நாட்டின் 17 ஆவது பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நாளைய தினத்துடன் வேட்புமனுத் தாக்கல்கள் நிறைவுக்கு வருகின்றன. நாளை மாலையாகும்போது நாட்டின் எந்த எந்த மாவட்டங்களில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது விபரமாகத் தெரிய வரும். எனினும் நேற்று மாலை வரையான தகவல்களை நோக்கும்போது நாடு முழுவதும் ஏராளமான அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளமை தெளிவாகிறது.
குறிப்பாக இம்முறை சிறுபான்மை மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் ஏராளமான தரப்புகள் போட்டியிடுகின்றன. கடந்த பாராளுமன்றத்தில் ஒரே கட்சியில் இருந்த பலர் இம்முறை பல்வேறு தரப்புகளிலும் பிரிந்துநின்று போட்டியிடுகின்றனர். குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் பலவும் தமக்கிடையில் பிளவுபட்டு புதிய கூட்டணிகளை உருவாக்கியுள்ளன. இம்முறை சில புதிய கட்சிகளும் களமிறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பிளவுகள் காரணமாக இம்முறை சிறுபான்மையினரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவடையலாம் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக அடுத்துவரும் தேர்தலில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பிளவுபட்டு பலவீனமாகும் ஆபத்து இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்ட ஆய்விலும் கண்டறியப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்திற்கான சிறுபான்மையினரை வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒக்ஸ்ஃபோர்ட் ப்றூக்ஸ் பல்கலைக்கழகத்தால் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
இதற்கு பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மையினரைத் தமக்குள் உள்வாங்காமையும் இதற்கு ஒரு காரணம் என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ‘‘ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போன்ற பிரதான தேசிய கட்சிகள் சிறுபான்மையினர் பங்கேற்பதற்கும் மற்றும் அவர்களுடைய பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கும் கட்சிகளில் உள்ளக ரீதியாக வழங்கப்படும் வாய்ப்புக்களைப் படிப்படியாகக் குறைத்துள்ளமையை அவதானிக்கலாம். அத்துடன், சிறுபான்மைக் கட்சிகள் பிளவுபட்டும், அவர்களுடைய தேவைகளையும் உரிமைகளையும் எடுத்தியம்புவதற்கு மாறாக, பெரும்பான்மையினரின் நிகழ்ச்சி நிரலுக்கமைவாக தமது பரப்புரைகளை வடிவமைத்துள்ளனர்.’’ என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் முஸ்லிம் தரப்புகள் தமக்குள் ஒற்றுமைப்பட்டு ஒரு கூட்டணியைத் தாபிப்பதன் மூலம் வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் பலமான அணியாகப் போட்டியிடுவதன் மூலம் அதிக பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைக்க முடியும் என்ற கருத்தை பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் சிறுபான்மை மக்கள் தமது உரிமைகள் தொடர்பில் ஆளும் தரப்புடன் பேரம்பேசல்களில் ஈடுபடக் கூடியதாக இருக்கும். எனினும் அதற்கான சாத்தியங்கள் நமது அரசியல் பரப்பில் மிகவும் குறைவாகும்.
இதனிடையே சிறுபான்மை பெரும்பான்மை என்ற வேறுபாடோ சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடோ அன்றி பாராளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆளுமைகளை எந்த சமூகத்திலிருந்தும் தெரிவு செய்து அனுப்பக் கூடிய பக்குவத்தை மக்கள் பெற வேண்டும் என சமகாலத்தில் பலரும் வலியுறுத்துகின்றனர். சிங்களவர்கள் சிங்கள வேட்பாளர்களுக்கும் தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களும் முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் அன்றி எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எல்லோரும் வாக்களித்து தெரிவு செய்கின்ற அரசியல் கலாசாரம் இந்த நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டியதே காலத்தின் தேவையாகும்.
இன மத அரசியல்களால் மக்களை பிளவுபடுத்தி வாக்குச் சேகரிப்பதை விட அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய மிகச் சிறந்த ஆளுமைகள் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வேண்டும் என்பதே அனைவரதும் அவவாகும். அதற்கான வாய்ப்புகளை தேசியக் கட்சிகள் திறந்து கொடுக்க வேண்டும்.
தேசியக் கட்சிகள் சிறுபான்மையினருக்கு தமது வாயில்களை மூடுகின்ற போதும் அவர்கள் தமக்கான தனித்துவமான வாயில்களைத் திறந்து கொள்கின்றனர்.இது விடயத்தில் இரு சாராரும் நிதானமாக செயற்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு அளவுக்கதிகமான கட்சிகள் களமிறங்கி வாக்குகள் சிதறடிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.- Vidivelli