எம்.அதாவுல்லா தேசிய காங்கிரஸ் சார்பாகவும், எஸ்.எம்.எம்.முஸர்ரப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் தெரிவாகி இருந்தனர்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கடந்த முறை போன்று இங்கு 4 முஸ்லிம் ஆசனங்கள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாக உள்ளதாகவே அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம் முஸ்லிம் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கி வந்தோருள் ஒரு சாரார் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி நிற்கின்றமையாகும்.
முஸ்லிம்களது ஆதரவும் தேசிய மக்கள் சக்திக்கு கிடைப்பதால் அக்கட்சி அம்பாறை மாவட்டத்தில் 3 ஆசனங்களைப் பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. எனினும் அக்கட்சியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இதனை தெளிவுபடுத்துகின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
தொகுதி வாக்குகள்
அம்பாறை – 60,292
பொத்துவில் – 18,053
சம்மாந்துறை – 8,569
கல்முனை – 10,937
தபால் வாக்குகள் – 11,120
மொத்தம் – 108,971
இந்த வாக்களிப்பு முறையை நோக்குகின்ற போது அம்பாறை தொகுதியுடன், ஏனைய சிங்கள பிரதேசங்களையும் சேர்த்து அநுர குமார திசாநாயக்க பெற்ற வாக்குகளுள் சுமார் 65 வீதமானவை சிங்கள மக்களது வாக்குகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகின்றது.
1989 ஆம் ஆண்டும் அதன் பின்னரும் நடந்த பொதுத் தேர்தல்களில் மக்கள் இனரீதியாகச் சிந்தித்தே விருப்பு வாக்களித்து வந்துள்ளனர் என்பதை நாமறிவோம். யார் என்னதான் கூறினாலும் இப்போதும் கூட இந்த மனோநிலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை.
எனவே, தற்போதைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளில் சிங்கள வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் உயர் நிலையில் இருக்கும் என்பது உறுதியானது. ஆகையினால் தேசிய மக்கள் சக்தியில் வெற்றிபெறும் மூவரும் பெரும்பான்மையின உறுப்பினர்களாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறைத் தொகுதியில் 53,410 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வாக்குகளில் சற்று தளர்வு ஏற்படக் கூடிய சாத்தியம் இருந்தாலும் ஏனைய தொகுதிகளில் இருந்து இக்கட்சிக்கு கிடைக்கும் சொற்ப வாக்குகளோடு சேர்த்து இக்கட்சி ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.
அம்பாறைத் தொகுதியின் விருப்பு வாக்கு இந்த ஆசனத்தை தீர்மானிக்கும் பலமிக்க சக்தியாக இருப்பதால் இதுவும் பெரும்பான்மையின சகோதரர் ஒருவருக்கான ஆசனமாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் தென்படவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்டத்தில் 86,539 வாக்குகளைப் பெற்றார். இதில் சுமார் 30 வீதமானவை சிங்கள மக்களது வாக்குகள். ஏனையவை முஸ்லிம், தமிழ் மக்களது வாக்குகள். இந்த வாக்குகளில் சிறிது தளர்வு ஏற்பட்டாலும் இம்முறை ரணில் தலைமையிலான கேஸ் சிலிண்டருக்கும் ஒரு ஆசனம் கிடைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.
இங்கு முஸ்லிம் வேட்பாளர்கள் பிரதேச ரீதியாகப் பிரிந்து விருப்பு வாக்கு வேட்டையில் ஈடுபடாமல் ஓரளவு கூட்டு முயற்சியில் ஈடுபட்டால் இக்கட்சியிலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெறலாம். முஸ்லிம்கள் தங்களுக்குள் பிரிந்து நின்றால் இந்த ஆசனமும் முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
மிகுதி 2 ஆசனங்களைப் பெறுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்க்கட்சிகள் என்பன களத்தில் உள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் தாம் பெற்ற ஆசன இழப்பு அனுபவத்தை மனதில் கொண்டு இம்முறை தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது.
மிகுதி ஒரு ஆசனம் முஸ்லிம் காங்கிரசுக்கா அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கா என்பதை வாக்களிப்பு தீர்மானிக்கும்.
எனவே, இந்தத் தேர்தல் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு தேர்தலாகும். கடந்த முறை 4 முஸ்லிம் ஆசனங்களைப் பெற்றிருந்த இம்மாவட்டம் இம்முறை அதிக பட்சம் 3 ஆசனங்களையும் குறைந்த பட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகளே உள்ளன.
இம்மாவட்டத்தில் 3 முஸ்லிம் ஆசனங்கள் கிடைக்குமா? அல்லது அதனைவிடக் குறைந்த ஆசனங்கள் கிடைக்குமா என்பதை முஸ்லிம் மக்களது வாக்களிப்பு முறையே தீர்மானிக்கும். எதிர்வரும் 15 ஆம் திகதி இது தொடர்பான விளக்கம் அனைவருக்கும் கிடைத்துவிடும். – Vidivelli