உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி பெற்றுத் தாருங்கள்
கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் ஜனாதிபதியிடம் மன்றாடிய மக்கள்
எம்.வை.எம்.சியாம்
‘‘ஓர் உயிர் பறிபோகும் பட்சத்தில் அந்த உயிரை பெற்றுக்கொடுப்பதே அதற்கு நீதியாக அமையும். ஆனால் அந்த வாழ்வை மீளப் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை நாம் அறிவோம். இதுவே யதார்த்தம். குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதும், அவ்வாறான பேரழிவு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதுமே நீதியாக அமையும். ஓர் உயிருக்குப் பகரமாக மற்றொரு உயிரைப் பெற்றுக் கொடுப்பது நீதியாக அமையாது’’ என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இதன்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.
இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
இந்நாட்டில் அண்மைய காலத்தில் மிக மோசமான அழிவு 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியே நிகழ்ந்தது. அந்த விடயங்கள் மண்ணுக்குள் புதையுண்டு அழிவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தனக்கு வாக்களித்ததன் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்ததென நான் நம்புகிறேன்.
இந்நாட்டு மக்களின் நோக்கங்களும் எதிர்பார்ப்புக்களும் நான் கொண்டிருக்கும் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களுக்கு மாறுபட்டவை அல்ல. ஈஸ்டர் தாக்குதல் குறித்து மக்கள் எதிர்பார்க்கும் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்பதுடன் அதற்கான முன்னெடுப்புக்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான முழுமையான முடிவொன்றுக்கு வந்து அந்த முடிவை அடிப்படையாகக் கொண்டு சாட்சிகளை திரட்டுவதுவதால் மாத்திரம் இந்த விசாரணைகளை கொண்டு நடத்த முடியாது. வெளிப்படைத்தன்மையுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்.
அரசியல் மாற்றத்துக்காக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. அரசியலுக்காக நூற்றுக் கணக்கில் அப்பாவி உயிர்களை பலியிடுவது பாரிய அழிவாகும்.அவ்வாறான நிலைப்பாடு நாட்டின் அரசியலுக்குள் காணப்படுமாயின் அந்த நிலைமையை
முழுமையாக துடைத்தெறிய வேண்டும்.
இரண்டாவது விடயமாக அப்போதைய ஆட்சிப் பொறிமுறையும் இதனுடன் தொடர்புபட்டிருந்ததா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அவ்வாறான நிலை மிகவும் பாதுகாப்பற்றதும் ஆபத்தானதுமான நிலை என்பதோடு அதன்படி இதற்குள் நடந்தது என்னவென்பதை கண்டறிய வேண்டியது மிக அவசியமானது.
அடுத்தபடியாக 274க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை பறித்த மற்றும் பெருமளவானவர்களை காயத்துக்கு உள்ளாக்கிய அழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது அன்புக்குரியவர்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.
அதேபோல் இவ்வாறான பிரச்சினையினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து சமூகத்தை பாதுகாத்தமைக்காக மதகுருமார்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறுகிறேன். சமூகத்திற்குள் காணப்பட்ட இணைவு ஒருமைப்பாடு நம்பிக்கை சிதைந்து போயிருக்கிறது. மற்றுமொரு சமூகத்தின் மீது குரோதத்துடன் பார்க்கும் நிலை உருவாவது சமூக நல்வாழ்விற்கு மிகப்பெரிய ஆபத்தானது. அதனால் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணையொன்றை நடத்த வேண்டியது அவசியமாகும்.
கடந்துபோன 05 வருடங்களில் ஒவ்வொரு ஏப்ரல் 21 ஆம் திகதியும் வீதிகளிகளிலும் சந்திகளிலும் ஒன்றுகூடிய மக்கள் அவர்களின் மனதிலிருந்த நீதி தொடர்பிலான எதிர்பார்ப்புக்களையே வெளிப்படுத்தினர் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
கண்ணீர் மல்க தாய் ஒருவர்,
ஜனாதிபதி அவர்களே, எமது இந்த அவல நிலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுங்கள். நான் அதனை மாத்திரமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன். எனது மகன், எனது பெரிய மகள் பெரிய மகனின் இரு பிள்ளைகள் அவரது மூன்று பிள்ளைகளும் அவர்கள் அனைவரையும் இழந்து தனியாகவே வாழ்கிறேன்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி-,
அம்மா நீங்கள் கூறியது உண்மை. தனிப்பட்ட வகையில் எடுத்துக் கொண்டாலும் உயிரிழக்கும் வேதனையை நானும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் எதுவும் இல்லாமல் எமக்கு நெருங்கியவர்களை குழுவொன்று கொலை செய்யும் போது தினமும் எமது நெஞ்சு வலிக்கும். நாமும் அதனை அனுபவித்துள்ளோம்.இதற்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதை விட்டுக்கொடுக்க முடியாத பொறுப்பாக உள்ளது.
மற்றுமொரு தாய்-
புலனாய்வுப் பிரிவினர் தம்மை தவறாக வழிநடத்தியதாக ரவி செனவிரத்னவும், ஷானி அபேயசேகரவும் குறிப்பிட்டிருந்தனர். அவ்வாறாயின் எதிர்காலத்தில் விசாரணை நடத்தும் தரப்பினரை தவறாக வழிநடத்தி இருந்தால் இன்றும் அந்த நிலைமை ஏற்படாது என்பதற்கு நீங்கள் வழங்கும் உறுதி என்ன?
இதற்கு பதலளித்த ஜனாதிபதி,
விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இந்த அதிகாரிக்கு அந்த சம்பவத்துடன் தொடர்பு இருக்கும் என தெரிந்துகொள்ளும் போது அவரை பிறிதொரு பக்கத்தில் வைப்பதற்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. அதேபோன்று மற்றைய பக்கத்தில் உள்ள அனைத்தையும் ஒதுக்கி வைக்கப் போவதுமில்லை.ஒரு சாராருக்கு மாத்திரம் நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பது நன்மையாக அமையாது. ஏனைய அனைவருக்கும் நன்மை பெற்றுக்கொடுக்க வேண்டும். எனவே சந்தேகம் கொள்ள வேண்டாம். அந்த வேலையை நாம் சரியாக செய்வோம்.
தனது பெற்றோரையும், பிள்ளையையும் இழந்த தந்தை ஒருவர்,
தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக இங்கு வருகை தந்த நாம் மாத்திரமே அறிந்திருக்கவில்லை. இந்த தாக்குதலை தடுப்பதற்கு சந்தர்ப்பம் இருந்தது. உங்களால் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியுமா? அல்லது எனது பெற்றோரையும் பிள்ளையையும் உயிருடன் மீள தர முடியுமா?
இம்முறை தேர்தலில் உங்களுக்கே நான் வாக்களித்தேன். ஆனால் அரசியலை முற்றாக வெறுத்துள்ளேன். நீங்கள் இங்கு வருகை தருகிறீர்கள் என தெரிந்திருந்தால் நான் நிச்சயம் இங்கு வந்திருக்க மாட்டேன். உங்களிடம் நான் வினயமாக ஒன்றை மாத்திரம் எதிர்பார்க்கிறேன். அரசியல்வாதிகளால் தொடமுடியாத நீதித்துறை சுதந்திரத்தை ஏற்படுத்துங்கள். அன்று தான் எமது நாட்டின் தூய்மையற்ற அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி-
பிரமுகர்களுக்கான பாதுகாப்புப்பிரிவினர் இதனை அறிந்திருந்தனர். புலனாய்வுப் பிரிவினர் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பிரிவுக்கு அறிவித்தனரா என்பது எனக்கு தெரியாது. எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மூவர் இதுவரை அந்த பிரமுகர் பாதுகாப்பை பெற்றது கிடையாது. பிரமுகர்களுக்கான பாதுகாப்பை பெற்றவர்கள் மாத்திரமே அதனை அறிந்திருக்க முடியும்.
ஒரு உயிர் பறிபோகும் பட்சத்தில் அந்த உயிரை பெற்றுக்கொடுப்பதே அதற்கு நீதியாக அமையும். ஆனால் அந்த வாழ்வை மீளப் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை நாம் அறிவோம். இதுவே யதார்த்தம்.நீதி என்றால் என்ன? குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதே நீதியாக அமையும். அவ்வாறான பேரழிவு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதே நீதியாக அமையும். ஒரு உயிருக்காக மற்றொரு உயிரை பெற்றுக் கொடுப்பது நீதியாக அமையாது. இந்த கட்டமைப்பு வீழ்ச்சியடைய அரசியலே காரணமாக இருக்குமாயின் அந்த அமைப்பை சீர்செய்வதும் அரசியலாகவே அமையும். அரசியலின் காரணமாகவே நீதிக்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதாக சிலர் நினைக்கின்றனர்.
அரசியல் இன்றி இந்த கட்டமைப்பை சீர் செய்ய முடியாது. ஒட்டுமொத்த கட்டமைப்பின் வீழ்ச்சிக்கு அரசியலே வித்திட்டுள்ளது. எனவே இந்த கட்டமைப்பை அரசியல் மூலமே சரி செய்ய வேண்டும்.
தனது இரு பிள்ளைகளை இழந்த தாய் ஜனாதிபதியை நோக்கி-,
எனது மகளுக்கு 20 வயது. எனது மகனுக்கு 13 வயது. துடிக்க துடிக்க அங்கிருந்த கதிரையில் தான் தமது உயிரை நீத்தனர். இவ்வளவு காலமும் நியாயத்தை கோரி போராடினோம். இரு பிள்ளைகளை இழந்த வேதனையில் எனது கணவர் பட்ட துன்பத்தை நான் மாத்திரமே அறிவேன்.
குற்றவாளிகளை தண்டிப்பதாகக் கூறியே கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். ஆணைக்குழுக்களை ஆரம்பித்து விசாரணைகளை செய்தார்.
மக்கள் பணத்தை விரயம் செய்தார்கள்.நாம் பட்ட துன்பங்கள் போதும். இன்னும் தாமதப்படுத்தாதீர்கள். உங்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வேதனையுடனேயே இதனை நான் கூறுகிறேன்.
ஏன் இன்னும் எமது நாட்டில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை. குற்றவாளிகள் ஏன் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அதிகாரத்திற்குள் இவை மறைக்கப்படுகின்றன. இனிமேலும் இவை இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.- Vidivelli