றிப்தி அலி
பலந்த ஜனாஸா எரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருமாறு புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் இந்த பலவந்த ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற விடயமும் புதிய ஜனாதிபதியிடம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் பலவந்தமாக எரிக்கப்பட்ட 276 ஜனாஸாக்களுடன் தொடர்புடைய முக்கிய தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை மூடி மறைக்கும் பணியில் தற்போது சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
பலவந்த ஜனாஸா எரிப்பு தொடர்பான பல்வேறு விபரங்களைக் கோரி சமூக செயற்பட்டாளரான முஹம்மத் ஹிஷாம் கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி இரண்டு தகவலறியும் விண்ணப்பங்களை சுகாதார அமைச்சிற்கு சமர்ப்பித்திருந்தார்.
கொவிட் தொடர்பான நிபுணர் குழுவின் பெயர் விபரம், அக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம், அக்குழுவின் உறுப்பினர்களின் நியமனக் கடிதம், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், மேலதிக கொடுப்பனவு விபரம், இந்த நிபுணர் குழுவின் கூட்டங்களின் கூட்ட அறிக்கை, கொவிட் வழிகாட்டி அறிக்கை போன்ற விடயங்களைக் கோரியே இந்த தகவலறியும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த தகவலறியும் விண்ணப்பம் கிடைத்ததை கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம். அர்னோல்ட் உறுதிப்படுத்தினார்.
அத்துடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த தகவல் கோரிக்கை தொற்று நோயியல் பிரிவின் தகவல் அதிகாரியான அதன் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தகவல் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 வேலை நாட்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 25 வேலை நாட்கள் தற்போது கடந்த நிலையிலும் எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த தகவல் கோரிக்கைக்கான மேன் முறையீட்டினை கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி முகம்மத் ஹிஷாம் மேற்கொண்டுள்ளார்.
இந்த மேன் முறையீடு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியுமான கே.பி. யோகசந்திரா கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், இன்று வரை எந்தவித பதிலுமில்லை. கொள்கைகள் மற்றும் மத நம்பிக்கைகளை மீறி பலவந்தமாக 276 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமையினால் இன்று அவர்களுடைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதற்காக குறித்த தகவல்களை வெளிப்படுத்த வேண்டியது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் என்ற வகையில் புதிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய எடுக்க வேண்டும். இதன் மூலமே பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சின் மீதுள்ள நம்பகத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்பது நிச்சயம்!- Vidivelli