அல்குர்ஆன் அவமதிப்பு விவகார வழக்கு: ஞானசார தேரரை கைது செய்யுங்கள்
கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு
(எப்.அய்னா)
முஸ்லிம்களின் புனித வேத நூலான அல் குர்ஆனை அவமதித்து கருத்து வெளியிட்டமை, தொடர்பிலான விவகார வழக்கில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று (9) உத்தரவிட்டது.
ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பினுள் அத்து மீறி கலகம் விளைவித்தமை தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் விசாரணையின் பின்னர், முஸ்லிம்களின் புனித வேத நூலான அல் குர் ஆனை அவமதித்து கருத்து வெளியிட்டமை தொடர்பில் கோட்டை நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கில் ஆஜராகாமையால் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிமன்ற நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவு பிறப்பித்தது. 758/14 எனும் வழக்கெண்களைக் கொண்ட இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது ஞானசார தேரர் மன்றில் ஆஜராகவில்லை. முறைப்பாட்டாளர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மன்றில் பிரசன்னமானார்.
இதன்போது மன்றில் ஆஜராகிய பொலிசார், விசாரணைகளை நிறைவுறுத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதனையடுத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய இவ்வழக்கு தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை விட 2014.04.12 அன்று கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாத்தையும் குர் ஆனையும் அவமதிக்கும் விதமாகவும் நிந்திக்கும் விதமாகவும் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் இவ்வழக்கில் கடந்த 2017 ஜூன் 15 ஆம் திகதியும் மன்றில் ஆஜராகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli