சிலைகளைச் சேதப்படுத்தியதை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜமாஅத்தே இஸ்லாமியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாவனெல்லைப் பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திய நிகழ்வை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கிறது. இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் இணக்கப்பாட்டைத் தோற்றுவிக்க சமூக நிறுவனங்கள் அயராது முயற்சித்துக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இத்தகைய இழிவான செயல்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்.
சிலையைச் சேதப்படுத்தியமை தொடர்பில் மாவனெல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த பல சமூகத் தலைவர்களிடமும் பிரமுகர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் மாவனெல்லையில் வசிக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இதனைப் பின்னணியாகக் கொண்டு வீண் புரளிகளைப் பரப்பும் வேலைகளில் ஒரு சிலர் பொறுப்பற்றதனமாக ஈடுபடுவதும் கண்டிக்கத்தக்கது.
முன்னெப்போதையும் விட சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், சகவாழ்வு வலியுறுத்தப்பட வேண்டிய இக் காலகட்டத்தில் இது போன்ற நாசகார வேலைகளில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜமாஅத்தே இஸ்லாமி கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli