கருத்தடை செய்த குற்றச்சாட்டிலிருந்து வைத்தியர் ஷாபி விடுதலை
குடும்பத்தினர் உட்பட அனைவரது கடவுச் சீட்டுக்கள், காணி உறுதிகள் என அனைத்தையும் மீள கையளிக்க குருணாகல் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு
(எப்.அய்னா)
குருணாகல் போதனா வைத்தியசாலையில் தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை, அவ்வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்து குருணாகல் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான பி 1398/19 எனும் வழக்கை முன் கொண்டு செல்ல போதிய சான்றுகள் இன்மையால், அவ்வழக்கை இனி மேல் முன் கொண்டு செல்லப் போவதில்லை என சட்ட மா அதிபர் எழுத்து மூலம் குருணாகல் நீதிவான் பந்துல குணரத்னவுக்கு அறிவித்துள்ள நிலையில், அவ்வழக்கை முடிவுறுத்தி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
கடந்த 5 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் கோவையை, சி.ஐ.டி. யினர் சட்ட மா அதிபருக்கு அனுப்பியிருந்த நிலையில், அதனை ஆராய்ந்து, குற்றவியல் வழக்குத் தொடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை மையப்படுத்தி, சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை எழுத்து மூலம் நீதிமன்றுக்கும், விசாரணையாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
நேற்று இந்த விவகார வழக்கு குருணாகல் நீதிவான் நீதிமன்றின் நீதிவான் பந்துல குணரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சி.ஐ.டி.யின் இந்த விவகாரத்தை தற்போது கையாளும் பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹான் விஜேகோன் ஆஜரான நிலையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்காக சட்டத்தரணி சமீல் மொஹம்மட் உள்ளிட்ட குழுவினருடன் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆஜரானார்.
இந்த நிலையில், வழக்கின் ஆரம்பத்திலேயே பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹான் விஜேகோன் சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை மன்றில் அறிவித்தார்.
இதன்போது நீதிவான் பந்துல குணவர்தன திறந்த மன்றில்,’ சட்ட மா அதிபர் இந்த வழக்கை முன் கொண்டு செல்வதில்லை என தீர்மானித்துள்ளார். அதனை எழுத்து மூலம் இம்மன்றுக்கும் அறிவித்துள்ளார். எனவே சந்தேக நபரை இவ்வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்து இவ்வழக்கை முடிவுக்கு கொண்டுவருகின்றேன்.’ என அறிவித்தார்.
இதன்போது வைத்தியர் ஷாபிக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, ‘ வைத்தியர் ஷாபிக்கு எதிராக சான்றுகள் இல்லை எனக் கூறி அவரை விடுவிக்க நாம் இம்மன்றில் கோரிக்கை வைத்தோம். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்தது. ஆனால் சட்ட மா அதிபர் இப்போது வழக்கை முன் கொண்டு செல்வதில்லை என அறிவித்துள்ளார். நீதிமன்றம் செய்திருக்க வேண்டிய வேலையை, சட்ட மா அதிபர் தனது நிலைப்பாடு ஊடாக அறிவிக்கும் வரை காத்திருந்துள்ளமை கவலைக்குரியது.’ என குறிப்பிட்டார்.
இதன்போது நீதிவான் பந்துல குணரத்ன, ‘ இவ்வழக்கு நான் வருவதற்கு முன்பிருந்தே விசாரணையில் உள்ளது. சட்ட மா அதிபர் தனது நிலைப்பாட்டை கூறும் போது காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இக்கடிதத்திலும் காரணம் இல்லை. சட்ட மா அதிபர் வழக்கை முன் கொண்டு செல்லவில்லை என்று சொன்னதும் அதற்கு மேல் வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது. சாட்சிகள் உள்ளனவா, இல்லையா என்பதெல்லாம் அதற்கு பின்னர் தேவையற்றது.’ என குறிப்பிட்டார்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவுக்கும், நீதிவானுக்கும் இடையே சற்று காரசாரமான வார்த்தை பிரயோகங்கள் பரிமாற்றப்பட்டன.
இந்த நிலையில், விஷேட அறிக்கை ஒன்றினை முன் வைத்த பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹான் விஜேகோன், வைத்தியர் ஷாபியை கைது செய்த போது, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவரது கடவுச் சீட்டு முடக்கப்பட்ட நிலையில், அவரது கடவுச் சீட்டையும், அவரது பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தாரின் கடவுச் சீட்டுக்களையும், பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட அவருக்கு சொந்தமான காணி உறுதிகளையும் விடுவிக்க உத்தரவு கோரினார். அதன்படி அவற்றை விடுவித்து, வைத்தியர் ஷாபியிடம் அந்த இவ்வழக்கோடு தொடர்புடைய அனைத்து வழக்குப் பொருட்கலையும் கையளிக்குமாறு நீதிவான் சி.ஐ.டி.யினருக்கு அறிவித்தார்.
அதன்படி நட்ட ஈடு தொடர்பிலான வழக்கை தாக்கல் செய்ய, நேற்றைய வழக்கின் குறிப்புக்களை வைத்தியர் ஷாபி தரப்பு கோரிய நிலையில், அவற்றை வழங்கவும் நீதிவான் உத்தரவிட்டு வழக்கை முடிவுறுத்தினார்.
கடந்த 2019 மே மாதம் 6 ஆம் திகதி வைத்தியர் ஷாபியால் நடாத்தப்பட்டு வந்த வைத்திய நிலையம் குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளால், அப்போதைய குருணாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் உத்தரவுக்கு அமைய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் உளவாளி எனக் கூறப்படும் நபர் கொடுத்ததாக கூறப்படும் தகவல்களை மையப்படுத்தி இந்த சோதனை நடாத்தப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரப்பில் கூறப்படுகின்றது. குறிப்பாக வருமானத்தை மீறிய சொத்து, மற்றும் பயங்கரவாத , அடிப்படைவாத அமைப்புக்களுடனான தொடர்பு மற்றும் குருணாகல் வைத்தியசாலைக்குள் சிலரால் பேசப்பட்ட வதந்தியான கருத்தடை விடயத்தை மையப்படுத்தி இந்த சோதனைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் உத்தரவில் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். ஆனால், அதன்போது சந்தேகத்துக்கிடமான எதுவும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை.
அதிலிருந்து 6 நட்களின் பின்னர் கடந்த 2019 மே 12 ஆம் திகதி, ஷாபி வைத்தியரை குறிவைத்த இரண்டாவது நகர்வு எடுக்கப்பட்டிருந்தது.
குருநாகல் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தௌஹீத் ஜமாஅத் அமைப்போடு தொடர்பு வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி அப்போதைய குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத் 2019 மே 12 ஆம் திகதி அப்போதைய குருநாகல் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவுக்கு டீஐஜி/ கேயூ/ ஆர்ஐயூ/ 134/19 இலக்கம் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பி விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த கடிதம் குருனாகல் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலாலுக்கு, பொலிஸ் அத்தியட்சர் ஊடாக அனுப்பட்ட நிலையிலேயே விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.
இதனையடுத்து கடந்த 2019 மே 22 ஆம் திகதி குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு சென்றுள்ள , பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால், தெளஹீத் ஜமாஅத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவர் தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பீ 1398/19 எனும் முதல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். எனினும் அதில் அந்த வைத்தியர் யார் என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இந் நிலையிலேயே 2019 மே 23 ஆம் திகதி திவயின பத்திரிகையில், ‘தௌஹீத் ஜமாஅத் டாக்டர், சிங்கள தாய்மார் 4000 பேருக்கு கர்ப்பத்தடை செய்துள்ளார். சாட்சிகளோடு அம்பலமாகியுள்ளது’ என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் அந்த செய்தியிலும் டாக்டரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை
எனினும் இவ்வாறு கருத் தடை விவகாரம் ஒன்று தொடர்பில் நாட்டில் எங்கும் எந்த வைத்தியருக்கும் எதிராகவும் அப்போதும் விசாரணைகள் இடம்பெறவில்லை என அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர ஊடாக அந்த திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் 2019 மே 24 ஆம் திகதி குருநாகல் பகுதிக்குப் பொறுப்பான அப்போதைய பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவும் , குருநாகல் பொலிஸ் நிலையப் அப்போதைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, குற்றவியல் பிரிவு அப்போதைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால் உள்ளிட்டோருடன் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் விஷேட கூட்டம் நடந்துள்ளது. இதனையடுத்து வைத்தியர் ஷாபியைக் கைது செய்ய பொலிஸ் அத்தியட்சர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த பணிப்புரைக்கமையவே பொலிஸ் பரிசோதகர், புஷ்பலால் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று 2019 மே 24 ஆம் திகதி இரவு 10 மணிக்கு டாக்டர் ஷாபியை கைது செய்தது.
குருணாகல் பொலிஸ் அத்தியட்சருடனான கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ள மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த கைது நடவடிக்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, தௌஹீத் ஜமாஅத் அமைப்பிடமிருந்து பணம் பெற்று, அவ்வமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம், சிங்களத் தாய்மார்களை கருத்தடை செய்தமை, இரண்டாவது தவறான வழிகளில் பெற்ற பணத்தைக்கொண்டு சொத்துக்கள் சேர்த்தமை, மூன்றாவதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் இவர் கைது செய்யப்படாது போனால் நாட்டை விட்டு அவர் தப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் இவருக்கும் இவரது வீடுகளுக்கும் சேதம் விளைவிக்கப்படலாம் என்பதாகும்.
எனினும் அதற்கு முன்பதாக 2019 மே 23 ஆம் திகதியே வைத்தியர் ஷாபிக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற குருணாகல் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே மே 24 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வைத்தியர் ஷாபி குருனாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்ட (தற்காலிக விதிகளின்) 6(1) ஷரத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கு அப்போதைய குருநாகல் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்க, குருநாகல் பொலிஸாருக்கு அதிகாரமளித்துள்ளார்.
இதனையடுத்தே 2019 மே 25 ஆம் திகதி அவரை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும்படி அப்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் குருனாகல் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அது முதல் சில மாதங்கள் வைத்தியர் ஷாபி சி.ஐ.டி. தடுப்புக் காவலில் இருந்தார். பின்னர் அவர் கடந்த 2019 ஜூலை 12 ஆம் திகதி குருணகல் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அதன் பின் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னரே அவருக்கு பிணையளிக்கப்பட்டது.
வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போதும், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு எதிராக எந்த சான்றுகளும் இல்லை எனவும் அவருக்கு எதிராக கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விடயங்கள் முன் வைக்கப்பட்ட போதும் அதற்கான சான்றுகளும் மன்றில் முன்னிலையில் இல்லை எனவும் கூறி கடந்த 2022 மே 17 ஆம் திகதி அவ்விரு குற்றச்சாட்டுக்கலையும் நீதிமன்றம் நீக்கி, தண்டனை சட்டக் கோவையின் கீழ் மட்டும் குற்றச்சாட்டுக்களை முன் கொண்டு சென்றது.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது, கருத்தடை விவகார முறைப்பாட்டை முன்வைத்த இரு பெண்களுக்கு, குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையிலும் மற்றொரு வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி. பரிசோதனைகளில், அவர்களது பெலோபியன் குழாயில் எந்த தடைகளும், தடங்கல்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பில் மற்றொரு பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட லெபரொஸ்கொபிக்ஸ் பரிசோதனையிலும் அவரது பெலோபியன் குழாயில் எந்த தடைகளும், தடங்கல்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சி.ஐ.டி.க்கு முறைப்பாடளித்த 143 தாய்மாரில் 130 இற்கும் அதிகமானோர் கர்ப்பம் தரித்து குழந்த்தைகலையும் பிரசவித்துள்ளதாகவும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே (மரணமடைந்து விட்டார்), சி.ஐ.டி.யின் அப்போதைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ்.திசேரா (ஷாபி விவகாரத்தை விசாரணை செய்த குழுவை மேற்பார்வை செய்தவர்) ஆகியோர், அத்துரலிய இரத்தின தேரர் மற்றும் குருநாகல் வைத்தியசாலையின் அப்போதைய பிரதிப் பணிப்பாளர் கெந்த்தன்கமுவ ஆகியோர் இந்த விவகார விசாரணைக்கு இடையூறு விளைவிப்பதாக முறைப்பாடு செய்திருந்தனர்.
அத்துடன், அந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியன, குருணாகல் முன்னாள் நீதவான் சம்பத் ஹேவாவத்துக்கு எதிராக அவரது பக்கச் சார்பு நிலைமை தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தன.
இவ்வாறான பின்னணியிலேயே அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து, சட்ட மா அதிபர் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கை முன் கொண்டு செல்வதில்லை என எழுத்து மூலம் குருணாகல் நீதிவானுக்கு அறிவித்துள்ள நிலையில், அவ்வழக்கில் இருந்து வைத்தியர் ஷாபி விடுவிக்கப்பட்டு, வழக்கும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.- Vidivelli