சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : வைத்தியர் நவீன் விஜேகோனை கைது செய்து ஆஜர் செய்யவும்
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு ஆலோசனை
எப்.அய்னா
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பில் சாட்சியம் வழங்குவதை, விஷேட வைத்திய நிபுணர் நவீன் விஜேகோன் தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில், குறித்த சம்பவத்தில் குற்ற பங்களிப்பொன்று அவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களுக்கு சான்று இருக்குமாயின் அவரை சாட்சியாளராக அன்றி, சந்தேக நபராக பெயரிட்டு உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல இதற்கான உத்தரவை நேற்று (9) பிறப்பித்தார்.
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பிலான பூரண விசாரணைகள், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை பொரளை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகள், தற்போது சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் கீழ் செயற்படும் கிருலப்பனையில் அமைந்துள்ள படுகொலை, திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலை தொடர்பில் விசாரணை செய்யும் சிறப்புப் பிரிவின் (Homicide & Organized Crime Investigation and Murder) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஆர்.ஏ.டி.ஈ.எல். ரந்தெனியவின் நேரடி கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறுவன் ஹம்தியின் பெற்றோரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ள குறித்த சிறப்பு விசாரணையாளர்கள், லேடி ரிஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர், ஏனைய வைத்தியர்களை விசாரணை செய்யவும், ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுவரை குறித்த சிறுவனின் சத்திர சிகிச்சையுடன் தொடர்புபட்ட அனைத்து மூல ஆவணங்களும் விசாரணையாளர்களின் கைகளுக்கு கிடைக்காத நிலையில், அவற்றைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
நேற்று இவ்வழக்கின் மரண விசாரணைகளுக்கான சாட்சியம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் தற்போது வசிக்கும் வைத்தியர் நவீன் விஜேகோனின் சாட்சியம் ஸ்கைப் ஊடாக பெற ஏற்பாடாகியிருந்ததது. எனினும் வைத்தியர் அதற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை எனவும், அவர் சாட்சியம் அளிப்பதை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக தோன்றுவதாக விசாரணையாளர்கள் மன்றில் குறிப்பிட்டனர்.
இதனையடுத்தே, வைத்தியர் நவீனுக்கு குற்றத்துடன் தொடர்பிருந்தால் சாட்சியாளராக அன்றி, சந்தேக நபராக பெயரிட்டு கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
கொட்டாஞ்சேனையை சேர்ந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லி சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின் கடந்த 2023 ஜூலை 28 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். சத்திரசிகிச்சையின் பின்னரான தொற்று பரவல் மரணத்துக்கு காரணம் என லேடி ரிஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் அப்போது குறிப்பிட்ட நிலையில், பாரிய மருத்துவ தவறொன்று அல்லது மனித உறுப்பு வர்த்தக நடவடிக்கை ஒன்று ஹம்தியின் மரணத்தின் பின்னணியில் இருக்கலாம் என சிறுவனின் குடும்பத்தார் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விசாரணையே சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் நவீன் விஜேகோன் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் இவ்விசாரணைகள் மேலும் மந்தமடைந்தன.- Vidivelli