அஷ்ரப் சமூகத்தின் உரிமைகளை வெல்லவே தனித்துவ கட்சியை ஆரம்பித்தார்

0 139

இலங்கை துறை­முக அதி­கார சபையின் முஸ்லிம் மஜ்லிஸினால் கடந்த 02.10.2024 அன்று கொழும்­பி­லுள்ள துறை­முக மஸ்ஜித் மண்­ட­பத்தில் நடத்­தப்­பட்ட மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் நினைவு தின நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு நினை­வுரை ஆற்­றிய தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய கற்கை அரபு மொழிப் பீடத்தின் முன்னாள் பீடா­தி­பதி, பேரா­சி­ரியர் மெள­லவி எம்.எஸ். எம். ஜலால்தீன் ஆற்­றிய நினை­வு­ரை­யி­லி­ருந்து….

எம் பெரு­மானார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். ‘மக்­க­ளுக்கு சேவை செய்­ப­வனே அவர்­களின் தலை­வ­னாவான்’ என்­றார்கள். மற்­றொரு அறிஞர் கூறு­கின்றார், Don’t follow where the path may lead. Go instead where there is no path and leave a trail’
‘உனக்கு வழி­காட்டிச் செல்லும் பாதையை தொட­ராதே. மாறாக பாதையே இல்­லாத வழியில் சென்று முயற்­சித்துப் பார்.’ (Ralph Waldo Emerson)
இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இவ்­வ­றி­ஞனின் கூற்­றையே தனது இலட்­சிய வேட்­கை­யாகக் கொண்டார். இலங்கை அர­சியல் வர­லாறு ஆரம்­பித்த காலம் ­முதல் இலங்கை முஸ்­லிம்­க­ளி­டையே தோன்­றிய ஆரம்­ப­கால அர­சி­யல்­வா­திகள் அனை­வரும் பெரும்­பான்மை இன கட்­சி­க­ளு­ட­னேயே ஒன்­றித்து செயல்­பட்­ட­துடன் அவர்­களால் வழங்­கப்­படும் சலு­கை­களில் பூரண திருப்­தி­ய­டைந்­த­துடன், தனது சமூ­கத்­தையும் ஏதோ ஒரு வகையில் திருப்­தி­ப்படுத்த முயன்­றனர். அதில் வெற்­றியும் பெற்­றனர். கடந்த எழு­பது வருட சுய நிர்­ணய அர­சியல் வர­லாறு இவ்­வாறே தொடர்ந்து கொண்­டி­ருந்த வேளையில் தான் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இத்­தகு கண்­மூ­டித்­த­ன­மான முஸ்லிம் அர­சியல் தலைமை­களின் போக்கை மாற்றி, முஸ்­லிம்­க­ளுக்­கென சொந்­த­மான அர­சியல் கட்­சியை உரு­வாக்க முன்­நின்­றனர்.

அர­சியல் தலை­மைக்­கேற்ற தோற்றம் துணிவு, வசீ­க­ரிக்­கப்­பட்ட குரல்­வளம், பல்­மொழி ஆளுமை போன்ற சகல குணாம்­சங்­களும் இயற்­கை­யா­கவே கொண்­டி­ருந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்­களின் இள­மைக்­காலம் குறிப்­பாக மாணவப் பருவம் அவரின் எதிர்­கால அர­சியல் ஈர்ப்­புக்கு கட்­டியம் கூறி நின்­றது.

அஷ்ரப் அவர்­களின் தந்தை கல்­முனைக்குடியைச் சேர்ந்த பிர­பல கிராம சேவ­க­ரா­க­ காணப்­பட்­ட­தோடு, அவர் சம்­மாந்­து­றையைச் சேர்ந்த பிர­ப­ல­மான குடும்பப் பெண்­ணான மதீனா உம்­மாவை திரு­மணம் செய்­தி­ருந்­தாலும் தான் செய்­கின்ற கிராம சேவகர் (விதானை) உத்­தி­யோகம் கார­ண­மாக தனது வதி­வி­ட­மாக கல்­முனைக் குடி­யையே தெரிவு செய்­தி­ருந்தார். மூன்று சகோ­த­ரி­க­ளுக்கு மத்­தியில் தனி ஒரு ஆண்­ம­க­னாக 1948ஆம் ஆண்டு பிறந்த அஷ்ரப் அவர்கள், தனது ஆரம்பக் கல்­வியை கல்­முனை அல் அஸ்ஹர் ஆண்கள் பாட­சா­லை­யிலும் பின்னர் உயர் கல்­வியை கல்­முனை உவெஸ்லி கல்­லூ­ரி­யிலும் தொடர்ந்தார்.

பாட­சா­லை­யி­லேயே பளிச்­சிடத் தொடங்­கினார்
அல் அஸ்ஹர் பாட­சா­லையில் மிகச் சிறிய வகுப்பில் கல்வி கற்றுக் கொண்­டி­ருந்த சிறுவன் அஷ்ரப் அவர்கள் தான் கதி­ரையை விட்டு எழும்­பிய போது தனது கதி­ரையில் நெருஞ்சி முள் ஒன்றை வைத்­த­தாக தனக்கு முன் ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்த சக மாணவன் ஒரு­வனால் குற்­றச்­சாட்டு வைக்­கப்­பட்­டது. அம்­மா­ண­வ­னுக்கு பின் ஆச­னத்­தி­லேயே சிறுவன் அஷ்ரப் அமர்ந்­தி­ருந்தார். வகுப்பு ஆசி­ரி­யரால் இவ்­வி­டயம் விசா­ரிக்­கப்­பட்டு குற்றம் நிரூ­பிக்­கப்­பட முயன்ற போது சிறுவன் அஷ்­ர­பி­டம்­ இது பற்றி விளக்கம் கேட்­கப்­பட்ட போது அஷ்ரப் அவர்கள் அம்­மா­ண­வ­னிடம் உன் கதி­ரையில் முள்­வைத்­ததை நீர் கண்­டீரா? எனக் கேட்ட போது அம்­மா­ண­வனும் எனது இரு கண்­க­ளாலும் கண்டேன். என்று ஒப்­பு­வித்தான். உன் கண்­களால் கண்டும் ஏன் நீர் கதி­ரையில் உட்­கார்ந்தாய்? என்ற அஷ்­ரபின் கேள்­வி­யோடு அக்­குற்­றச்­சாட்டு பொய்­யென்று நிரூ­பிக்­கப்­பட்­டது. இச்­சம்­பவம் அவரின் எதிர்­கால சட்­டத்­துறை ஆற்­ற­லுக்கு கட்­டியம் கூறி­யது.

பின்னர் உவெஸ்லி உயர்­தர பாட­சா­லையில் கல்­வி ­கற்­றுக்­கொண்­டி­ருந்த போது பாட­சாலை முடித்து வீட்­டுக்குச் செல்லும் வழியில் ஒரு விலை­யு­யர்ந்த கைக்­க­டி­கா­ரத்தை அஷ்ரப் அவர்­களும் அவரின் பாட­சாலை நண்­பரும் கண்­டெ­டுத்­த­னர். இதை என்ன செய்­வது? என இரு­வரும் மிக ஆழ­மாக யோசித்­துக்­கொண்­டி­ருந்த போது பாட­சாலை மாண­வ­னான (14 வயது) அஷ்ரப் அவர்கள் உட­ன­டி­யாக கல்­முனை பொலிஸ் உய­ர­தி­கா­ரியின் காரி­யா­ல­யத்­துக்கு சென்று தாம் கண்­டெ­டுத்­ததை அதி­கா­ரி­யிடம் ஒப்­ப­டைத்­து­விட்டு வீடு சென்றார்.

மறுநாள் பாட­சாலை சென்ற போது காலை நேர மாணவர் கூட்­டத்தில் பாட­சாலை அதிபர் அஷ்­ர­பையும் அவ­ரது நண்­ப­ரையும் முன்னால் அழைத்து பொலிஸ் அதி­காரி அவர்­களை பாராட்டி அனுப்­பிய கடி­தத்­தையும் வாசித்துக் காட்டி, மாண­வர்­க­ளுக்கு முன்னால் மிகவும் பாராட்­டினார்.

இச்­சம்­பவம் அஷ்ரப் அவர்­களின் சிறு­வ­ய­தி­லேயே அவர் வருத்திக் கொண்ட உண்மை நேர்மை துணிவு என்­ப­வற்­றிற்கு சான்­றாக அமைந்­தன. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தனது பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்து இலங்கை சட்டக் கல்­லூ­ரிக்கு மாண­வ­னாக அனு­ம­திக்­கப்­பட்டு, 1972 ஆம் ஆண்டில் கம்­ப­ளையைச் சேர்ந்த வைத்­தி­யத்­துறை மாணவி பேரியல் அவர்­களை திரு­மணம் செய்து தனது நிரந்­தர வசிப்­பி­ட­மாக கல்­மு­னை­யையே தெரிவு செய்து கொண்­டார்கள்.

இள­மையில் ஏற்­பட்ட எழுச்சி உணர்­வுகள்
மர்ஹூம் அஷ்ரப் இள­மை­யி­லி­ருந்தே தனது சமூ­கத்தைப் பற்­றியும், தனது பிர­தேச மக்­களின் பின்­ன­டை­வு­களை பற்­றியும் அறி­யவும் ஆய்வு செய்­யவும் முயன்­ற­துடன் அதற்­கான நிரந்­தரத் தீர்­வு­க­ளையும் சிந்­திக்கத் தொடங்­கினார். சமூகம் சார்ந்த கலந்­து­ரை­யா­டல்கள், நிறு­வ­னங்­களில் தொடர்ந்து பங்­கேற்­ற­துடன் அது பற்­றிய பூரண விழிப்­பு­ணர்வை தன்னுள் ஏற்­ப­டுத்திக் கொண்டார். இவற்றின் மூலம் தனது சமூகம் அர­சியல் ரீதி­யா­கவும், பிர­தேச எழுச்­சி­யிலும் அடைந்­துள்ள அதள பாதா­ளத்தை மிக விரி­வாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவ­ருக்குக் கிடைத்­தது.

இந்த அதல பாதாள வீழ்ச்­சி­யி­லி­ருந்து தனது சமூ­கத்­தையும், தான்­சார்ந்த பிர­தே­சத்­தையும் மீட்­டெ­டுப்­ப­தற்கு இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென தனித்­து­வ­மான அர­சியல் கட்சி அவ­சியம் என்ற பிரச்­சாரத்தை அர­சி­யல்­வா­திகள், சமூக ஆர்­வ­லர்கள், சமூ­கம்­சார்ந்த ஆய்­வா­ளர்கள், புத்­தி­ஜீ­விகள் குறிப்­பாக இளை­ஞர்கள் மத்­தியில் வேரூன்றச் செய்தார். அக்­க­ருத்­துக்கள் சமூ­கத்தில் பல்­வேறு தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் தனித்துவ அர­சியல் கட்­சியின் அவ­சி­யத்­தையும் உணர்த்­தி­யது.

பல்­வேறு முயற்­சி­களின் வெளிப்­பா­டாக 1980 செப்­டெம்பர் 21ஆம் திகதி காத்­தான்­கு­டியில் உள்­ளூ­ராட்சி மன்றத் தவி­சாளர் அஹமட் லெவ்வை ஹாஜியின் தலை­மையில் கலந்­து­ரை­யாடல் ஏற்­பாடு செய்­யப்­பட்டு ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்’ என்ற பெயரில் மர்ஹூம் அஷ்ரப் அவர்­களைத் தலை­வ­ராகக் கொண்டு கட்சி ஒன்று அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­பட்­டது. அஷ்ரப் இந்­நோக்­கத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு 1977ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லேயே முஸ்லிம் ஐக்­கிய விடு­தலை முன்­னணி என்ற மற்­றொரு கட்­சி­யுடன் இணைந்து தீவிர அர­சியல் செயற்­பாட்டில் ஈடு­பட்ட போதும் அவ­ரது எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு அக்­கட்சி முழு­மை­யாக ஈடு கொடுக்க முடி­ய­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி 1980இல் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­ட­போதும் அக்­கால சூழலில் இடம்­பெற்ற பல்­வேறு எதிர்­முனை நிகழ்­வு­க­ளினால் அஷ்­ரபின் அபி­லா­ஷை­க­ளுக்­கேற்ப முழு­மை­யாக செயற்­பட முடி­ய­வில்லை. ஒரு அர­சியல் கட்­சி­யாக தேர்தல் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­ட­வு­மில்லை. எவ்­வா­றெ­னினும் 1988 இல் இக்­கட்சி அர­சியல் கட்­சி­யாக பதிவு செய்­யப்­பட்டு, தனது இலக்கை நோக்கி வீறு­நடை போடத் தொடங்­கி­யது.

இக்­கால கட்டம் மர்ஹூம் அஷ்ரப் வாழ்க்­கையில் மட்­டு­மன்றி இலங்­கையில் முஸ்­லிம்கள் குறிப்­பாக வட­கி­ழக்கில் வாழ்ந்த முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் பல்­வேறு அகோர சம்­ப­வங்­களைப் பதிவு செய்து முஸ்­லிம்­க­ளையும் நாட்டு மக்­க­ளையும் நிலை குலையச் செய்­தி­ருந்த கால கட்­ட­மாகும். தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தனி நாட்டுக் கோரிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் வட கிழக்கில் மட்­டு­மன்றி, முழு இலங்கைத் தீவிலும் மிகத் தீவி­ர­மாக போரா­டிக்­கொண்­டி­ருந்த கால­கட்­ட­மது. தமது எதிரிகளை தேடித் தேடி கொலை செய்து கொண்டிருந்த காலம்.

கல்­மு­னையில் இருந்த தமிழ் மக்­க­ளுக்கு மத்­தியில் மிகவும் ஒன்­றித்து வாழ்ந்து கொண்­டி­ருந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்­க­ளுக்கும் பயங்­கர அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்ட போது வேறு வழி­யின்றி 1984ஆம் ஆண்டில் தனது குடும்­பத்­தோடு கொழும்­புக்கு ‘ஹிஜ்ரத்’ மேற்­கொண்டார். தனது அர­சியல் வாழ்­வையும் சட்­டத்­துறை தொழி­லையும் கொழும்­பி­லேயே தொடர்ந்து மேற்­கொண்டார். 1984 இல் சாய்ந்­த­ம­ருது மாளிகைக் காட்டில் புலி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்கள் மீதான படு­கொ­லையும், காரை­தீவு பொலிஸ் நிலையக் கிளை ஒன்று தாக்­கப்­பட்­டதும் கூட அஷ்­ரபின் வெறுத்­தொ­துக்­கிய பய­ணத்­துக்கு கார­ண­மாக அமைந்­தி­ருந்து.

1984 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகா­ணத்தின் ஏறாவூர் வாழைச்­சேனை சாய்ந்­த­ம­ருது, திரு­கோ­ண­மலை, மூதூர், கிண்­ணியா, புல்­மோட்டை, அக்­க­ரைப்­பற்று, பொத்­துவில், சம்­மாந்­துறை, முல்­லைத்­தீவு 13ஆம் கொலனி, காத்­தான்­குடி போன்ற பல பிர­தே­சங்­களில் வாழ்ந்த பல நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் சுடப்­பட்டும், வெட்­டியும், கடத்­தப்­பட்டும் தமது இன்­னு­யிர்­களை இழந்து கொண்­டி­ருந்­தார்கள். அவர்­களின் விவ­சாய நிலங்கள், தொழில் சாத­னங்கள் பறிக்­கப்­பட்­டன. அல்­லது அழிக்­கப்­பட்­டன. நாட்டில் பயங்­கர அரா­ஜக நிலை தலை­வி­ரித்­தா­டிய போது, இந்­திய நாட்டின் தலை­யீட்டை அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் வேண்டி நின்­றார்கள். இலங்­கையின் சமா­தா­னத்­தையும் ஸ்தீர தன்­மை­யையும் ஏற்­ப­டுத்தும் நோக்கும் இந்­திய அரசு இலங்­கைக்கு அனுப்­பிய ‘இந்­திய சமா­தானப் படை’ (Indian Peace Keeping Forces- IPKF) இலங்­கைக்கு காலடி வைத்­ததில் இருந்து இலங்­கையின் உள்­நாட்டுப் போரும், சமா­தான முயற்­சி­களும் வேறு வடிவம் பெறத் தொடங்­கி­யது. இப்­ப­டையின் வருகை இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் பல்­வேறு பாதக நிலை­க­ளையே தோற்­று­வித்­தி­ருந்­தது. 1989 இல் இப்­படை இலங்­கையில் காலடி வைத்த போதும் 1990ஆம் ஆண்­டி­லேயே அப்­ப­டைக்கு எதி­ரான பல்­வேறு போராட்­டங்கள் இலங்­கையின் சகல இன குழுக்­க­ளி­டை­யேயும் தளிர் விடத் தொடங்­கி­யது. இலங்கை முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் இப்­ப­டையை உட­ன­டி­யாக வெளி­யேற்ற வேண்­டு­மென்ற கோஷமே முன்­னிலை பெற்­றி­ருந்­தது. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இப்­ப­டையின் வெளி­யேற்­றத்­தினால் இலங்கை முஸ்­லிம்­களின் பாது­காப்பில் ஏற்­படப் போகும் ஆபத்து நிலை பற்­றிய அச்ச நிலையில் எதிர்­மா­றான கருத்­தையே கொண்­டி­ருந்தார்.

அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­தன­வினால் கூட்­டப்­பட்ட சர்­வ­கட்சி மாநாட்டில் கலந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­யான அர­சியல் கட்சி ஒன்று காணப்­ப­டா­மையும் அஷ்­ரபின் முழுக் கவ­னத்­தையும் பெற்­றிந்­தது. தமிழ் அர­சியல் கட்­சிகள், விடு­தலை இயக்­கங்கள் பலவும் தோற்றம் பெற்று பயங்­க­ர­வாத நிகழ்ச்சி நிரலை அடிப்­படை கருப்­பொ­ரு­ளாகக் கொண்­டி­ருந்­ததால் முஸ்லிம் இளை­ஞர்கள் பலரும் ஆயுதப் போராட்­டத்தை விரும்­பு­ப­வர்­க­ளா­கவும் ஈர்க்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளா­கவும் காணப்­பட்­டமை அஷ்­ர­புக்கு மேலும் அச்ச உணர்வை ஏற்­ப­டுத்­தி­யது. இவற்­றுக்­கான விடை­யாக முஸ்லிம் காங்­கி­ரஸை மேலும் வளர்த்து வெகு­ஜனக் கட்­சி­யாக மாற்றும் பகீ­ரத முயற்­சியில் ஈடு­பட்டு 1989, 1994ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற தேர்­தல்­களில் தமது கட்சி சின்­னத்தில் தனித்து பெரும்­பான்­மையின கட்­சி­க­ளுடன் கூட்டுச் சேர்ந்­து போட்­டி­யிட்­டதன் மூலம் முறையே ஒன்று, இரண்டு பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்றுக் கொண்­டது. 1994இல் ஜனா­தி­ப­தி­யாக போட்­டி­யிட்ட சந்­தி­ரிக்கா அவர்கள் மர்ஹூம் அஷ்ரப் அவர்­க­ளோடு செய்து கொண்ட ஒப்­பந்­தத்தின் மூலம் அதி­கூ­டிய வாக்­கு­களைப் பெற்று ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­துடன், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் பெற்றி பெற்றார். இத்­தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் மொத்­த­மாக ஏழு பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்று சந்­தி­ரிக்­காவின் அர­சில் ஒரு அசைக்க முடி­யாத கட்­சி­யாக பரி­ண­மித்­தது. சந்­தி­ரிக்­காவின் அர­சியல் ஸ்திரத்­துக்கு அத்­தி­வா­ர­மிட்ட அஷ்ரப் அவர்­களின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கிய ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்­தையும் ஒலுவில் துறை­மு­கத்­தையும் நிறுவிக்கொள்ள பூரண ஒத்துழைப்பு வழங்கினார். ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்ட மிக செல்வாக்குள்ள அமைச்சுக்களான துறைமுகங்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சின் மூலமே துறைமுக அதிகார சபையில் சுமார் 2000 க்கு மேற்பட்ட முஸ்லிம் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டு, அவர்களது குடும்பங்களின் எழுச்சிக்கு வழிசமைக்கப்பட்டது. 1995 இல் உருவாக்கப்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழகம் சுமார் 225 ஏக்கரில் பூரண அந்தஸ்தும், சகல வசதிகளும் கொண்ட ஒரு தலைசிறந்த பல்கலைக்கழகமாகவும், ஆறு பீடங்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. மும்மொழியும் பேசும் நான்கு மத மாணவர்கள் சுமார் 20000 பேர் அளவில் இங்கு கல்வி கற்று வருகின்றார்கள்.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்று வெளியாகியுள்ளனர். இன்றுவரை சுமார் நாற்பது, பேராசிரியர்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் அஷ்ரபினால் குடும்ப வாழ்வில் பலன் பெற்ற நீங்கள் துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸை உருவாக்கி,அதன் மூலம் மர்ஹூம் அஷ்ரபை இன்று நினைவு கூருவது நீங்கள் அவருக்கு செய்யும் பெரும் கைமாறாகும். இதன் மூலம் உங்களின் வாழ்விலும் பல்வேறு உயர்வுகள் பெற ‘துஆ’ செய்கிறேன்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.