இந்தோனேஷியாவில் புதிதாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் உலகளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய கடற்பரப்புக்கு அண்மையில் உள்ள அனக் கிராகாடோ எரிமலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக வெடித்ததை தொடர்ந்து இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை இரவு சுனாமி ஏற்பட்டுள்ளது.
சுனாமி கடல் அலைகள் கரையைக் கடந்து 20 மீற்றர் உள் நுழைந்து சுன்டா நீரிணையில் இருபுறங்களையும் தாக்கியதன் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள், உணவகங்கள் என்பன அள்ளுண்டு சென்றன. இந்த அனர்த்தத்தினால் குறைந்து 430 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 159 பேர் காணாமல் போயுள்ள அதேவேளை, 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த அனர்த்தத்தின் போது கடலோர விடுதிகள், ஹோட்டல்கள், படகுகள், வாகனங்கள் உட்பட பல்வேறு சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர். இந்தோனேஷிய ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதோடு நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஆணையிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் முகாம்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், ஆடைகள் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜனவரி நான்காம் திகதி வரை கடலோரப் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் இந்த வருடத்தில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களுள் இதுவும் ஒன்றாகும். கட்டடங்களுக்குள்ளும் இடிபாடுகளுக்குள்ளும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும், காணாமல் போனோரை தேடும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சுமார் 260 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தோனேஷியா தொடர்ச்சியாக பூமி அதிர்ச்சி, சுனாமி போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் சுனாமி அனர்த்தம் பூகோளவியலாளர்களால் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி ஏற்பட்டுள்ளது. பல வாரங்களாக அனக் கிராகாடோ எரிமலை வெடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போதும் தொடர்ச்சியாக எரிமலைக் குழம்புகள் வெளியாகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுனாமியினால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு சுனாமி அனர்த்தத்திற்கான வாய்ப்பும் காணப்படுவதாக நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அருகாமையில் அமைந்துள்ள கரகட்டாஉ எரிமலையிலிருந்து கடந்த பல வருடங்களுக்கு முன்னர் உருவான அனக் கரகட்டாஉ என்ற எரிமலைத் தீவில் ஏற்பட்ட வெடிப்பினால் கடலின் கீழே ஏற்பட்ட மண்சரிவே சுனாமிக்கு காரணம் என இந்தோனேஷியாவின் வானிலை , காலநிலை மற்றும் புவிப் பௌதீகவியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி காரணமாகவும் கடல் அலைகள் உருவாகி இருக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அனர்த்தம் காரணமாக உஜுங் குலொன் தேசியப் பூங்கா மிகப் பிரபலம் வாய்ந்த கடற்கரைப் பிரதேசங்கள் அமையப்பெற்ற ஜாவாவிலுள்ள பண்டென் மாகாணத்தின் பண்டெலாங் பிராந்தியம் ஆகியன மிகவும் மோசமான பாதிப்புக்களுக்கு இலக்கானதாக அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது. பண்டெலாங் பிராந்தியத்தில் மாத்திரம் இறந்தோரின் எண்ணிக்கை 33 ஆகும்.
தெற்கு சுமாத்ராவில் அமைந்துள்ள பந்தர் லம்பங் நகரத்தில் நூற்றுக் கணக்கான பிரதேசவாசிகள் ஆளுநர் அலுவலகத்தில் தஞ்சமடைந் துள்ளனர். சுனாமி அலைகள் சுமார் மூன்று மீற்றர் உயரமாகக் காணப்பட்டதாக பண்டெலாங் பிரதேச வாசியான ஆலிப் தெரிவித்தார். மெட்ரோ தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்த அவர் ஏராளமானோர் காணமல்போயுள்ள தமது உறவுகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சேதமடைந்த வீடுகளின் இடிபாடுகள் தலைகீழாகப் புரண்டிருந்த கார்கள் மற்றும் விழுந்த மரங்கள் போன்றவற்றால் வீதிகள் தடைப்பட்டிருப்பதை தொலைக்காட்சியின் காணொலிகள் காண்பித்தன. உள்ளூர் இசைக்குழு வொன்று இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது சுனாமி தாக்கியதன் காரணமாக இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதோடு ஏனையோர் காணாமல் போயுள்ளனர்.
ஜனவரி 04 ஆம் திகதி வரை உயர்ந்த கடல் அலைகள் தோன்றும் என்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதால் பிரதேசவாசிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் சுண்டா நீரிணைக் கரையோரப் பிரதேசங்களிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுண்டா நீரிணையினை சூழவுள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இருக்க வேண்டாம். அங்கிருந்து அப்புறப் படுத்தப் பட்டவர்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டாமென இந்தோனேஷியாவின் வானிலை காலநிலை மற்றும் புவிப் பௌதிகவியல் நிறுவனத்தைச் சேர்ந்த றஹ்மத் ட்ரையோனோ தெரிவித்திருந்தார்.
நோர்வே நாட்டவரான ஒயிஸ்டின் லூண்ட் அண்டர்சன் எரிமைலையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது அவரை நோக்கி பாரிய அலையொன்று வந்து மோதியதை உணர்ந்து ஓட ஆரம்பித்தார்.
‘அடுத்த அலை நான் தங்கியிருந்த ஹோட்டலினுள் நுழைந்து அதற்கு பின்புறமாக நின்றிருந்த கார்களைப் புரட்டியதோடு வீதியினையும் தகர்த்தது. ஒருவாறு நானும் எனது குடும்பத்தினரும் காட்டுவழிகள் மூலமாகவும் கிராமங்கள் ஊடாகவும் ஓடி உயரமான இடத்தினை அடைந்தோம். எங்கள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உள்ளூர் மக்களே எங்களை தற்போது பாரமரித்து வருகின்றனர்” என அவர் தெரிவித்தார்.
‘நாம் தற்போது அனர்த்தம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகின்றோம் பாதிக்கப்பட்டோர் மற்றும் சேதங்கள் தொடர்பான எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன” என அனர்த்த முன்னாயத்த முகவரகம் தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தையும் ஜாவா கடலையும் இணைக்கும் சுண்டா நீரிணையில் அமைந்துள்ள அனக் கரகட்டாஉ எரிமலை வெடித்து 24 நிமிடங்களின் பின்னர் சுனாமி ஏற்பட்டுள்ளது என இந்தோனேஷியாவின் வானிலை காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து தென்மேற்கே 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள 205 மீற்றர் உயரமான எரிமலை கடந்த ஜூன் மாதம் தொடக்கம் குழம்பினை வெளியேற்ற ஆரம்பித்தது. கடந்த ஜூலை மாதம் குறித்த எரிமலையிலிருந்து இரண்டு கிலோமீற்றர் பகுதியை யாரும் செல்லக்கூடாத பிரதேசமாக அதிகாரிகள் அறிவித்தனர்.
பாரதூரமான சேதத்திற்குள்ளான 430 வீடுகள் ஒன்பது ஹோட்டல்கள் மற்றும் மிக மோசமாக சேதமடைந்த வள்ளங்கள் என்பன பௌதிக பாதிப்புக்களாகக் காணப்படுகின்றன. நீர் நிறைந்துள்ள வீதிகளும் தலைகீழாகப் புரட்டப்பட்ட வாகனங்களையும் காண்பிக்கும் காணொலிகள் அனர்த்த முகாமைத்துவ முகவரகத் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் பொனேயேவுக்கு கிழக்கே அமைந்துள்ள சுலாவெசி தீவின் பலூ நகரத்தை பூகம்பமும் சுனாமியும் தாக்கியதில் 2500 இற்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli