இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கையில், 17வது பாராளுமன்றத்திற்கான 225 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலானது பல்வேறு விதத்திலும் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு தேர்தலாக காணப்படுகின்றது. ஒருபுறம் இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இடதுசாரி கொள்கையுடைய ஜனாதிபதி ஒருவரின் கீழ் நடைபெறுகின்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். மறுபுறம் கடந்த 2023ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தல் இதுவாகும். அத்துடன் ஊழல் தடுப்பு சட்டம், உள்நாட்டு இறைவரி சட்டத்தில் புதிய விதிகள் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க வாக்காளர்களை பதிவு செய்யும் (திருத்தப்பட்ட) சட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெறுகின்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலும் இதுவாகும். எனவே, இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் முக்கிய அம்சங்கள் மீது இங்கு கவனம் செலுத்தப்படுகின்றது.
2024ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்ட 17,140,354 வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களில் 160 தேர்தல் பிரதேசங்களிலும் (தேர்தல் தொகுதி) மொத்தமாக 13,421 வாக்களிக்கும் நிலையங்களை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களை விட இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒருசில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலான செய்திகள் மீது மக்கள் அதிக ஆர்வம் செலுத்தியிருந்தனர். இதற்கான முக்கிய காரணம் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்னவின் வேட்புமனு கொழும்பிலே நிராகரிக்கப்பட்டமை ஆகும். சமூக வலைத்தளங்களில் மாத்திரமன்றி பிரதான ஊடகங்களிலும் இது தலைப்புச் செய்தியாவே பேசப்பட்டது. பின்னர் அஷேன் உட்பட இன்னும் மூன்று தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தம்முடைய வேட்புமனுவை நிராகரிக்க மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திலே மனு தாக்கல் செய்திதிருந்தனர். அதன் அடிப்படையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்காக பரராஜசிங்கம் உதயராசாவால் கையளிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என கடந்த 23 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. மேலும் குறித்த வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு எதிர்கால தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டிருத்தது. ஆனாலும் அஷேன் சேனாரத்ன உட்பட ஏனைய இருவருடைய மனுக்களையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
அதன் அடிப்படையில் இம்முறை நாடளாவிய ரீதியில் 433 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் 35 அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதேபோல் 716 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நாடளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 70 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக 5473 வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்களும் அடங்கலாக மொத்தம் 8830 வேட்பாளர்கள் இலங்கையின் 17ஆவது பாராளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் இம்முறை போட்டியிடுகின்றனர்.
உறுப்பினர்களின் எண்ணிக்கையைத்
தீர்மானிக்கும் செயல்முறை
இலங்கை பாராளுமன்றத்தின் மொத்த 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்கள் தேர்தல் மூலமும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியலிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.
ஏதேனும் ஒரு மாகாணத்திற்கு இரண்டு தேர்தல் மாவட்டங்கள் மாத்திரம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற வீதமும் (வட மாகாணத்திற்கு மாத்திரம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு ஒருவரும் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு மூவருமாக) மூன்று தேர்தல்கள் மாவட்டம் வீதம் காணப்படுகின்ற மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திற்கும், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்திற்கும், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தின் ‘அம்பாறை- திகாமடுல்ல’ மாவட்டத்திற்கும் இருவர் வீதமும் ஏனைய தேர்தல் மாவட்டங்களுக்கு ஒருவர் வீதமும் வழங்கப்படும். அதன் அடிப்படையில் 36 உறுப்பினர்களும் எஞ்சியுள்ள 160 பேர் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் உள்ள தேருநர்களின் எண்ணிக்கைக்கு அமைய தேர்தல் ஆணைக்குழுவினால் வருடாந்தம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
அதன்பின்னர் தேர்தல் ஆணைக்குழுவினால், மேற்குறித்த 36 ஆசனங்களில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் உரித்தான எண்ணிக்கையோடு 160 பேர்களின் உரித்தான எண்ணிக்கையை கூட்டி சகல தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டிய அபேட்சகர்களின் எண்ணிக்கை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும். அந்த அடிப்படையில் இம்முறை அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்தும் (19 உறுப்பினர்கள்) குறைவான பாராளுமன்ற உறுப்பினர்கள் திருகோணமலை மாவட்டத்தில் இருந்தும் (04 உறுப்பினர்கள்) தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.
இம்முறை ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்தினதும் சனத்தொகை மற்றும் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வருமாறு.
வாக்காளர் அடையாளம்
ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குச்சீட்டு மாத்திரமே வழங்கப்படும். அதனால் வாக்களிப்பின் போது வாக்காளரின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் மிகவும் முக்கியம். தேர்தல்களின் போது வாக்காளரின் வாக்கினை வேறொருவர் பயன்படுத்துவதென்பது நீதியான தேர்தலொன்றில் காணப்படுகின்ற மிகப் பெரிய சவாலாகும். இதற்கான சிறந்த தீர்வு வாக்காளரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டைகளை பயன்படுத்துவது. எனினும் இலங்கையின் 92 வருட தேர்தல் வரலாற்றில் 2004 ஆம் ஆண்டு வரை தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆள் அடையாள அட்டை என்பது கட்டாயமான ஒன்றாக காணப்படவில்லை. இதன் காரணமாக ஏற்படுகின்ற தேர்தல் மோசடிகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை தவிர்ப்பதற்காக சிவில் அமைப்புகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சட்ட மாற்றத்திற்காக நீதிமன்றத்தை நாடினார்கள். மிக நீண்ட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் “செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது” என்ற தீர்மானம் 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில்
- இம்முறை தேர்தலில்,
- தேசிய அடையாள அட்டை
- செல்லுபடியான கடவுச்சீட்டு
- செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்
- அரசாங்க சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
- முதியோர் அடையாள அட்டை
- ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள மத குருமார் அடையாள அட்டை
- தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஆள் அடையாள அட்டை
- தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படுகின்ற தற்காலிக ஆள் அடையாள பத்திரம் – ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
மேலும் நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற தேசிய அடையாள அட்டை தட்டுப்பாடு காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையில் உள்ளடக்கப்படவுள்ள தகவல்களை தாங்கிய கடிதத்தை பயன்படுத்தியும் வாக்காளர்களால் வாக்களிக்க முடியும்.
வாக்களிக்கும் செயன்முறை
ஒவ்வொரு வாக்குச் சீட்டுகளும் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் சுயேட்சை குழுக்கள் என்பவற்றின் பெயர்களையும் அக்கட்சிகள் குழுக்களுக்காக ஒதுக்கப்பட்ட சின்னங்களையும் காட்டுகின்ற பகுதியாகும். இரண்டாவது பகுதி ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சை குழு சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள விருப்பு இலக்கங்களுடன் கூடிய சதுரங்களை உள்ளடக்கிய பகுதியாகும். ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு ஒன்றுக்கு வாக்களிப்பதற்கும் ஒன்று அல்லது ஆகக் கூடியது மூன்று விருப்பு வாக்குகளை அடையாளம் இடுவதற்கான அவகாசமும் காணப்படுகின்றது. விருப்புகளை அடையாளம் இடுகின்ற பொழுது ஒரு வேட்பாளருக்கு அடையாளமிட முடிந்த ஆகக்கூடிய விருப்புகளின் எண்ணிக்கை ஒன்றாகும்.
அதேபோல் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளுக்கோ அல்லது சுயேச்சை குழுக்களுக்கோ அல்லது இரண்டுக்கும் அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மற்றும் வாக்காளர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகின்ற விதத்தில் அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் என்பன நிராகரிக்கப்படும்.
மேலும் மூன்று விருப்புக்களுக்கு மேற்பட்ட விருப்புக்கள் அடையாளம் இடப்பட்ட வாக்குச் சீட்டுகள் விருப்பு வாக்குகள் எண்ணப்படும்போது நிராகரிக்கப்படும். அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டொன்றை வாக்களிப்பு நிலையம் ஒன்றிலோ, சமூக வலைத்தளங்களிலோ அல்லது வேறு இடங்களில் காட்சிப்படுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இம்முறை பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் விரலில் மை பூசுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை இடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கையில் “முன்னதாக ஜனாதிபதித் தேர்தலுக்காக இடது கையின் சுண்டு விரலில் மை பூசப்பட்டது. பின் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் இடது கையின் கட்டை விரல் பயன்படுத்தப்பட்டது.
எனவே பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலை பயன்படுத்த தீர்மானித்துள்ளோம். இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் விரலிலோ குறியீடு இடப்படும்” என தெரிவித்திருந்தனர்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – 2024
இலங்கையில் மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி நடந்தன. எனினும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டே நடைபெற்றது. ஏனென்றால் அங்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவொன்று நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமை காரணமாக, எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை தனியாக 2019 ஒக்டோபர் மாதம் நடாத்த வேண்டி ஏற்பட்டது. பின்னர் மீண்டும் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடைபெற்றது. அதன் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.
எல்பிட்டிய பிரதேச சபை
தேர்தல் முடிவுகள் – 2024
நடந்து முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் அரசியல் களத்தில் தேசிய மக்கள் சக்தி தொடர்பிலான வெவ்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது காலி மாவட்டம் எல்பிட்டிய தொகுதியில் தேசிய மக்கள் சக்தி 49.37 (35,612) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தது. எனினும் நடைபெற்று முடிந்த பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 47.64 % என்ற ஒரு சரிவை எதிர்நோக்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வெறுமனே ஒரு மாதத்தில் இவ்வாறான ஒரு மாற்றத்தை ஆட்சியில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தி பெற்றிருப்பது சமூக வலைத்தளங்களில் மிக முக்கியமான பேசு பொருளாக தற்போது மாறியுள்ளது.
சமூக வலைத்தளமும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலும்
இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் அமைதியான மற்றும் வன்முறை சம்பவங்கள் குறைந்த தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலாகும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், கடந்த செப்டம்பர் மாதம் ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான “ ANFREL அன்பிரெல்” அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ‘ஜனாதிபதி தேர்தல் பற்றிய கண்ணோட்டம்’ நிகழ்வில் ஹேஷ்டேக் தலைமுறை அமைப்பு சார்பாக அந்த அமைப்பின் தேர்தல் பற்றிய ஆய்வாளர் தர்ஷத கமகே கலந்துகொண்டு குறிப்பிடுகையில்; இறுதியாக 2019, 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது அதிகமாக வெறுப்பு பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்ததுடன் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அதிகமாக காணப்பட்டவை “தவறான தகவல்கள் மற்றும் மக்களை தவறான முறையில் வழிநடத்தக் கூடிய பதிவுகள் (Fake and Misleading News) ” என குறிப்பிட்டிருந்தார். ஹேஷ்டேக் தலைமுறையின் ஆய்வுகளுக்கு அமைய அவர்களுடைய கண்காணிப்புகள் பின்வருமாறு காணப்பட்டது.
இதன் அடிப்படையில் நோக்கும் போது எதிர்வரவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலைப் போல் சமூக வலைத்தளங்கள் மூலமாக சட்டவிரோதமான தேர்தல் செயற்பாடுகள் நடைபெறக்கூடும், என பல தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.- Vidivelli