நாட்டில் முஸ்லிம் சமூகத்தை அச்சமூட்டும் செயற்பாடுகள் முற்றுப் பெறுவதாகத் தெரியவில்லை. மாவனெல்லைப் பிரதேசத்தில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் இன்று பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளன. இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதே இந்த அச்சத்திற்குக் காரணமாகும்.
மாவனெல்லை யில் ஏற்கனவே பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற கலவரம் மாவனெல்லைக்குப் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன் சிங்கள – முஸ்லிம் உறவையும் சீர்குலையச் செய்தது. அவ்வாறானதொரு நிலை மீண்டும் அப் பகுதியில் தோற்றம் பெற்றுவிடக் கூடாது என்பதே அனைவரதும் பிரார்த்தனையாகும்.
அளுத்கம, கிந்தோட்டை, திகன வன்முறைகள் தொடர்பில் நாம் நன்கு அறிந்தும் அனுபவப்பட்டும் உள்ளோம். மேற்படி சம்பவங்களின்போது முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள இளைஞர்களைத் தூண்டிவிட முஸ்லிம்கள் தரப்பில் தவறிருப்பதாகவே காண்பிக்கப்பட்டது. அளுத்கமவில் முஸ்லிம் சாரதி ஒருவர் விபத்து ஒன்று தொடர்பில் பௌத்த பிக்குவைத் தாக்கியதாகக் கூறியே வன்முறை தூண்டப்பட்டது. கிந்தோட்டையிலும் விபத்து ஒன்றை மையப்படுத்தி முஸ்லிம்கள் சிங்களவர்களைத் தாக்கினார்கள் எனக் கூறி வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. திகவிலும் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சிங்கள சாரதி ஒருவரை தாக்கியதில் அவர் உயிரிழக்க, அதனைப் பயன்படுத்தி வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இதன் தொடரில்தான் மாவனெல்லையிலும் தற்போது முஸ்லிம்கள் தான் புத்தர் சிலைகளை உடைத்தார்கள் எனும் காரணத்தை முன்வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படக் கூடும் எனும் நியாயமான அச்சம் மேலெழுந்துள்ளது.
இந்த சிலை உடைப்பு விவகாரத்தை எவர் செய்திருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள்தான் இதனைச் செய்திருப்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அல்லது அதனை அவர்கள் ஒப்புக் கொண்டால் இனங்களிடையே முறுகலைத் தோற்றுவிக்க முனைந்த குற்றச்சாட்டில் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அல்லது வேறேதும் சக்திகள் இதனைச் செய்திருந்தார்கள் அவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
இன்று முஸ்லிம் சமூகத்தில் ஆங்காங்கே தீவிரப் போக்கு கொண்ட இளைஞர் குழுக்கள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அவ்வாறான சிந்தனைகளின் விளைவாக இச் சம்பவம் இடம்பெற்றிருக்குமாயின் அதுவும் மிகப் பாரதூரமானதாகும். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் அரசியல் தலைமைகளும் உலமாக்களும் சிவில் சமூகத்தினரும் மிகத் தீவிரமாக ஆராய்ந்து இவற்றை நெறிப்படுத்த முன்வர வேண்டும். இன்றேல் இவ்வாறான விரல் விட்டெண்ணக் கூடிய சில குழுக்களால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் பாதிப்புகளைச் சந்திக்க வேண்டி வரும்.
இலங்கையை இன்னுமொரு மியன்மாராக மாற்ற பல சக்திகள் தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. இதுவிடயத்தில் சமூகம் மிகத் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli