தெற்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா?

0 142

றிப்தி அலி

பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு சரி­யாக இன்னும் ஒரு வாரம் மாத்­தி­ரமே உள்­ளது. சுமார் 60க்கு மேற்­பட்ட சிரேஷ்ட அர­சி­யல்­வா­திகள் இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டமால் ஒதுங்­கி­யுள்­ளனர். இதனால் அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் பல புதிய முகங்­க­ளையே காண முடியும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் சிறு­பான்மை இனப் பிர­தி­நி­தித்­து­வமும் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பாது­காக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
விகி­தா­சார முறையில் நடை­பெறும் பாரா­ளு­மன்றத் தேர்­தலின் ஊடாக சிறு­பான்­மை­யினப் பிர­தி­நி­தித்­து­வத்­தினை இல­கு­வாகப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

இதன் கார­ண­மா­கவே வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் தொடர்ச்­சி­யாக சிறு­பான்­மை­யினப் பிர­தி­நி­தித்­துவம் தக்­க­வைக்­கப்­பட்டுக் கொண்டு வரு­கின்­றது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளியில் சிறு­பான்­மை­யினப் பிர­தி­நி­தித்­து­வத்­தினைப் பெறு­வது மிகக் கடி­ன­மாக உள்­ளது. அதிலும் முஸ்லிம் சமூகம் சார்­பான மக்கள் பிர­தி­நி­தித்­து­வமும் சிர­ம­மாக உள்­ளது. இலங்­கை­யி­லுள்ள முஸ்­லிம்­களில் மூன்றில் ஒரு பகு­தி­யினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் வாழ்ந்து வரு­கின்­றனர்.

ஏனைய இரண்டு பகு­தி­யினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியில் வாழ்ந்து வரு­கின்­றனர். இவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிரதிநிதித்துவம் மிகவும் அவ­சி­ய­மாகும்.

குரு­நாகல், கம்­பஹா மற்றும் களுத்­துறை போன்ற மாவட்­டங்­களில் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் அதி­க­மாகக் காணப்­பட்­டாலும் கடந்த பல தசாப்­தங்­க­ளாக குறித்த மாவட்­டங்­களில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வ­மொன்­றினை பெற முடி­யா­துள்­ளது.

இதனால் குறித்த மாவ­ட்டங்­களில் வாழும் முஸ்­லிம்கள் தொடர்ச்­சி­யாக புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. கடந்த பாரா­ளு­மன்­றத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்கள் தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­களைச் சேர்ந்த 12 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் காணப்­பட்­டனர்.
இதற்­க­மைய கொழும்பு – 02 (எஸ்.எம். மரைக்கார், ஏ.எச்.எம். பௌசி), புத்­தளம் – 01 (அலி சப்ரி றஹீம்), கண்டி – 02 (ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ. ஹலீம்), கேகாலை – 01 (கபீர் ஹாசீம்), அனு­ரா­த­புரம் – 01 (இஷாக் ரஹ்மான்), தேசி­யப்­பட்­டியல் – 05 (அலி சப்ரி, இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், முஜீபுர் ரஹ்மான், மர்ஜான் பளீல், முஹம்­மது முஸம்மில்) என்ற அடிப்­ப­டையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் காணப்­பட்­டது.

எனினும், குறித்த எண்­ணிக்கை அடுத்த பாரா­ளு­மன்­றத்தில் தக்­க­வைக்­கப்­ப­டுமா என்ற கேள்­விக்­குறி காணப்­ப­டு­கின்­றது. இதற்கு பிர­தான காரணம் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் தேசிய மக்கள் சக்­தி­யினை நோக்கி நகர்­வ­தாகும்.
கடந்த பார­ளு­மன்றத் தேர்­தலில் அதி­க­மான முஸ்லிம் மக்கள் ஐக்­கிய மக்கள் சக்திக்கு வாக்­க­ளித்­தனர். இதனால் கொழும்பு மாவட்­டத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் இடங்­க­ளையும், கண்டி மாவ­ட்டத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இடங்­க­ளையும், அனு­ரா­த­புரம் மற்றும் கேகாலை ஆகிய மாவட்­டங்­களில் 1ஆம் இடத்­தினையும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் பெற முடிந்­தது.

இந்த விடயம் ஐக்­கிய மக்கள் சக்­தியின் ஏனைய உறுப்­பி­னர்கள் மத்­தியில் பாரிய கருத்­தா­டலை ஏற்­ப­டுத்­தி­யது. இவ்­வா­றான நிலையில், ஐக்­கிய மக்கள் சக்­திக்கு அளிக்­கப்­படும் முஸ்லிம் வாக்­குகள் இந்த தேர்­தலில் குறை­யு­மாயின் மேற்­படி இடங்­களை பிடித்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அடுத்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கனவு கேள்­விக்­கு­றியாகிவிடும்.
இதே­வேளை, ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்­கவின் தேசிய மக்கள் சக்­திக்கு முஸ்லிம் மக்கள் வழங்கும் வாக்­குகளின் ஊடாக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தெரி­வா­வ­தற்­கான வழி­க­ளையும் ஏற்­ப­டுத்த வேண்டும்.

மாறாக முஸ்லிம் சமூகம் வழங்­கிய வாக்­கு­களின் ஊடாக தேசிய மக்கள் சக்­தியின் ஊடாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­டாத பட்­சத்தில் செலுத்­தப்­பட்ட குறித்த வாக்­கு­க­ளுக்கு எந்தப் பிர­யோ­சனமும் இல்­லாது போய்­விடும்.

ஏனென்றால், கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களில் தேசிய மக்கள் சக்­திக்­கான வாக்கு வங்கி பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. எனினும் குறித்த மாவட்­டங்­களில் இக்­கட்­சி­களின் ஊடாக முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்­தினை பெறு­வது மிகக் கடினம் என்ற கருத்­தாடல் மக்கள் மத்­தியில் காணப்­ப­டுன்­றது. முஸ்லிம் சமூ­கத்தில் செல்­வாக்­குள்ள மற்றும் மிக்க பிர­பல்­ய­மான வேட்­பா­ளர்கள் நிறுத்­தப்­ப­ட­வில்லை என்ற குற்­ற­ச்சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

எனினும், எமது கட்­சி­யுடன் தொடர்ந்து பய­ணிப்­போ­ரையே வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­தி­யுள்ளோம் என்று அக்­கட்­சி­யினால் முன்­வைக்கும் கார­ணத்­தினை ஒரு­போதும் நிரா­க­ரிக்க முடி­யாது.

இதே­வேளை, 2015ஆம் ஆண்டு முதல் அனு­ராத­புர மாவட்­டத்தில் தக்­க­வைக்­கப்­பட்டு வந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்தும் இத்­தேர்­தலில் கேள்­விக்­கு­றி­யாக மாறி­யுள்­ளது. இதற்கு காரணம் பல கட்­சி­களில் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் போட்­டி­யி­டு­வ­தாகும்.

இது போன்று மூன்று தசாப்­தங்­க­ளுக்கு பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலின் ஊடாக புத்­தளம் மாவட்­டத்­திற்கு கிடைக்கப் பெற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யையும் தக்­க­வைக்க வேண்­டி­யுள்­ளது.
கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தெரி­வு­செய்­யப்­பட்­டவர் “தங்க மக­னாக” மாறி­ய­மை­யினால் புத்­தளம் மாவட்­டத்­திற்கு பாரிய அவ­மானம் ஏற்­பட்­டது. இதனால் “தங்க மகன்” போன்ற ஒரு­வரை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பாமல் சமூ­கத்­திற்கு பணி­யாற்­றக்­கூ­டிய சிறந்த ஒரு­வரை பாரா­ளு­மன்றம் அனுப்ப புத்­தளம் மாவட்ட மக்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அதே­வேளை, கம்­பஹா மாவட்ட முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் தேசிய மக்கள் சக்­தியினால் உறு­திப்­ப­டுத்த முடியும். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அஞ்சான் உம்மா செயற்­பட்டார்.

இலங்­கையின் முத­லா­வது முஸ்லிம் பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான இவர் தேசிய மக்கள் சக்­தி­யி­லுள்ள ஒரே­யொரு அர­சியல் கட்­சி­யான மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் உறுப்­பி­ன­ராவார்.

இவரைத் தொடர்ந்து கம்­பஹா மாவட்­டத்­தி­லி­ருந்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இது­வரை தெரி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. பல கட்­சிகள் சார்பில் பல பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் பல முஸ்லிம் வேட்­பா­ளர்கள் போட்­டி­யிட்ட போதிலும் அவர்­க­ளினால் வெற்றி பெற முடி­ய­வில்லை.

இவ்­வா­றான நிலையில் இந்த தேர்­தலில் கம்­பஹா மாவட்­டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் முனீர் முழப்பர் போட்­டி­யி­டு­கின்றார். சிறந்த சமூக செயற்­பட்­டா­ள­ரான இவர், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தேசிய மக்கள் சக்­­தியின் நிறை­வேற்றுக் குழுவின் உறுப்­பி­ன­ரா­கவும் செயற்­ப­டு­கின்றார்.
கம்­பஹா மாவட்­டத்­தி­லுள்ள முஸ்லிம் மக்கள் சிந்­தித்து செயற்­பட்டால் நிச்­ச­ய­மாக தேசிய மக்கள் சக்­தியின் ஊடாக முனீர் முழப்­பரை பாரா­ளு­மன்றம் அனுப்ப முடியும் என்­பதில் மாற்றுக் கருத்­திற்கே இட­மில்லை.

இது போன்றே குரு­நாகல் மற்றும் களுத்­துறை மாவட்­டங்­க­ளிலும் கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளாக எந்­த­வொரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தெரி­வு­செய்­ய­ப்ப­ட­வில்லை.

குறித்த இரண்டு மாவட்­டங்­க­ளிலும் உள்ள முஸ்லிம் மக்கள் மிகவும் சிந்­தித்து முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வ­த்­தினை பெறு­வ­தற்­கான வழி­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

குறிப்­பாக குரு­நாகல் மாவட்­டத்தில் பல முஸ்லிம் வேட்­ப­ாளர்கள் இந்த முறை கள­மி­றங்­கி­யுள்­ளமை முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த விட­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் தலை­வர்கள் தவ­றி­ழைத்­த­மை­யினை இங்கு சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது.

இதே­வேளை, 2004ஆம் ஆண்டு முதல் களுத்­துறை மாவட்டம் இழந்த முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்­தினை மீண்டும் பெறு­வ­தற்­கான வாய்ப்பு இம்­முறை கிடைத்­துள்­ளது. இதற்கு பிர­தான காரணம் களுத்­துறை மாவட்­டத்­திற்­கான ஆசனம் ஒன்று அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யாகும்.

அத்­துடன், கடந்த தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சக்­தியில் போட்­டி­யிட்ட சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­க­ளான ராஜித சேனா­ரத்ன மற்றும் காலஞ்­சென்ற குமார் வெல்­கம ஆகியோர் இந்த முறை அக்­கட்­சியில் போட்­டி­யி­ட­வில்லை.

இதனால், களுத்­துறை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்­தியில் போட்­டி­யி­டு­கின்ற இப்­திகார் ஜெமீலின் ஊடாக முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்­தினை தக்­க­வைக்க முடியும். இதற்­காக வேண்டி அக்­கட்­சியின் தவி­சா­ள­ரான இம்­தியாஸ் பாக்கீர் மாக்­காரும் பிரச்­சா­ரத்தில் இறங்க வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும்.

அதே­வேளை, தேசிய மக்கள் சக்­தியின் சார்பில் களுத்­துறை மாவட்­டத்தில் போட்­டி­யிடும் அரூஸும், தனது தேர்தல் பிரச்­சார வியூகங்­களை நன்கு திட்­ட­மிட்டு செயற்­ப­டுத்­தினால் அவரும் பாரா­ளு­மன்றம் செல்­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாகும். ஏனெனில், தேசிய மக்கள் சக்­திக்­கான களுத்­துறை மாவட்ட முஸ்­லிம்­களின் வாக்­குகள் அதி­க­ரித்­துள்­ள­மை­யாகும். இதன் ஊடாக களுத்­துறை மாவட்டம் இரண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பெற முடியும் என்­பது குறிப்­ப­டத்­தக்­க­தாகும். விகி­தா­சார அடிப்­ப­டையில் இடம்­பெற்ற கல்­முனை மாந­கர சபைத் தேர்­தலில் நற்­பிட்­டி­முனைக் கிராமம் மூன்று கட்சிகள் சார்பில் மூன்று உறுப்பினர்களைப் பெற்றமையினை களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு சிறந்த உதாரணமாக முன்வைக்கின்றேன்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது. அடுத்த பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம், சட்டத் திருத்தம் போன்ற பல விடயங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்­காக முஸ்லிம் சமூகம் சார்பில் குரல்­கொ­டுக்­கக்­கூ­டி­ய­வர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது. கடந்த பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியில் இருந்­து­கொண்டு முஸ்லிம் சமூ­கத்­திற்­காக கடு­மை­யாக குரல் கொடுத்த ரவூப் ஹக்கீம், றிசாத் பதி­யுதீன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்றோர் அடுத்த பாரா­ளு­மன்­றத்­திற்கும் கட்­டாயம் தெரி­வு­செய்­யப்­பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் குறித்த மாவட்­டங்­க­ளி­லுள்ள முஸ்லிம் மக்கள் செயற்­பட வேண்­டி­யது முஸ்லிம் சமூகத்தின் தேவையாக மாறியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.