அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவாகி ஐந்து வாரங்களாகின்ற நிலையில் மூன்று பேர் கொண்ட மிகச் சிறிய அமைச்சரவையே நாட்டை நிர்வகித்து வருகின்றது. இது பாரிய நிதி வீண்விரயத்தை தவிர்த்து நாட்டை சிக்கனமாக நிர்வகிப்பதற்கு வழிவகுத்தாலும் பொதுத் தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்வரை அரசாங்கத்திற்கு கடும் சவாலாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
முழு நாட்டையும் ஜனாதிபதியும் பிரதமரும் மற்றொரு அமைச்சரும் இணைந்து நிர்வகிப்பது என்பது இலகுவான காரியமல்ல. சில தீர்மானங்களில் அனுபவமின்மையும் அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பின்மையும் புலப்படுகின்றன.
இக் காலப் பகுதியில் நிச்சயமாக நிர்வாக நெருக்கடிகள் தோற்றம் பெறுவது இயல்பே. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் சில தீர்மானங்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் வரலாற்றில் முதன்முறையான ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அதுவும் பாராளுமன்ற அதிகாரம் இதுவரை சரிவர அவர்களின் கைகளுக்கு கிடைக்காத நிலையில் நாட்டை சரிவர நிர்வகிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
இருந்த போதிலும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி நாட்டில் ஸ்திரமின்மையைத் தோற்றுவிக்க சில சக்திகள் முயற்சிக்கின்றனவா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.
குறிப்பாக அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படலாம் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் அதனைத் தொடர்ந்து சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பயண ஆலோசனைகளும் இந்த சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளன. நாட்டின் இயல்பு நிலையை சீர்குலைத்து ஸ்திரமின்மையைத் தோற்றுவிப்பதன் மூலம் தமக்கு விருப்பமானவர்களை மீண்டும் ஆட்சிக் கதிரைக்கு கொண்டுவர இந்த சக்திகள் முனைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவது போல் மக்களால் நிராகரிக்கப்பட்ட சில முன்னாள் அரசியல்வாதிகள் மீண்டும் நாட்டை தாம் பொறுப்பேற்க தயாராகவிருப்பதாக சில சமிக்ஞைகளை வெளியிட ஆரம்பித்துள்ளனர். இந்த நகர்வுகள் நிச்சயம் நாட்டை மீண்டும் பாதாளத்தில் தள்ளவே வழிவகுக்கும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப் பெறும் பெறுபேறுகளின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவரது ஆட்சியில் தேசத்தின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதனை பாராளுமன்றத்தின் ஊடாகவே எதிர்கொள்ள வேண்டும். மாறாக வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ ஸ்திரமின்மையைத் தோற்றுவிக்கவோ எவரும் முனையக் கூடாது.
குறுக்கு வழிகளில் ஆட்சிக்கு வருவதற்கு கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் சிலர் எடுத்த முயற்சிகள் நாட்டை எந்தளவு தூரம் படுகுழியில் தள்ளின என்பதை நாம் அனுபவ ரீதியாக கண்டுள்ளோம்.
இந்நிலையில் அரசியல் காய்நகர்த்தல் என்ற பெயரில் பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் நாட்டின் எதிர்காலத்தில் விளையாட முனைவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சி அமைதியான முறையில் அடுத்த தேர்தல் வரை தொடர இடமளிப்பதே ஜனநாயகமும் மக்கள் ஆணையை மதிக்கின்ற செயலுமாகும். இதனை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.- Vidivelli