புல்மோட்டையிலிருந்து
றிப்தி அலி
பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாயம் செய்து வருகின்ற காணிகளை ‘தொல்பொருள்’ என்ற பெயரில் சுவீகரிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக புல்மோட்டைப் பிரதேசத்தினைச் சேர்ந்த 38 வயதான ஜெய்னுலாப்தீன் புஹாரி தெரிவித்தார்.
“இதன் பின்னணியில் இப்பிரதேசத்தில் வசிக்கின்ற பனாமுரே திலகவங்க தேரர் செயற்படுகின்றார்” என அவர் குற்றஞ்சாட்டினார்.
எனது தாயாரிற்கு சொந்தமான ஐந்து ஏக்கர் காணியில் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றேன். இதற்காக அரசாங்கத்தினால் உரம் வழங்கப்பட்டுள்ளதுடன் விவசாயம் பாதிக்கப்பட்டமைக்காக 53 ஆயிரம் ரூபா நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளதாக புஹாரி குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தின் எல்லைப் பிரதேசமான புல்மோட்டையில் முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஹஸ்பர் ஏ. ஹலீமுடன் மேற்கொண்ட கள விஜயத்தின் போது இதனை நேரடியாகவே அவதானிக்க முடிந்தது.
குச்சவெளி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட இந்தப் புல்மோட்டை பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்றனர்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் எவரும் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தத் தீர்வினை பெற்றுத் தர முன்வரவில்லை என அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டனர். இதில் பிரதானமான ‘காணிப் பிரச்சினை’ தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றது.
நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து இவர்கள் தமது சொந்தப் பிரதேசங்களுக்கு மீளக்குடியேறியுள்ளனர்.
இந்த மக்களின் பிரதான ஜீவனோபாயமான விவசாயத்தினை முன்னெடுக்கின்ற சமயத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் நெருக்கடிகளை கடந்த பல வருடங்களாக எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்களுக்கு சொந்தமான காணிகளை ‘தொல்பொருள் காணி’ என்று தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்த முயற்சிக்கின்ற சந்தர்ப்பத்திலேயே பொதுமக்களுக்கும் இத்திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
இதன் பின்னணியில் அரிசிமலை ஆரணியத்தின் சேனாசனாதிபதி பனாமுரே திலகவங்ச தேரர் உள்ளதாக அப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இவ்வாறு ‘தொல்பொருள் காணி’ என்று அடையாளப்படுத்த முயற்சிக்கின்ற காணிகளில் ஒன்று தான் புஹாரி பராமரித்து வருகின்ற அவருடைய தாயரான பௌசியா உம்மாவின் பெயரிலுள்ள காணியாகும்.
இக்காணியை பயன்படுத்துவதற்கான பேர்மிற் உத்தரவுப் பத்திரம் 1967ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி பௌசியா உம்மாவின் தந்தையான தாவூது முஹம்மதிற்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அக்காணியின் உரிமையாளராக பௌசியா உம்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்காணிக்கான பதிவில் 1959ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை தனிநபர்களின் பெயர்களே காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. குறித்த காணியினை துப்புரவு செய்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதி பிரதேச செயலகத்தின் ஊடாக வன இலாகா திணைக்களத்திடம் பெறப்பட்டுள்ளது என புஹாரி கூறிகின்றார்.
அத்துடன் இக்காணி “தொல்பொருள் காணி அல்ல” என தொல்பொருள் திணைக்களத்தினால் குச்சவெளி பிரதேச செயலாளருக்கு கடந்த 2021 ஜனவரி மாதம் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த காணிக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து மண் அகழ்விற்கான அனுமதி புவியியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் புஹாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வன இலாகா திணைக்களத்தின் மனுவிற்கமைய குறித்த காணிக்குள் புஹாரி உள்ளிட்ட பலர் நுழைவதற்கு குச்சவெளி நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் புஹாரியினால் மேன் முறையீடு செய்யப்பட்டது. இதன்போது, 2021ஆம் திகதி ஜுலை 20ஆம் திகதி குச்சவெளி நீதவானினால் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 124 இன் கீழ் ஆக்கப்பட்ட கட்டளையானது குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால் வலுவிழந்துள்ளதாக மன்றில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் இந்த வருடத்திற்கான பெரும்போக விவசாய நடவடிக்கையினை புஹாரி ஆரம்பித்த போது ‘தொல்பொருள் காணி’ எனக் குறிப்பிடும் கல்லொன்று இவருடைய காணியில் போடப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் அவரினால் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறித்த காணியில் நெற் பயிர்ச் செய்கையினை ஆரம்பித்த போது பனாமுரே திலகவங்ச தேரரினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் விவசாய நடவடிக்கைக்கு இடையூறும் விளைவிக்கப்பட்டது.
இதற்கு எதிராகவும் புல்மோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இதன்போது, “என்னையும் தேரரையும் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டாம் பொலிஸார் உத்தரவிட்டனர்” என புஹாரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொலிஸாரின் உத்தரவினை மீறி சுமார் 82 ஏக்கர் காணியில் தற்போது தேரர் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளார் என அவர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்தும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை எனவும் புஹாரி கூறினார்.
இதேவேளை, புஹாரியினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற காணிக்கு அருகிலுள்ள காணியில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளான நகீப் மற்றும் சாதீக் ஆகிய இருவர் கடந்த 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் காணியில் நெற் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த குற்றச்சாட்டின் கீழ் இன்னும் சிலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பொன்மலைக் குடா கிராமத்திலுள்ள முஸ்லிம் மையவாடியில் ஜனாஸாவினை நல்லடக்கம் செய்வதற்கும் குறித்த தேரர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்
பொன்மலைக் குடா, சபா நகர் மற்றும் வீரந்தீவு ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கியதாக சபா ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் றிபாய் பள்ளிவாசல் ஆகியன காணப்படுகின்றன. இந்த மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவே இந்த மையாவடியில் காணப்படுகின்றது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
1811ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சுமார் ஆறு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த மையவாடியினைச் சுற்றி முஸ்லிம் மக்களே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த காணியில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யக்கூடாது என குறித்த தேரர் தெரிவித்து வருகின்றார். புல்மோட்டை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் இந்த விடயத்தில் தலையீட்டினை மேற்கொண்டது.
இதனால் தேரரின் எதிர்ப்பினையும் மீறி, பொலிஸாரின் அனுமதியுடன் குறித்த ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக தேரர் தற்போது புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, “தொல்பொருள் காணி என்ற பெயரில் எங்களுடைய காணிகளை பனாமுரே திலகவங்க தேரர் சுவீகரித்து வருகின்றார்” என பதவிய சிறிபுர பிரதேசத்தினைச் சேர்ந்த 53 வயதான ஜீ.ஜீ.எச். ஜயவீர தெரிவித்தார்
இங்குள்ள பிரதேச மக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் தெரியாமல் உயர் மட்டத்திலுள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி அவர்களின் அனுமதியுடனே இது மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சுவீகரிப்புக்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல்களும் உரிய திணைக்களங்களினால் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் இப்பிரதேச மக்களுடன் எந்தவித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என ஜயவீர குற்றஞ்சாட்டினார்.
யுத்த நிறைவிற்கு பின்னர் இப்பிரதேசத்திற்கு வந்த தேரர் பன்சலை அமைக்கும் போர்வையில் பொது மக்களின் காணிகளை கொள்ளையடித்து அவருக்கு தேவையானவர்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து பௌத்தத்தினை பாதுகாக்க வேண்டும் என்று இவர் எழுதியுள்ள புத்தகத்தின் ஊடாக பணம் சம்பாதித்து வருகின்றார். இதன் ஊடாக இப்பிரதேசத்திலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினையினை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் கூறினார்.
இதனால் இப்பிரதேசத்திலிருந்து குறித்த தேரரினை வெளியேற்ற வேண்டும். அத்துடன் இவருக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட வேண்டும் என ஜயவீர கோரிக்கை விடுத்தார்.
புல்மோட்டை பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் எழுதியதாக தெரிவித்த அவர், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இப்பிரதேசத்திலுள்ள காணிகளுக்கு 1800ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய உறுதி காணப்படுகின்றது. எனினும் அடாத்தாக இப் பிரதேசத்திலுள்ள 82 ஏக்கர் காணியினை குறித்த தேரர் அடாத்தாக பிடித்துள்ளார் என திரியாய் விவசாய சம்மேளத்தின் தலைவர் என். மாணிக்க நடராஜா தெரிவித்தார்.
“குறித்த காணிகளை தேரருக்கு விரும்பிய வெளிப் பிரதேசத்தவர்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார். இதனால் இப்பிரதேச மக்கள் கடுமையாக கஷ்டப்படுகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
சங்கத்திற்கும் காணி உரிமையாளர்களுக்கும் தெரியாமல் தேரர் பசளைகளை பெற்று வருகின்றார் எனவும் விவசாய சம்மேளத்தின் தலைவர் கூறினார்.
“குறிப்பிட்ட சில அரச உத்தியோகத்தர்கள் எங்களுக்கு அநீதி இழைத்துள்ளனர். இதற்கு அவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். காணி சுவீகரிப்பின் ஊடாக இன்னுமொரு யுத்தத்திற்கு இந்தத் தேரர் வழியமைக்கின்றார். இதன் காரணமாக இப்பிரதேசத்திலிருந்து குறித்த தேரரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப் பகுதியில் நியமிக்கப்பட்டது.
இந்த குழுவின் உறுப்பினராக அரிசிமலை ஆரணியத்தின் சேனாசனாதிபதி பனாமுரே திலகவங்ச தேரரும் உறுப்பினராவார். வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களின் மற்றும் தமன்கடுவ பிரதேசத்தின பிரதம சங்கநாயக்கவாகவும் இவர் செயற்படுவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த பனாமுரே திலகவங்ச தேரர், சட்ட ரீதியாகவே இக்காணிகளை விகாரைகளுக்காக பெற்றுள்ளேன் என்றார்.
“அரிசி மலைப் பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக சமயக் கடமையில் ஈடுபட்டு வருகின்றேன். இங்குள்ள சிலர் காணிக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களே எனக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்” என தேரர் குறிப்பிட்டார்.
தொல்பொருள் காணி என்ற அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே தனக்கு கீழுள்ள விகாரைகளுக்கு இக்காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
‘‘நான் ஒருபோதும் பலாத்காரமாக காணி பிடிக்கவில்லை. கிராம சேவகர், பிரதேச செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும் காணி ஆணையாளர் நாயகம் ஆகியோரின் ஊடாகவே இக்காணிகளை விகாரைகள் பெற்றுள்ளன’’ எனவும் பனாமுரே திலகவங்ச தேரர் தெரிவித்தார்.
இதேவேளை, அரிசி மலை ஆரணியத்திற்கு முன்பாக உள்ள காணியில் முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்ய வந்த போது நான் தடுத்தேன். இது விகாரைக்கு சொந்தமான காணி என்பதனாலேயே இதனைச் செய்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு நான் வந்த பின்னர் இந்த காணியில் முதற் தடவையாக நல்லடக்கம் இடம்பெற்றுள்ளது. மயான பூமிக்கு பிரதேச சபையின் அனுமதி அவசியம். எனினும், இந்த காணியினை மயானமாக பயன்படுத்த இதுவரை பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை எனவும் தேரர் கூறினார்.
இங்கு நான் எல்லாப் பணிகளையும் சட்ட ரீதியாகவே செய்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.– Vidivelli