ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகார வழக்கு : சட்ட மா அதிபர் முன் வைக்க முயன்ற‌ புகைப்பட தொகுப்பினால் சர்ச்சை

தீர்மானம் டிசம்பர் 13 இல்; மட்டக்குளி மைதானத்தில் மாணவர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்ததை ஒப்புக்கொண்ட சாட்சியாளர்

0 127

எப்.அய்னா

அடிப்­ப­டை­வா­தப் ­போ­த­னை­களை செய்­த­தாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா, புத்­தளம் அல்-­சு­ஹை­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் அதிபர் ஷகீல் கான் ஆகி­யோ­ருக்கு எதி­ராக சட்­டமா அதிபர் தொடர்ந்­துள்ள வழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளாக அரச தரப்பு குறிப்­பிடும் பல மாண­வர்­களின் வாக்கு மூலம் அவர்­களின் வீடு­களில் வைத்தோ அல்­லது சி.ஐ.டி.யில் வைத்தோ பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­பதும், மட்­டக்­குளி பகுதி விளை­யாட்டு மைதானம் ஒன்றில் வைத்து அவை பதிவு செய்­யப்பட்­ட­தா­கவும் புத்­தளம் மேல் நீதி­மன்றில் வெளிப்­பட்­டது. இது தொடர்­பி­லான வழக்கு கடந்த 22 ஆம் திகதி புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இந்த விவ­காரம் குறித்த வழக்­கா­னது புத்­தளம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி நதி அபர்ணா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது, குற்றம் சாட்­டப்­பட்ட இரு­வரும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.
ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன தலை­மை­யி­லான குழு­வி­னரும் அல் சுஹை­ரியா மத்­ரசா அதி­ப­ருக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள தலை­மை­யி­லான குழு­வி­னரும் ஆஜ­ரா­கினர்.

கடந்த 22 ஆம் திகதி வழக்குத் தொடுநர் சட்ட மா அதி­ப­ருக்­காக மன்றில் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்­வா­வுடன் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் லக்­மினி கிரி­ஹா­கம, அரச தரப்பின் சாட்­சி­யங்­களை நெறிப்­ப­டுத்­தினார்.

இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த விசா­ரணை அதி­காரி ஒருவர் மன்றில் சாட்­சி­ய­ம­ளித்தார். சி.ஐ.டி.யின் உள்­ளக உளவுப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக அப்­போது கட­மை­யாற்­றிய அதி­கா­ரியே இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார். தனக்கு அப்­போ­தைய பணிப்­பாளர் வழங்­கிய உத்­த­ர­வுக்கு அமைய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­தாக அவர் கூறினார்.

இதன்­போது அல் சுஹை­ரியா மத்­ரஸா மாண­வர்­களில் பலர் மட்­டக்­குளி பகு­தியை சேர்ந்­த­வர்கள் என வெளிப்­பட்­ட­துடன், அவர்­களை மட்­டக்­குளி பகுதி மைதானம் ஒன்­றுக்கு அழைத்து வாக்கு மூலம் பதிவு செய்­த­தாக குறித்த அதி­காரி குறிப்­பிட்டார். கொரோனா நிலைமை அதற்கு காரணம் என அவர் குறிப்­பிட்டார்.

எனினும் இவ்­வ­ழக்கின் பிர­தான சாட்­சி­யா­ளர்­களில் ஒரு­வரான மாணவன் மலிக்கின் வாக்கு மூல­மா­னது, அவ­ரது வீட்­டுக்கு சி.ஐ.டி. வாகனம் அனுப்­பப்பட்டு, அவர் சி.ஐ.டி.க்கு வர­வ­ழைத்து வந்து பெறப்­பட்­டது என்­பதை குறித்த அதி­காரி குறிப்­பிட்டார்.

இதன்­போது சாட்­சி­யாளர் மலிக்­குக்கு புகைப்­பட தொகுப்­பொன்­றினை காட்டி அவ­ரது வாக்கு மூலம் பதிவு செய்­யப்பட்­டது எனவும், அத­னூ­டாக அவர் மத­ர­சா­வுக்கு வந்து சென்­றோரை அடை­யாளம் கண்­ட­தாக அவ்­வ­தி­காரி கூறினார்.
இதன்­போது அந்த புகைப்­படத் தொகுப்பை மன்றில் சான்­றாக பதிவு செய்ய சட்ட மா அதிபர் முனைந்த போது அங்கு சர்ச்சை எழுந்தது.

ஹிஜாஸ் சார்பில் மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன மற்றும் சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள ஆகியோர் இதற்கு கடும் ஆட்­சே­பனம் வெளி­யிட்­டனர்.

நீதி­மன்றில் சான்­றா­வ­ண­மாக பதி­யப்­பட முனையும் புகைப்­பட தொகுப்பு தானா , சாட்­சி­யாளர் மலிக்­குக்கு காண்­பிக்­கப்பட்­டது என்­பதை எப்­படி நம்­பு­வது எனவும், அப்­ப­டி­யானால் அது ஏன் மலிக்கின் சாட்­சியம் பெற­ப்படும் போது அவ­ருக்கு காண்­பிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்­பினர்.
அத்­துடன் புகைப்­படம் என்­பது சாட்­சிகள் கட்­டளை சட்­டத்தின் கீழ் சாட்­சி­ய­மாக பதிவு செய்­ய­ப்படு­வ­தானால் அதற்­கு­ரிய நடை­மு­றைகள் பின்­பற்­றப்­பட வேண்டும் என அவர்கள் கோரினர்.

எனினும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பி­ரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­கம, தான் புகைப்­ப­டங்கள் தொடர்பில் சாட்­சியம் நெறிப்­ப­டுத்த எதிர்­பார்க்­க­வில்லை எனவும், அதில் உள்ள கையெ­ழுத்து தொடர்பில் மட்­டுமே கேட்கப் போவ­தாக கூறினார்.

இந்தநிலையில், குறித்த புகைப்­பட தொகுப்பை சான்­றா­வ­ண­மாக மன்றில் பதிவு செய்ய அனு­ம­திப்­பதா இல்­லையா என்­பதை எதிர்­வரும் டிசம்பர் 13 ஆம் திகதி தீர்ப்­ப­ளிப்­ப­தாக நீதி­பதி அறி­வித்தார்.

இத­னை­விட இந்த புகைப்­பட தொகுப்பு, பிர­தி­வ­ாதிகளுக்கு கைய­ளிக்­கப்பட்­டி­ராத நிலையில், அதனை கைய­ளிக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க நீதி­மன்றம் உத்­தர­விட்­டது.

இத­னை­ய­டுத்து வழக்­கா­னது எதிர்­வரும் 2025 ஜன­வரி மாதம் 10 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்ப்ட்­டது.

முன்­ன­தாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதிநிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்­படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­டனைக் குறிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை காண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்­கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­டனைக்குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடை சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.
அத்­தோடு, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.