ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மீதான தடையை சவாலுக்கு உட்படுத்திய மனு- முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பிரதிவாதியாக பெயரிட நீதிமன்றம் அனுமதி
(எப்.அய்னா)
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தனக்கு எதிரான தடையை எதிர்த்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பெயரிட உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 11 முஸ்லிம் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதிகளுக்கமைய குறிப்பிட்ட 11 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவ்வமைப்புக்கள் பல உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்த நிலையில், பின்னர் சில அமைப்புக்கல் மட்டும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
எனினும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மீதான தடை தொடர்கிறது. அதன்படி தம்மீதான தடையை ஆட்சேபித்து ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தாக்கல் செய்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ மற்றும் நீதியரசர் மஹிந்த சமயவர்தன ஆகியோர் உள்ளடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர்களுக்காக சட்டத்தரணி சனேஷ் திஸாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணிகளான எம்.சி.எம்.முனீர், சல்மான் ரியால், பாரிஸ் சாலி, ரிஸ்வான் உவைஸ், கயானி பிரதீபா, ஷில்பா ரவிஹன்சி, ஹுஸ்னா முஸம்மில் ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் ஆஜராகி வாதிட்டார்.
முதலில் குறித்த மனுவில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பெயரிட அவர் முன் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதற்கு அனுமதியளித்த நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 2024 டிசம்பர் 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.
இதற்கு முன்னர் இம்மனுவில் விஷேட வாதங்களை முன் வைத்திருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ்.எம்.) மீது விதிக்கப்பட்டுள்ள தடை சட்டத்துக்கு முரணானது எனவும், அப்பிரிவின் கீழ் அமைப்பொன்றினை தடை செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தெரிவித்திருந்தார்.
“அமைப்புகளை” தடை செய்யும் அதிகாரத்தை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பாராளுமன்றம் தெளிவாக ரத்து செய்துள்ளது. சட்டத்தின் 30வது பிரிவின் மூலம் தடைசெய்யும் அதிகாரத்தை பாராளுமன்றம் நீக்கியதைக் கருத்தில் கொண்டு, பிரிவு 27இல் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் அப்போதைய குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி விதிமுறைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொள்கைகள் மற்றும் விதிகளுக்கு முரணானது.
எந்தவொரு அதிகாரமும் இன்றி இந்த ஒழுங்குமுறைகளை அமுல்படுத்தும் போது, சட்டமா அதிபரை அப்போதைய ஜனாதிபதி கலந்தாலோசிக்காமல் இருந்திருக்கலாம். தற்போது அரசியலமைப்பின் 6வது திருத்தத்தின் கீழ் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 157ஆ உறுப்புரை ஊடாக மட்டுமே அமைப்புகளை தடை செய்ய முடியும்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்பது 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பிரச்சனையும் இன்றி செயல்படும் மாணவர் அமைப்பாகும். முக்கியமாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு இஸ்லாமிய சூழலில் இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது. ஏப்ரல் 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் 2021 இல் இந்த தவறான தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த அமைப்பு தனது தடை விதிக்கப்பட்டது.
அதன்பிறகு அந்த அமைப்பு தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளது. இது சமூகத்திற்கு சேவை செய்வதற்கான மாணவர் அமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுறுவதுடன் கல்வியை தொடரும் முஸ்லிம் மாணவர்களைப் பாதிக்கிறது. என தெரிவித்திருந்த்தார்.
இம்மனு தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டவாதி இந்துனில் புஞ்சிஹேவா ஆஜரானார்.- Vidivelli