ஐக்கிய மக்கள் கூட்டணியில் மு.கா., அ.இ.ம.கா தே.கா. சிலிண்டர் சின்னத்தில் ஐ.தே.க.வுடன் கூட்டு
மட்டக்களப்பில் மரம்; திகாமடுல்லயில் மயிலும் தனித்து போட்டி பிரதான கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் நேரடி களமிறக்கம்
வேட்பு மனுத்தாக்கலுக்கான இறுதி தினம் நாளை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பலவும் பிரதான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கவுள்ளன.
அத்தோடு, பிரதான கட்சிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் நேரடியாகவும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியில் புதிய முகங்கள் இம்முறை களமிறக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக கூட்டணியிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தி ஊடாக சில மாவட்டங்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், கம்பஹா மாவட்டத்தில் முனீர் முழப்பர் மௌலவியும் கொழும்பு மாவட்டத்தில் டாக்டர் ரிஷ்வி சாலி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
அத்தோடு, கண்டி மாவட்டத்தில் அக்குறணையைச் சேர்ந்த றிபாய் மற்றும் கம்பளையைச் சேர்ந்த பஸ்மின் ஆகியோர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் இரு வேட்பாளர்களும் குருநாகல் மாவட்டத்தில் ஒரு வேட்பாளரும் களமிறங்கவுள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கரைப்பற்றை சேர்ந்த ரமீஸ், சம்மந்துறையைச் சேர்ந்த ரிஷாட் புஹாரி மற்றும் ஒலுவிலை சேர்ந்த சுல்தான் சத்தார், சாய்ந்தமருதை சேர்ந்த ஆதம்பாவா ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியை சேர்ந்த பிர்தௌஸ் நளீமி, ஓட்டமாவடியைச் சேர்ந்த நியாஸ் ஹாஜியார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் மூதூரைச் சேர்ந்த சப்ரான், கிண்ணியாவைச் சேர்ந்த ராபிக் ஆகியோரும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி
இது இவ்வாறிருக்க ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும் கேகாலை மாவட்டத்தில் கபீர் ஹாஷிமும் கண்டி மாவட்டத்தில் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இம்ரான் மகரூப் போன்றோர் போட்டியிடுகின்றனர். அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் இப்திகார் ஜெமீலும் பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி, மாத்தளை, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தலா ஒவ்வொரு முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.
புதிய ஜனநாயக கூட்டணி
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயகக் கூட்டணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறிய உறுப்பினர்கள் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த பலரும் இணைந்து போட்டியிடவுள்ளனர்.
இந்த கூட்டணியில் தேசிய காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதாக அக்கட்சியின் உபதலைவர் உதுமாலெப்பை தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அதன் தலைவர் அதாவுல்லாஹ் போட்டியிடுவதுடன், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் கட்சி சார்பான வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, இந்த கூட்டணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மட்டக்களப்பிலும் அப்துல்லாஹ் மஹ்ரூப் திருகோணமலையிலும், முஸர்ரப் அம்பாறையிலும் போட்டியிடவுள்ளனர். மேலும், அநுராதபுரத்தில் இஷாக் ரகுமான், வன்னியில் காதர் மஸ்தானும் போட்டியிடவுள்ளனர். அஸாத்சாலி கொழும்பிலும் ஜெய்னுலாப்தீன் லாபிர் ஹாஜியார் கண்டியிலும் போட்டிடவுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் தெரிவித்தார். அத்தோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட இருப்பதாகவும் கூறினார்.
கண்டி மாவட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் புத்தளம், திருகோணமலை, திகாமடுல்ல, குருநாகல், கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மு.கா. வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.
மக்கள் காங்கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில தனித்து களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் அமீர் அலி தெரிவித்தார். அத்தோடு, திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னி, யாழ்., குருநாகல் மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கண்டி, கொழும்பு மாவட்டங்களில் தமது கட்சி வேட்பாளருக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் மாவட்டத்தில் கூட்டணியில் போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா போட்டியிடுவதா என்ற இழுபறி நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏனைய கட்சிகள்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்து பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது. அத்தோடு, சமூக நீதிக்கட்சியானது ஐக்கிய கூட்டணி ஊடாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அதன் தலைவர் நஜாமுஹம்மத் கொழும்பில் போட்டியிடவுள்ளார்.
அத்தோடு, புத்தளம் மற்றும் சம்மந்துறை பகுதிகளில் சுயேட்சை அணிகளை களமிறக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும், தற்போது அதன் செயற்பாடுகள் தேக்கமடைந்துள்ளமை அவதானிக்க முடிகிறது.- VIdivelli