ஆணைக்குழுவில் யுத்தக் குற்ற விவகாரங்களை கையாள்வதில் அரசாங்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் அறிக்கை
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து இலங்கை, உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டெய்லி மிரர் பத்திரிகையில் கடந்த வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட பேட்டியில், ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெட்டேகொட வழங்கிய ஆலோசனையை அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நாட்டின் ஆயுதப் படைகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
“யுத்தக்குற்றங்கள் உள்ளூரில் விசாரிக்கப்படாவிட்டால் அரசியல் தலைவர்கள் கூட பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று அநுர மெட்டேகொட கூறியிருந்தார். எனது பார்வையில், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமைச் சட்டங்களை நிலைநிறுத்தத் தவறியமைக்காக புலனாய்வாளர்கள், வழக்குரைஞர்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கூட சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், வேறு வகையான சட்ட நெருக்குதல்களுக்கும் ஆளாக நேரிடலாம்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கு, வெளியுறவு அமைச்சுக்கு புதிய “போக்கை மாற்றும்” வழிகாட்டுதல்களை வழங்க நியாயமான நேரம் இருந்திருக்காது என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இதனால் 11அக்டோபர் 2024 அன்று முடிவடைந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (யு.என்.எச்.ஆர்.சி) அமர்வுகளில் இந்த விடயத்தில் முன்னாள் அரசாங்கங்களின் கொள்கைகளே தொடர்ந்தன. அரசாங்கத்துக்கு, அறிவுறுத்தப்பட்டபடி, போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளில் 14/11 பொதுத் தேர்தல்கள் முடிவுற்றதோடு வெளிப்புற தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்த்து, உள்ளக விசாரணைகளை தெரிவு செய்ய வேண்டும்.
ஆயுதப்படைகளுக்கு எதிராக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து உண்மையான உள்நாட்டு விசாரணை மற்றும் சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வது என்பன நாட்டிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து ஆயுதப்படைகளை விடுவிக்க உதவும். எவரேனும் குற்றம் புரிந்தவர்களாக காணப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அது விடயத்தில் ஒரு முடிவுக்கு வரும், இல்லையேல் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான சிறப்பு பொறிமுறையை ஸ்தாபித்தல் என்பது மிகவும் பாரதூரமான விளைவுளை ஏற்படுத்தும். இந்தப் பொறிமுறையானது ஏற்கனவே இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையை கண்காணித்தல், மனித உரிமைகள் நிலைமைகள் பற்றிய தகவல்களை சேகரித்தல் மற்றும் அறிக்கை இடல் ஆகிய நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஜெனீவா அமர்வுகளில், மனித உரிமை ஆணைக்குழு ஆதாரங்களை சேகரிப்பதற்கான கால அவகாசத்தை மட்டும் நீடிக்கவில்லை. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரங்களை சேகரிக்கும் ஆணைக்குழுவின் “ஆற்றலை” மீள்வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானம் 51/1 ஐ முற்றாக நிராகரிப்பதற்குப் பதிலாக, அநுர மெட்டேகொட பரிந்துரைத்த, உள்நாட்டு விசாரணைகள் மற்றும் வழக்குகளை தொடுப்பது நிச்சயமாக தேசிய நலனுக்கு வழியமைப்பதாக இருக்கும். அதேவேளை சர்வதேச அரங்குகளில் போர்க் குற்றம் பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் குழுவில் உள்ள நாடுகள் மத்தியில் சக்திவாய்ந்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய முக்கிய நாடுகள் உள்ளடங்கியுள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய உண்மையாகும். மிக முக்கியமாக எமது பொருளாதார அவலநிலையை சமாளிக்க, மேற்கத்திய கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச நிதி நிறுவனங்களுடன் நாம் ஒத்துழைத்து பணியாற்ற வேண்டியும் உள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெட்டேகொட முன்னாள் யூகோஸ்லாவியாவில்1990களில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ஐ.சி.சி) விடயங்களில் ஜெனீவாவில் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் பணியாற்றியுள்ளார். அவர் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இலங்கையின் சட்ட மா அதிபர் திணைக்களத்திலும் பணியாற்றியுள்ளார். அவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ளார். இருப்பினும் அவரது கருத்துக்கள் அவரது தனிப்பட்ட நிலையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் ரோம் சாசனத்தின் தரப்பினர்களாக இல்லாவிட்டாலும், போர்க்குற்றங்களுக்காக இலங்கை அரசியல் தலைவர்கள் மீது மனித உரிமை ஆணையகம் வழக்குத் தொடரலாம் என்ற விடயத்தை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மனித உரிமை ஆணைக் குழுவின் வழக்குதொடரல் என்பது, வழக்கு தொடரல் மற்றும் கைதுகளுக்கு மேலதிகமாக, அது வழக்குத் தொடரத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நாட்டிலும் திட்டமிடப்பட்ட ‘மேலதிக பிராந்திய அதிகார வரம்புகளின் கீழ்’ கைது மற்றும் வழக்குத் தொடரப்படுவதற்கு போர்க்குற்றங்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஏனைய அனைத்து வழக்குகளும் தொடர்பான சான்றுகள் சேகரிக்கப்படும். இலங்கை அரசியலமைப்பு ஏற்பாட்டு விதிகளின் படியும் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையிலும் மேலும் நாட்டின் மனித உரிமை சட்டங்களின் கீழும் வழக்கை தொடர தீர்மானிக்கும் நாட்டில் இது இடம்பெறலாம்.
எனவே போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் தனது போக்கை மாற்ற வேண்டும். யுத்தக் குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைகள் என்பது போர்க்குற்றங்களை முற்றாக ஒப்புக்கொள்வது என்று அர்த்தமல்ல!
பலஸ்தீனத்தில் இனப்படுகொலை மற்றும் இனவெறி போன்ற மிகவும் கடுமையான குற்றங்களுக்காக இஸ்ரேல் மீது வழக்குத் தொடரப்படவில்லையே என்று அந்த இடத்தில் கூச்சலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை!- Vidivelli