றிப்தி அலி
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து சிறுபான்மை சமூகத்தவர் மத்தியில் அவருடைய கட்சியான தேசிய மக்கள் சக்தி பிரபல்யமடைந்துள்ளது.
இதனால், எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்காக தொழிலதிபர்கள், புத்திஜீவிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் இளைஞர்கள் என முஸ்லிம் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் தயாராகி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்களின் கணிசமான வாக்குகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கிடைத்துள்ளதை வாக்களிப்பின் முடிவுகள் காண்பிக்கின்றன. முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் 2019 மற்றும் 2024 ஜனாதிபதி தேர்தல்களில் அநுரகுமார திசாநாயக்க பெற்ற வாக்குகளின் ஒப்பீட்டை இங்குள்ள அட்டவணையில் காணலாம்.
குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளின் கோட்டை என வர்ணிக்கப்படுகின்ற தொகுதிகளில் அநுர குமார திசாநாயக்கவிற்கு பாரியளவில் வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகளை விட 150, 200 சதவீத வாக்குகள் அதிகமாக இந்த முறை கிடைத்துள்ளன.
இதன் மூலம் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் முஸ்லிம் மக்கள் இல்லை என்ற செய்தி முழு உலகிற்கும் சொல்லப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து முஸ்லிம் மக்களும் ஜனாதிபதியைத் தெரிவுசெய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. கடந்த பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பிக்கள் காணப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோரினால் முஸ்லிம் சமூகத்துக்கோ அல்லது அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த மக்களுக்கோ எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை.
குறிப்பாக ‘விஸ்ஸ எபா’ என்ற லேபலை அணித்திருந்த தௌபீக் எம்.பி அதற்கு ஆதரவாக வாக்களித்தார். அதே போன்று 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் பலவந்த ஜனாஸா எரிப்பின் போது வாய்மூடி மௌனியாக இருந்தனர். இது போன்ற விடயங்களை முஸ்லிம் சமூகம் இன்னும் மறக்கவில்லை.
இவ்வாறான நிலையில் இதே எண்ணிக்கையான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தெரிவுசெய்யப்படுவார்களா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவே இதற்கான பிரதான காரணமாக உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் பெற்ற வாக்குகளை இணைத்தால் அநுர குமார திசாநாயக்க பெற்ற வாக்குளை விட அதிகமான வாக்குகளையே அவர்கள் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டால் ஜனாதிபதியின் கட்சிக்கு பாரிய சவாலாக அமையும். அவ்வாறில்லாமல், எதிர்க்கட்சிகள் பல்வேறு தரப்புக்களாக பிரிந்து கேட்டால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வாய்ப்பே அதிகமாக காணப்படுகின்றது.
இதே நிலை தான் முஸ்லிம் பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நசீர் அஹமட், அலி சாஹிர் மௌலானா, காதர் மஸ்தான் மற்றும் எஸ்.எம். முஷாரப் எனப் பிரிந்து போட்டியிட்டால் எந்தப் பயனுமில்லை. மாறாக முஸ்லிம்களின் வாக்குகள் சிதறும் என்பது மட்டும் நிச்சயம்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் நீண்ட காலமாக பேணப்பட்டு வருகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இல்லாமலாக்கவும் சில முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த புதியவர்கள் வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், புதியவர்கள் என்ற கோசத்தின் ஊடாக தற்போதுள்ள எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடாது.
அநுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் எல்லாவாற்றிற்கும் தீர்வு கிடைத்து விட்டது என்று அர்த்தமல்ல. எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்காக குரல்கொடுக்கக் கூடியவர்களை கட்டாயம் நாம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டாய ஜனாஸா எரிப்பு, ஈஸ்டர் தற்கொலை தாக்குதல், பொருளாதார நெருக்கடி போன்ற சமயங்களில் சமூகத்திற்காக குரல்கொடுத்தமையினை ஒருபோதும் மறக்க முடியாது. இதனால் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பாராளுமன்றத்திற்கும் தேவையாகவுள்ளனர்.
இவ்வாறான நிலையில்தான் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தி களமிறங்கவுள்ளது.
இதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் போட்டியிடுவதற்கு அதிக ஆர்வத்தினை வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த இரண்டு மாகாணங்களிலும் குறைந்தது ஆறு ஆசனங்களை அக்கட்சி எதிர்பார்க்கின்றது. இந்த மாகாணங்களுக்கு வெளியில் சிறுபான்மையினர் செறிந்து வாழும் மாவட்டங்களில் சில பிரதிநிதித்துவங்களை பெறவும் அக்கட்சி முயற்சித்து வருகின்றது.
இதனால், இம்முறைய ஜனாதிபதித் தேர்தல் போன்று பாராளுமன்றத் தேர்தலும் முக்கியத்துவமிக்கதாக உள்ளதுடன் பலமுனைப் போட்டியாக அமையவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட மாற்றம் போன்று பாராளுமன்ற உறுப்பினர்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். எவ்வாறாயினும், இந்த புதுமுகங்கள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் பொருத்தமானவர்களாக அமைய வேண்டும்.
மாறாக முன்னைய காலங்களைப் போன்று பாராளுமன்ற ஆசனங்களை சூடாக்குபவர்களாக இருந்தால் மீண்டும் தோல்வியடைவது முஸ்லிம் சமூகமேயாகும்.
இதனால், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அலையில் அள்ளுண்டு போகாமல் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் சமூகம் உள்ளது. இதனால், முஸ்லிம் சமூகத்தினை எதிர்காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள எம்.பிக்கள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் அதிக ஆர்வம் செலுத்த வேண்டியது கட்டாயத் தேவையாகும்.- Vidivelli