-
சவூதி தூதுவர் நேரில் அழைத்து பாராட்டினார்
-
உம்ராவுக்கு அனுப்பவும் இமாம் சுதைஸை சந்திக்கவும் ஏற்பாடு
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் பார்வையற்ற சிறுவன் அல் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
புதிய காத்தான்குடி பதுரியா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த இரண்டு கண்களும் பார்வையற்ற முக்பில் சினான் எனும் சிறுவன் புதிய காத்தான்குடி- 01, பதுரியா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதி நேர ஹிப்ழு (அல்குர்ஆன்) மனனப் பிரிவில் அல்குர்ஆனை மனனம் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி செவிப்புலன் உதவியுடன் தனது 12 வது வயதில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழ் பட்டத்தை பெற்றுள்ளார்.
மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் உதவியுடன் மத்ரஸா முஅல்லிம்களின் சிறப்பான வழிகாட்டலில் கடந்த மூன்றரை வருடங்களில் இவர் புனித அல்குர்ஆனை மனனம் செய்துள்ளார்.
இவர் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். 29.04.2012 இல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிறந்தார். பிறப்பிலேயே கண் பார்வையை இழந்தார்.
இவர் 7 மாத குறைமாதத்தில் சிசுவாக பிறந்ததால் சுமார் மூன்று மாதங்கள் வைத்தியசாலையில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து இவருக்கான சிசிகிக்சையளிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் வைத்தியர்களின் பரிசோதனையில் இவர் கண் பார்வையை இழந்துள்ளார் என தெரியவந்தது.
கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு வைத்தியர்கள் பரிசோதனை செய்த போது இவரது கண் பார்வையை மீளப் பெற முடியாது என்ற சூழ் நிலையில் இவர் ஊருக்கு அனுப்பப்பட்டார்.
இவர் தாயினதும் இவரது மூத்த வாப்பாவினதும் மாமாமாரினதும் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் தனது வீட்டுக்கு அருகில் இவர் வீதியினால் செல்லும் போது அங்கு வானொலியில் போகும் சினிமா பாடல்களை கேட்டு அதை மனனம் செய்து பாடும் பழக்கம் இவரிடம் காணப்பட்டது.
இந்த நிலையில் இவரை புனித அல்குர்ஆனை மனனம் செய்த ஒரு ஹாபிழாக உருவாக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என இவரது தாய், மூத்த வாப்பா மற்றும் மாமாமார் ஆசை வைத்தனர். அத்தோடு இவரிடம் செவிப்புலனின் மூலம் அல்குர்ஆனை மனனம் செய்யும் ஆற்றல் இருக்கிறது என்பதை கண்ட புதிய காத்தான்குடி பதுரியா ஜும்ஆப் பள்ளிவாசல் அல் குர்ஆன் மனனப் பிரிவு பகுதி நேர முஅல்லிம் அல்ஹாபிழ் ஹிஸ்புல்லாஹ் மௌலவி இவரை அந்த மதரசாவில் சேர்த்து அவரும் அங்குள்ள முஅல்லிம்களும் புனித அல்குர்ஆனை செவிப்புலனின் மூலம் கற்பித்து வந்தனர்.
இந்தக் காலப்பகுதியில் இவர் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. தாயும் தந்தையும் சட்ட ரீதியாக பிரிந்து விடுகின்றனர்.
தாயினதும் மூத்த வாப்பாவினதும் மாமாமாரினதும் அரவணைப்பில் இவர் தொடர்ந்து புனித அல்குர்ஆனை மனனம் செய்து கொண்டிருக்கும் போது தாய் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மிகக் கடுமையான நோய்வாய்ப்பாட்டார். இந்நிலையில் தனது வீட்டை விற்றும் சிலரின் நன்கொடைகள் மூலமும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான ஒரு வறுமையான குடும்ப பின்னணியில் தான் சவால்களைக் கடந்து இரண்டு கண்களும் பார்வையற்ற முக்பில் சினான் புனித அல்குர்ஆன் முழுவதையும் செவிப்புலன் மூலம் மனனம் செய்தார்.
இவரது மூத்தவாப்பா கொச்சிக்காய் தூள் அரைக்கும் இடத்தில் கூலியாளாக வேலை செய்து கொண்டு இந்த மாணவனை கவனித்து வந்தார்.
குர்ஆனை மனனம் செய்ய வேண்டும் என்ற இவரது ஆர்வமும் முஅல்லிம்களின் உதவியும் தாய், மூத்தவாப்பா மாமாமாரினது அரவணைப்பும் இவரை ஒரு சிறந்த நிலைக்கு இன்று கொண்டு வந்துள்ளது.
இவரது இந்த திறமையை பாராட்டி காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கடந்த முதலாம் திகதி இவர் புனித அல்குர்ஆனை மனனம் செய்த புதிய காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாசலில் வைத்து ஜும்ஆ தொழுகையின் பின்னர் இவருக்கான ஊர்தழுவிய கௌரவிப்பு நிகழ்வை நடாத்தியது.
இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி பணப்பரிசும் வழங்கப்பட்டது.
ஒரு இலட்சம் ரூபா பணம் சம்மேளனத்தினாலும் 100 சவூதி ரியால் காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு சகோதரரினாலும் வழங்கப்பட்டன.
சம்மேளன தலைவர் பொறியியலாளர் தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சம்மேளன பிரதி தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் சத்தார் சிறப்புரையை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் சம்மேளன செயலாளர் மௌலவி இல்ஹாம் பலாஹி உட்பட உலமாக்கள் சம்மேளன முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாணவனை கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
செவிப்புலனின் உதவியுடன் புனித அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றமையை பாராட்டியதுடன் இந்த மாணவனின் விருப்பப்படி குறித்த மாணவனையும் அவரது தாயார் மற்றும் மாமா ஆகிய மூவரையும் தூதரகத்தின் ஏற்பாட்டில் புனித உம்ராவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் அத்தோடு இவர் கேட்டுக் கொண்டபடி ஹரம் ஷரீபின் இமாம் சுதைஸ் அவர்களை சந்திக்க தான் ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் தூதுவர் உறுதி மொழி வழங்கியுள்ளார் என மாணவனின் மாமா சிறாஜ் தெரிவித்தார்.
இந்த மாணவனின் ஓதலை கேட்ட தூதுவர் மிகவும் மகிழ்ச்சியை தெரிவித்து பாராட்டியதுடன் அன்பளிப்பும் வழங்கியுள்ளார்.
கண் பார்வையுள்ள நாம் புனித அல்குர்ஆனை பார்த்து ஓதுவதற்கே சிரமப்படும் நிலையில் இந்த பார்வையற்ற மாணவன் புனித அல்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்துள்ளார் என்பது நமக்கெல்லாம் பெரும் படிப்பினையாகும்.
இந்த மாணவனின் ஆரோக்கியத்திற்காகவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் நாம் பிரார்த்திப்போமாக.- Vidivelli