இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் : கரையோரத்திலிருந்து வெளியேறுக
இஸ்ரேலிய பிரஜைகளுக்கு அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் உத்தரவு
(எப்.அய்னா)
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தனது நாட்டு மக்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நேற்று புதன்கிழமை விஷேட அறிவித்தலை விடுத்துள்ளது.
“சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடற்கரைகளை மையமாகக் கொண்ட பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய தற்போதைய நிலவரம்” எனும் தலைப்பில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அறுகம்பே வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரைகள் தொடர்பான குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது .
எவ்வாறாயினும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை அச்சுறுத்தலின் தன்மை தொடர்பில் குறிப்பிட்டு எதுவும் குறிப்பிடப்படாத போதும் கரையோரம் தவிர்ந்த இலங்கையின் மற்ற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், பொது இடங்களில் சனத் திரளான இடங்களில் செல்வதை தவிர்ந்துகொள்ளுமாறும் அவ்வெச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு ஸ்தாபனம், இலங்கையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதுடன் நிலைமை தொடர்பிலான முன்னேற்றங்களை அவதானித்து வருவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli