எப்.அய்னா
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக மீண்டுமொருமுறை பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற தீர்ப்பொன்றினை எதிர்கொண்டுள்ளார்.
‘இஸ்லாம் ஒரு புற்று நோய்’ என கிருலப்பனை பகுதியில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் ஞானசார தேரர் கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் பொரளை பள்ளிவாசல் நம்பிக்கை சபை பொறுப்பாளர் ரிகாஸ் ஹாஜியார், பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டார். அந்த முறைப்பாடு மீது விசாரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பளிக்கப்பட்டு அவ்விசாரணைகள் இடம்பெற்றன.
இந்த நிலையில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்ததாக கூறி அவருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை நவம்பர் 14ஆம் திகதி வழங்குவதாக அவ்வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேன கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி அறிவித்தார். .
இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சியாளர் உள்ளிட்ட சாட்சிகள் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
எனினும் குறித்த மன்னிப்பானது முஸ்லிம் சமூகத்திடம் பொது வெளியில் கேட்க வேண்டியதொரு விடயம் எனவும் அது தொடர்பில் சமூகத்தின் தனி நபரான முறைப்பாட்டாளர் முடிவு செய்ய முடியாது என முறைப்பாட்டாளர் தரப்பு அறிவித்திருந்தது.
முறைப்பாட்டாளருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம். நளீம் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இவ்வாறான நிலையில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்யுமாறு ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி காமினி அல்விஸ் நீதிமன்றில் கோரினார்.
இவ்வாறான நிலையிலேயே குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வழங்குவதாக நீதிவான் அறிவித்தார்.
கடந்த 2016 ஜூலை 8, அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்லாம் தொடர்பான அறிக்கை மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும், அதன்படி, குற்றவியல் சட்டத்தின் 291 (பி) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 28 ஆம் திகதி இந்த தண்டனை தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் வழங்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்த எச்.சி.1948/20 எனும் வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், இந்த தீர்ப்பளிக்கப்பட்டது.
எனினும் இத்தீர்ப்புக்கு எதிராக ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்து, பிணை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli