அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் கொழும்பிலுள்ள ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ இல்லத்தில் நடைபெற்றது.
உயர்ஸ்தானிகரது அழைப்பின் பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், நாட்டில் வாழும் முஸ்லிம்களின் விவகாரங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு நூற்றாண்டு காலம் தொட்டு ஜம்இய்யாவானது இலங்கை முஸ்லிம்களுக்கு ஆற்றிவரும் சேவைகள் தொடர்பிலும் பொதுச் செயலாளரினால் தெளிவுகள் வழங்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இந்நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்தோடும் வாழ்வதற்கு தான் என்றும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இலங்கை மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
இதன்போது, உயர்ஸ்தானிகருக்கு ஜம்இய்யாவின் வெளியீடுகள் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.- Vidivelli