சபீர் மொஹமட்
கடந்த மாதம் மியன்மார், லாவோஸ், கம்போடியா தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய ஐந்து தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த 20 இளைஞர் யுவதிகளுடனான ஐந்து நாள் வதிவிட பயிற்சியொன்றுக்கு தாய்லாந்து சென்றிருந்தேன். அங்கே நாம் அனைவரும் தத்தமது நாடுகளில் குடிமக்கள் என்ற வகையில் முகங்கொடுத்து வருகின்ற சவால்கள் மற்றும் எமது நாட்டில் காணப்படுகின்ற அரசியல் பொருளாதார சமூக பிரச்சினைகள் குறித்து ஆழமாக உரையாடினோம்.
குறிப்பாக இலங்கை உட்பட இந்த ஐந்து நாடுகளும் வெவ்வேறு விதத்திலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். அந்த ஒவ்வொரு சமூக பிரச்சனையும் வெவ்வேறு விதத்தில் அங்கே வந்திருந்த இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எமது உரையாடல்களின் போது மியன்மாரைச் சேர்ந்த ஒரு ரோஹிங்ய சகோதரியும் பங்கு கொண்டிருந்தாள். கடந்த 10 ஆண்டுகளாக மியன்மார் நாட்டில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுள்ளன. குறிப்பாக ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு மியன்மாரிலே குடியுரிமை இல்லை. அதேபோல் அவர்களுக்கு வெளியிடங்களுக்கு நினைத்தது போல் செல்ல முடியாது. ஏதோ ஒரு தீவிரவாதிகள் போன்று தான் அவர்களை அந்த நாட்டின் தற்போதைய இராணுவம் பார்க்கின்றது. இதுபோன்ற பலவிதமான பாரபட்சமான கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள்.
கடந்த 2012 -ஆம் ஆண்டு ராக்கைன் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்ய முஸ்லிம்கள் பலவந்தமான முறையில் தமது வசிப்பிடங்களில் இருந்து விரட்டப்பட்டார்கள். பின் அவர்களுக்கு மிகவும் மோசமான எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற முகாம்களில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டு, மியன்மார் ராணுவம் ரோஹிங்யாக்களுக்கு எதிராக ஒரு கொடூரமான இன அழித்தொழிப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. ஆயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் இன்னும் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த கிராமங்கள் கொளுத்தப்பட்டன. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், 7 இலட்சம் ரோஹிங்யாக்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்குத் தப்பிச் சென்றனர். அவர்களில் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் அங்குதான் அகதிகளாக வாழ்கின்றார்கள். மியன்மார் அரசு ரோஹிங்யாக்களை நடத்திய விதம் தொடர்பாக, நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குறித்த விசாரணை ஒன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
என்னுடன் உரையாடிய ரோஹிங்ய சகோதரி கூறுகையில், சிறுவயதில் அவர்கள் றக்காயன் மாநிலத்தில் வாழும் போது கண் முன்னே அவர்களுடைய பள்ளிவாயில் எரிக்கப்பட்டுள்ளது. ‘வன்முறைகள் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் நாங்கள் வாழ்ந்த ஊரிலும் வன்முறை வெடித்தது. நாங்கள் தொழச் சென்ற பள்ளி எரிக்கப்பட்டது. என்னுடைய தந்தை தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் தக்பீர் முழங்கியவாறு வீதிகளிலே ஓடி ஒளிந்து கொண்டோம். இராணுவம் எங்களை பின் தொடர்ந்தார்கள். அல்லாஹ்வின் நாட்டத்தால் நானும் எனது குடும்பத்தினரும் அன்று உயிர் தப்பினோம். அதன் பின்னர் நாம் தலைநகருக்கு இடம் பெயர்ந்தோம்’ என கூறினார்.
ஆனால் இன்னும் அவர்களுடைய உறவினர்கள் பலர் வங்காளதேச மியான்மார் எல்லையில் உயிருக்காகப் போராடிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரே நாட்டில் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளக்கூட எங்களால் முடியாமல் உள்ளது. எந்த ஒரு சர்வதேச ஊடகமும் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதே இல்லை என, மிகவும் வருத்தத்துடன் கூறினார்.
இத்தனைக்கும் மத்தியில் மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மாத்திரமன்றி இன்னும் நூற்றுக்கணக்கான சிறு சிறு இனக்குழுக்களிடையே மோதல்கள் நாடு பூராகவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
மறுபுறம் இராணுவ ஆட்சி
பல தசாப்தங்களுக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு மியன்மாரில் இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மெது மெதுவாக சீர்திருத்தங்கள் அங்கே கொண்டுவரப்பட்டன. 2015 ஆம் ஆண்டு மியன்மாரிலே பொதுத்தேர்தல் நடைபெற்றது. அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி 2014/15 ஆம் ஆண்டு என்பது மியன்மாரின் மறுமலர்ச்சி காலம். 2015 நடைபெற்ற தேர்தலில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூ சீ தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதேவேளை அந்நாட்டின் மறுபுறம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள். இதனை பெரிதாக மியன்மார் அரசு கண்டு கொள்ளவே இல்லை. இந்த அத்தனை படுகொலைகளுக்குப் பின்னால் ஆங் சான் சூ சீ இருப்பதாக பலரும் குற்றம்சாட்டினார்கள்.
அதன் பின்னர் மீண்டும் 2020 ஆம் ஆண்டு அங்கே பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஆங் சான் சூ சீ தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி இத்தேர்தலிலும் வெற்றி பெற்றது. ஆனால் அவர்களால் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முடியவில்லை. மியன்மார் நாட்டின் இருண்ட தினம் 2021 பெப்ரவரி முதலாம் திகதி. இராணுவம் மீண்டும் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் முடிவுகள் செல்லாது என இராணுவம் அறிவித்ததுடன் ஓராண்டு அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
மியன்மார் நாட்டைச் சேர்ந்த நான் சந்தித்த அத்தனை பேரும் 2021 ஆம் ஆண்டு வரை வெவ்வேறு துறைகளில் அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் தமது பட்டப் படிப்பை கற்றுக் கொண்டிருந்தவர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் அத்தனை பேரும் தமது கல்வியை இடைநடுவே நிறுத்தியுள்ளார்கள். இலங்கையைச் சேர்ந்த நாங்கள் எம்முடைய பலம் பலவீனம் பற்றி குறிப்பிடும் போது “எமது நாட்டிலே காணப்படுகின்ற கருத்துச் சுதந்திரம், எம் மக்கள் செய்த போராட்டங்கள்” என்பன பற்றி உரையாடும் போது மியன்மாரைச் சேர்ந்த அனைவருடைய கண்களிலும் கண்ணீர் நிரம்பியதை கண்டோம். அவர்களுடைய பலம் பலவீனம் பற்றி கூறும்போது “நீங்கள் கூறுகின்ற ஆட்சி ஜனநாயகம் இவை அனைத்தும் எங்களுக்கு வெறும் கற்பனையே” என்றார்கள். பல கனவுகளுடனும் பொருளியல் சமூகவியல் என பல துறைகளிலும் கல்வியை ஆரம்பித்த இவர்களுடைய கனவு இறுதியில் வாழ்வதற்கு ஏதோ ஒரு தொழில் என மாறியுள்ளது.
லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளுடைய நிலைமையும் இதுதான். உறுதியான ஆட்சியாளர்கள் அங்கே இல்லை. தினமும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகள் அங்கே பறிக்கப்படுகின்றன. அடிப்படை வசதிகள் கூட அம்மக்களுக்கு இல்லை. சுதந்திரம், உரிமை என்றால் என்ன என்று கூட அவர்களுக்கு சரியாகத் தெரியாது. இலங்கையில் நாங்கள் கூறுகின்ற சுதந்திரம் உரிமை என்பன அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. லாவோஸ் நாட்டில் சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் இப்பொழுதும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அண்மையில் Mission News Network (MNN) என்ற அமைப்பின் அறிக்கையொன்றின்படி, கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் லாவோஸ் நாட்டில் மதக் குழுக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கவேண்டி அந்நாட்டு அதிகாரிகள் சீனாவின் மாதிரியைப் பின்பற்றுவதால், கிறிஸ்தவர்கள் பெரிதும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கிராமப்புறங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறும் இவ்வறிக்கையானது, லாவோஸில் உள்ள பல அதிகாரிகள் கிறிஸ்தவர்களை அச்சுறுத்துகின்றனர் என்றும், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் அவர்களுக்கான பணிகள் மறுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்திருந்தது.
ஒரு ஜனநாயக நாட்டிற்கு தேர்தல்கள் என்பது எந்த அளவு முக்கியம் என்பதை இந்த கதைகள் மற்றும் அங்கே வருகை தந்திருந்த இளைஞர் யுவதிகளுடைய அனுபவம் எமக்கு உணர்த்தியது. இலங்கையில் இன்னும் ஒரு சில வாரங்களில் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல்கள் என்பன எந்த அளவு முக்கியம் என்பதை மியன்மார் நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞர் யுவதிகளின் கதைகள் எமக்கு நன்கு உணர்த்தியது. ஓர் இருண்ட இடத்தில் திடீரென ஜனநாயக ஒளி தோன்றி சிறிது காலத்தில் மீண்டும் காரிருளில் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள்.- Vidivelli