எஸ்.என்.எம்.சுஹைல்
பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. நேற்றுமுன்தினம் இரவு தேர்தல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின் படி 43 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 243 தரப்புகள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. அத்தோடு, 33 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் நுவரெலியா மாட்டத்திலுமே அதிகமான கட்சிகளும் சுயாதீன குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. அதாவது, சிறுபான்மை வாக்காளர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலேயே இவ்வாறு பல பிரிவுகளாக நின்று தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளமை தெரியவருகிறது.
இது இப்படியிருக்க கட்சிகள் பலவும் புதுப் புதுக் கூட்டணிகளை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக தேசிய மக்கள் சக்தியானது சகல மாவட்டங்களிலும் வேட்பாளர் பட்டியலை தயாரித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி இந்த கூட்டணிக்குள் இருக்கும் பிரதான அரசியல் கட்சி அல்லது அதில் உள்ள அரசியல் கட்சி எனலாம். அங்கு வேறு அரசியல் குழுக்களுக்கு இடமளிக்கப்படுவதாக தெரியவில்லை. ஆனாலும், சிவில் அமைப்புகளின் பரிந்துரைகளில் பல வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதை காண முடிகிறது. குறித்த வேட்பாளர்கள் கடந்த காலங்களில் பிரதிநிதித்துவ அரசியலில் பெரிதாக சோபிக்காவிட்டாலும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களாகவே இருக்கின்றனர். எனினும் தேசிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள் பலரும் அரசியல் களத்திற்கு புதியவர்களாகவே தோன்றுகின்றனர். அவர்களின் பிரசார நடவடிக்கை மற்றும் அக்கட்சி மீதான மக்களின் நம்பிக்கையுமே அவர்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக அமையும் எனலாம்.
பிரதான எதிர் தரப்பு முகாமாக ஐக்கிய மக்கள் கூட்டணியே காணப்படுகின்றது. இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகள் அந்த கூட்டணியுடனேயே உள்ளன. அவர்கள், சதாக பாதகங்களின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களிலும் வெவ்வேறான நிலைப்பாடுகளுடன் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி பிரபலங்கள் ஐக்கிய மக்கள் சக்தியாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் களமிறங்கியது. முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இதில் உள்ளடங்கினர். அவர்கள் இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியிலேயே போட்டியிடுகின்றனர். குறிப்பாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஸிம் செயற்படுகின்றார். அக் கூட்டணியில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், எம்.எச்.ஏ.ஹலீம், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மகரூப் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும் மீண்டும் களமிறங்குகின்றனர்.
கேகாலை மாவட்டத் தலைவராக செயற்படும் கபீர் ஹாஸிம் இம்முறையும் அம்மமாட்டத்தில் ஒரேயோரு முஸ்லிம் வேட்பாளராக தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகிறார். ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக எம்.எச்.ஏ.ஹலீமும் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் மீண்டும் கண்டியில் களமிறங்குகின்றனர். திருகோணமலை மாவட்ட தலைமை வேட்பாளராக இம்முறை இம்ரான் மகரூப் மீண்டும் போட்டியிடுகிறார். கூட்டணியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸவுடன் கொழும்பில் இம்முறை இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களுக்கே சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது. முஜிபுர் ரஹ்மானும் எஸ்.எம்.மரிக்காரும் மாத்திரம் கொழும்பில் அக்கூட்டணி சார்பில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இது இவ்வாறிருக்க களுத்துறை மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல் போட்டியிடும் சாத்தியம் இருக்கின்றது. இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நேரடி வேட்பாளர்கள் பதுளை, பொலன்னறுவை, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் களமிறக்கப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தெரியவருகிறது. எனினும், வடக்கு கிழக்கு, வடமேல் மாகாணங்களில் கூட்டணிக் கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களே பிரதானமாக போட்டியிடும் நிலைமை இருக்கிறது.
இது இவ்வாறிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்திலும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்தும் களமிறங்கவுள்ளது. திருகோணமலை மாவட்டத்திலும் வன்னியிலும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடன் மேற்படி இரு கட்சிகளின் வேட்பாளர்களும் களமிறங்கவுள்ளனர்.
இந்த பிரதான முகாம்களுக்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கேஸ் சிலிண்டர் கூட்டணியை குறிப்பிடலாம். இந்த கூட்டணி இரண்டு மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடுகிறது. தேசிய காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) உட்பட முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டணியிலேயே போட்டியிடவுள்ளனர். முன்னாள் அமைச்சர்களான நஸீர் அஹமட், அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். அத்தோடு, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், எஸ்.எம்.எம்.முஸர்ரப் ஆகியோரும் திகாமடுல்ல மாவட்டத்திலும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மகரூப் திருகோணமலை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர். இஷாக் ரகுமான் அனுராதபுரத்தில் சிலிண்டர் சின்னத்திலும் போட்டியிடவுள்ளார். இதனிடையே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வன்னி மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளார். கண்டி மாவட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்), அக்குறணை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு மேலதிகமாக இன்னும் பல அரசியல் கட்சிகள் பல மாவட்டங்களிலும் முகாமிட்டுள்ளன. குறிப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பல மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனிடையே, சமூக நீதிக்கட்சி ஐக்கிய கூட்டணியில் இணைந்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
நாமல் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, திலித் ஜயவீர தலைமையிலான கட்சி, ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான கட்சி, விஜயதாஸ ராஜபக்ச தலைமையிலான கட்சி என்று பல்வேறு கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலைநாட்டில் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே பல கட்சிகள் களமிக்கப்பட்டுள்ளதை காண்கிறோம். அத்தோடு, அரசியல்வாதிகள் பலரும் தேர்தல் கால சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக பல சுயாதீன குழுக்களையும் களமிறக்கியுள்ளனர். இதற்கு அப்பால் பெரும் தொழிலதிபர்களும் அரசியல் கட்சிகள் பலவற்றை வாங்கி தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றனர்.
இன்றைய சூழலில் இவ்வாறானதொரு போக்கை பார்க்கும்போது நாடு அரசியல் ரீதியில் வேறு திசையில் பயணிப்பதாகவே தோன்றுகிறது. நாட்டின் நலன்களை மறந்து வெறும் சுய இலாப அரசியல் நாடகங்களே இங்கு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனை ஆரோக்கியமானதொரு போக்காக கருத முடியாது.
அடுத்து வரும் சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை விட்டுச்செல்லும் எண்ணம் எந்த தரப்பிடமும் இல்லை என்பதை இவர்களின் போக்குகள் ஊடாக காணமுடியும். வெறுமனே அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் மோகமே இருப்பதை காண்கிறோம்.
இவ்வாறு பல்வேறு புதுப்புது பெயர்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் அதே பழைய கட்சிகளும் பழைய அரசியல் தலைமைகளுமே போட்டியிடுகின்றனர். மாற்றம் என்ற பெயரில் கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும் மாற்றமடைந்திருக்கின்றன. ஆனால், அரசியல் நடத்தைகளில் மாற்றம் காண முடியவில்லை. அனைத்து தரப்பும் புதிய பாதைக்கு திரும்பும் என நினைத்தாலும் அவர்கள் புதுப் பெயர்களில் பழைய அரசியல் கலாசாரங்களையே அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றனர்.- Vidivelli