எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் அவ்வப்போது, பலராலும் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த திங்களன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை குழு ஒன்றின் அறிக்கை எனக் கூறி சில விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து இவ்விடயம் சமூகத்தின் மத்தியில் இரு வேறு கருத்துக்களின் கீழ் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முதலில் கிடைத்த புலனாய்வுத் தகவல், அது தொடர்பில் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனும் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி யஜயகி டி அல்விஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மட்டக்களப்பு -வவுணதீவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் புலிகள் அமைப்பு தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபையின் வெளிக்கொணர்வு குறித்தும் இந்த குழுவினால் விசாரணை செய்யப்பட்டன.
இந்த நிலையில் இக்குழுவின் அறிக்கை கடந்த 2024 செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இப்போது இக்குழுவின் அறிக்கை என கூறி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள உதய கம்மன்பில, அவ்வறிக்கையின் 43 ஆவது பக்கத்தை மேற்கோள்காட்டி, முன்னாள் சி.ஐ.டி. பிரதானியும் தற்போதைய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.
குறிப்பாக ரவி செனவிரத்ன தாக்குதலை தடுக்காமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர் எனவும், அவரை உடனடியாக பதவி விலக்க வேண்டும் எனவும் ஜயகி டி அல்விஸின் அறிக்கையை மையபப்டுத்தி உதய கம்மன்பில விடயங்களை முன் வைத்து வருவதுடன், ஷானி அபேசேகரவின் மீள் இணைப்பையும் அவர் விமர்சித்துள்ளார்.
உண்மையில் நீதிபதி ஜயகி டி அல்விஸ் குழுவின் அறிக்கையில், கம்மன்பில கூறுவதை போல ரவி செனவிரத்ன மீது குற்றவியல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளதாக கருதி ( உத்தியோகபூர்வமாக அவ்வறிக்கை வெளியிடப்படாமையால் இவ்வெடுகோள் எடுக்கப்படுகின்றது) அக்குற்றட்சாட்டுக்கள் தொடர்பில் பார்க்கலாம்.
அதாவது 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி, அரச உளவுச் சேவை பிரதானி நிலந்த ஜயவர்தன தேசிய உளவுச் சேவை பிரதானி சிசிர மெண்டிஸுக்கு, அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித்துக்கு ஒரு சஹ்ரான் கும்பலின் தாக்குதல் குறித்து எழுத்து மூலம் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அந்த கடிதத்தை சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக அப்போது இருந்த ரவி செனவிரத்னவுக்கும் அவர் பிரதி செய்திருந்தார்.
இந்த உளவுத் தகவலை, ரவி செனவிரத்ன கணக்கில் கொள்ளவில்லை, குண்டு வெடிக்கும் வரை அந்த தகவல் அவர் மேசையில் அப்படியே கிடந்தது என கூறி, அவரும் தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற வாதத்தை கம்மன்பில, அல்விஸ் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி கொண்டு வருகின்றார். எனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த விசாரணை செய்யும் நிறுவனத்துக்கு பொறுப்பாக ரவி செனவிரத்ன செயற்படுவது விசாரணைகளை பாதிக்கும் என்பது கம்மன்பிலவின் கூற்றாகும்.
உண்மையில், இந்த விடயம் ஜயகி அல்விஸ் குழு புதிய விடயமாக பார்த்திருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரித்த பாராளுமன்ற தெரிவுக் குழு, நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஆணைக் குழு, உயர் நீதிமன்றின் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் என பல இடங்களில் விவாதிக்கப்பட்ட விடயமே இவ்விடயமாகும்.
அவரில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் படி, 2019 ஏப்ரல் 8 ஆம் திகதி, சர்வதேச பொலிஸாரின் மாநாட்டுக்காக ரவி செனவிரத்ன இலங்கையில் இருந்து பிரான்ஸின் லியோன் நகருக்கு சென்றுள்ளார். இந்த விடயம் அரச உளவுச் சேவை பிரதானி நிலந்தவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கையில் ரவி செனவிரத்னவின் பெயருக்கு ‘ அதி இரகசியமானது’ என குறிப்பிட்டு இக்கடிதம் பிரதி செய்யப்பட்டுள்ளது.
ஒருவருடைய பெயருக்கு நேரடியாக இத்தகைய கடிதங்கள் வரும் போது பதில் கடமைகளை முன்னெடுப்போர் அவற்றை பார்க்கமாட்டார்கள். இதுவே அரச சேவையில் உள்ள நடைமுறையாகும்.
அப்படி இருக்கையில் நிலந்த ஜயவர்தன, ரவி செனவிரத்ன இல்லை என தெரிந்தும் அவர் பெயருக்கு கடிதத்தை பிரதியிட்டது சந்தேகங்களை தோற்றுவிக்கின்றது.
இது ஒரு புறம் இருக்க, சி.ஐ.டி.யின் விடயப் பரப்பு பிரகாரம், பொலிஸ் மா அதிபரால் உத்தரவிடாது ஒரு விடயம் தொடர்பில் விசாரணை செய்ய முடியாது. அரச உளவுச் சேவை பிரதானி ஒரு கடிதத்தை பிரதி செய்தமைக்காக தனியாக விசாரணைகளை, பொலிஸ் மா அதிபர் கூறாது சி.ஐ.டி.யால் ஆரம்பிக்க முடியாது.
எனினும், அப்போதும் இந்த உளவுத் தகவல் பயன்பட முடியுமான இரு விசாரணைகள் சி.ஐ.டி. வசம் இருந்தன. ஒன்று மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம். மற்றையது வவுணதீவு பொலிசாரின் கொலை.
இந் நிலையில் 13 ஆம் திகதி பிரான்ஸிலிருந்து நாடு திரும்பும் ரவி செனவிரத்ன, 14, 15 ஆம் திகதிகள் விடுமுறை நாட்கள் என்பதால் அதன் பின்னர் 16 ஆம் திகதி அலுவலகம் சென்றுள்ளார். இதன்போதே 9 ஆம் திகதி நிலந்த ஜயவர்தன பிரதியிட்ட கடிதம் அவருக்கு கிடைத்துள்ளது.
எனினும் அக்கடிதத்தை அவர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு வெடிப்பின் பின்னரேயே முன்கூட்டிய திகதியிட்டு தனக்கு கீழ் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியதாக கம்மன்பில, அல்விஸ் அறிக்கையை வைத்து சந்தேகம் எழுப்புகின்றார்.
எனினும் இவ்விடயம் பல கட்டங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக ரவி செனவிரத்ன 2019 ஏப்ரல் 16 ஆம் திகதி இது தொடர்பில் கடிதத்தை தனக்கு கீழ் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு குறிப்பிட்டு அனுப்பியுள்ளதுடன், உரிய அதிகாரிகளுக்கு தொலைபேசியில் அழைத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளை துரிதப்படுத்தவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் நடந்த குற்றவியல் விசாரணையில், ரவி செனவிரத்னவின் அலுவலகத்தில் அப்போது சேவையாற்றிய பிரியங்கா சுதர்ஷனி (8326) தனக்கு 16 ஆம் திகதியே, ரவி செனவிரத்ன குறித்த கடிதத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கையளிக்க அறிவுறுத்தியதையும், தான் விடுமுறையில் செல்லும் அவசரத்தில் அதனை கையளிக்காது சென்று, விடுமுறை ரத்தான பின்னர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அலுவலகம் வந்து அதனை கையளித்ததாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே, தாக்குதலை தடுக்காமை தொடர்பில் உயர் நீதிமன்றமோ, ஆணைக் குழுக்களோ ரவி செனவிரத்னவை பொறுப்புக் கூற வேண்டியவராக காணவில்லை.
ஜயகி டி அல்விஸ் குழுவானது ரவியை பொறுப்புக் கூற வேண்டியவராக பார்ப்பது ஏன் என சற்று ஆழமாக பார்க்க வேண்டும்.
ஜயகி டி அல்விஸ், தற்போதைய பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பணிப்பாளரின் உறவினர் என கூறப்படுகின்றது. பயங்கரவாத சம்பவம் ஒன்று குறித்த விசாரணைக்கு அவ்விசாரணைப் பிரிவின் உறவினர் ஒருவரை நியமித்தமை சில முரண்பாட்டு நிலமைகளை ஏற்படுத்தும்,
அடுத்து, ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகிய இருவரை தேர்தலுக்கு முன்னர் ரணில் தரப்பும், சஜித் தரப்பும் தம் பக்கம் ஈர்க்க, பதவி வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து அழைத்தும் அவர்கள் செல்லாது தேசிய மக்கள் சக்தி முகாமில் அவர்கள் இணைந்தனர். இதனை தொடர்ந்தே இந்த ஜயகி அல்விஸ் ஆணைக் குழு நியமிக்கப்பட்டது.
எனவே, இக்குழு ரவி செனவிரத்னவை இலக்கு வைத்தது என ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
எது எப்படியோ, கம்மன்பில புதிய வெளிப்படுத்தலாக முன் வைத்த விடயம் ஒன்றும் புதிய விடயமல்ல. ஏற்கனவே பல இடங்களில் சான்றுகள் ஊடாக ஆராயப்பட்டு உண்மை நிலை வெளிப்படுத்தப்பட்ட விடயமே அது. அவ்வாறிருக்கையில் மீண்டுமொருமுறை அதனை தூக்கிப் பிடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளே பாரிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.- Vidivelli