புதிய ஜனாதிபதியின் முன்னாலுள்ள சவால்கள்
வரக்காமுறையூர் ராசிக்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு சில நாட்கள் கடந்துவிட்டன. தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி காபந்து அரசை அமைத்து நாட்டை திறம்பட நிருவகித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிக புத்தி ஜீவிகளை முன்னிலைப்படுத்தி அமைச்சுப் பதவிகளும் செயலாளர் பதவிகளும் ஆளுநர் பதவிகளும் வழங்கப்பட்டிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது மாத்திரமன்றி சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றது. அத்தோடு ஜனாதிபதி பல ஆரோக்கியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். அவற்றுள் பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வதைத் தடைசெய்தல், ஆசிரியர் தினம் மற்றும் சிறுவர் தினக்கொண்டாட்டங்களுக்காக நிதி வசூலிப்பதை தடைசெய்தல், கொழும்பில் மூடப்பட்டிருந்த சில வீதிகளைத் திறந்து பொது மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தியமை, வெளிநாட்டவர்களுக்கான வீசா நடைமுறையை மாற்றியமைத்தமை போன்ற அதிரடியான நடவடிக்கைகள் மக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்துகொள்வதை தவிர்த்தல் என்ற அறிவிப்பு பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கையாக அனைவராலும் பேசப்படுகிறது. மாணவர்களுக்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட ஒரு கௌரவமாக இதைப்பார்க்க முடியும்.
ஏனெனில் பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் கலந்துகொள்கின்றபோது அது நிர்வாக ரீதியான தலையீடுகளையும் புத்திஜீவிகள் மீதான தலைகுனிவையும் ஏற்படுத்திய வரலாறுகள் ஏராளமாக உள்ளன. அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில் நல்ல கல்வித் தகைமை உடைய முன்மாதிரியானவர்களும் இருக்கிறார்கள். அதே நேரம் எந்த தகைமையும் இல்லாமல் பல்வேறு குற்றச்செயல்களைப் புரிந்தவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மாணவர்களுக்கு ஒருபோதும் முன்மாதிரியாக அமையமாட்டார்கள் என்ற காரணத்தினால் இது வரவேற்கத்தக்க ஒரு அறிவிப்பாக நோக்கப்படுகிறது.
இதேபோன்று பல காத்திரமான மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றபோதும் இவை தொடர்பான மாற்றுக் கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. அரசியல்வாதிகள் பலதரப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளின் விளைவாக எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்திச் செல்லுகின்ற நிலையில் பொது மக்கள் பக்கத்திலிருந்து நேர்மறையான நல்லாதரவுச் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. இந் நிலையில் இன்னுமின்னும் நல்ல விடயங்களை எதிர்பார்க்கும் மக்களை திருப்திப்படுத்துவதென்றால் அதற்காக புதிய ஜனாதிபதி பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
பெரும்பாலான மக்கள் அவர் பக்கம் இருப்பது பாரியதொரு பலமாகக் காணப்பட்டாலும் அவர்களை தன்பால் தக்க வைத்துக்கொள்வது என்பது ஒரு சவாலுக்குரிய விடயமாகும். இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் எதிலும் உடனடி மாற்றத்தை எதிர்பார்க்கும் மனப்பாங்கைக் கொண்டவர்கள். நீண்டகால நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு பசி, பட்டினி, வறுமை போன்றவற்றை தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்காதபோது தமது கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள் என்பது வரலாறு கண்ட உண்மையாகும். எனவே பொருளாதார சிக்கல்கள் நிறைந்து காணப்படும் இந்த காலக்கட்டத்தில் மக்களின் அன்றாட அபிலாஷைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பது ஜனாதிபதியின் முன் காணப்படுகின்ற மிகப் பிரதானமான சவாலாகும்.
சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு விரக்தி அடைந்த நிலையிலதான் உயர்ந்த எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி கொள்கையுடைய ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள். ஊழல் மற்றும் துஷ்பிரயோகங்களை இல்லாதொழித்து நிரந்தரமான பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக வறுமையை இல்லாதொழித்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இனவாதம் மதவாதம் கடந்து எல்லா இன மக்களும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் வாழும் ஒரு நாடு உருவாக வேண்டும் என்பதே மக்களின் கனவாகும். இந்த கனவு மெய்ப்பட வேண்டுமானால் ஜனாதிபதியும் அவருடைய அணியினரும் அளப்பரிய அர்ப்பணிப்புகளைச் செய்தாக வேண்டும். இதுதான் தேசிய மக்கள் சக்தியின் முன் தேன்றியுள்ள மிகப்பெரிய சவாலாகும். கறை படியாத அரசியலின் ஊடாக கறைபடிந்த நாட்டை கழுவி சுத்தம் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதற்காக விஞ்ஞானத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் மாத்திரமன்றி நாட்டிலுள்ள புத்தி ஜீவிகளையும் அனுபவசாலிகளையும் ஒருங்கே திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொருளாதார இலக்குகளை அடைவதற்காக காத்திரமான கொள்கைகளை வகுத்து பயணிக்க வேண்டும். அவ்வாறு செல்கின்ற பொழுது இன்னும் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். அவ்வாறான சவால்களை ஒவ்வொன்றாக தொகுத்து நோக்குவோம்.
இடதுசாரி கொள்கை
தொடர்பான சவால்
இலங்கை வரலாற்றை எடுத்து நோக்கின் இதுவரை காலமும் வலதுசாரி கொள்கை உடையவர்களே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். முதற் தடவையாக இடதுசாரி கொள்கையை உடைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. அதாவது முன்னர் மக்கள் விடுதலை முன்னணி என்றழைக்கப்பட்ட இக்கட்சி கம்மியூனிஷ அல்லது சமவுடமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் உலகம் முழுவதும் சமவுடமைக் கொள்கைகள் நலிவடைந்து முதலாளித்துவம் மேலோங்கி வருகின்ற ஒரு நிலை காணப்படுகிறது. இலங்கையும் இவ்விரண்டு கொள்கைகளினதும் கலப்பான கலப்பு பொருளாதார முறையையே இதுவரையும் பின்பற்றி வருகிறது. அண்மைக்கால போக்குகளை உற்று நோக்கும்போது இலங்கைப் பொருளாதாரத்திலும் முதலாளித்துவமே அதிக செல்வாக்கு செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. அரசினுடைய செலவுகளை குறைத்து பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்லுகின்ற போக்கு காணப்படுகிறது. இலங்கையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான தனியார்மயப்படுத்தல்களும் அரச சொத்து விற்பனைகளும் இதை உறுதிப் படுத்துகின்றன. அதுமட்டுமல்லாது இங்கு தனியார் துறையின் ஆதிக்கம் அனைத்து பிரதான துறைகளையும் ஆக்ரமித்துள்ளது. அரச துறையால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு செயற்பாடுகளில் தனியார் துறையின் ஈடுபாடு அதிகரித்துச் செல்கிறது.
சமூக நலநோக்கம் நலிவடைந்து எங்கும் எதிலும் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளுகின்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் இலங்கை பொருளாதாரத்தில் இன்று ஊழியச் சுரண்டல், சூழல் மாசடைதல், விலைமட்டம் உயர்வடைதல் எனபன சர்வ சாதாரணமாக இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது சித்தாந்தமான சமவுடமைக் கொள்கையைப் பின்பற்றுவதா? அல்லது தற்போது அனைவருக்கும் பழக்கப்பட்டுப்போன முதலாளித்துவத்தின் அதிக பண்புகளை உள்ளடக்கிய கலப்பு பொருளாதார முறையை தொடர்வதா? என்பது சவாலுக்குரிய ஒரு விடயமாகக் காணப்படுகிறது. மக்கள் நலனை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு அரசு அதிகளவான செலவுகளை பொறுப்பேற்க தயாராகின்றபோது அரச செலவு அதிகரித்து அது பாதீட்டுச் சுமையை மேலும் தீவிரமடையச் செய்யலாம். அதிகபட்சமான சமூக நலநோக்கச் செயற்பாடுகள் தனியார் துறையினரின் செயற்பாடுகளை ஊக்கமிழக்கச் செய்யலாம்.
எனவே மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக பல சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதேவேளை தனியார் துறை மற்றும் வெளிநாட்டுத் துறையின் முதலீட்டை கவருவதற்கும் ஊக்கப்படுத்துவதற்குமான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்த முரண்பட்ட நோக்கங்களுக்கிடையில் சமனிலைத் தன்மையைப் பேணி அபிவிருத்தி நோக்கி பயணிப்பதற்கு எந்த கொள்கையை பின்பற்றுவடிதன்பது சவாலுக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில்
பெரும்பான்மையை நிரூபித்தல்
எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் தமது திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற வேண்டும். அதிலும் குறிப்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பெறுகின்றபோது மட்டுமே மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் ரீதியான மாற்றங்களை செய்யக் கூடியதாய் இருக்கும். அது மாத்திரமன்றி சாதாரண தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும் பாராளுமன்ற பெரும்பான்மை அவசியமாகும். இவ்வாறான ஒரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற 42 சத வீத வாக்குகளை மட்டுமே நம்பி இருந்தால் பாராளுமன்ற பெரும்பான்மையை பெறமுடியாது. அப்படியானால் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு எதிராக அளிக்கப்பட்ட 58 சதவீத வாக்குகளில் குறிப்பிட்டளவு வாக்குகளை ஈர்ப்பதன் மூலமே பெரும்பான்மை என்ற கனவை அடையலாம்.
ஆனால் இது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் தனிப்பட்ட ஒருவரின் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் பொதுத் தேர்தலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்தப் போகிறது. வேட்பாளர்களின் அறிவு, அனுபவம், ஆளுமை, அர்ப்பணிப்பு, மக்கள் மீதான அபிமானம் என்ற அனைத்துமே பாராளுமன்ற அங்கத்துவத் தெரிவில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றன. அந்தந்த தொகுதிகளில் அல்லது மாவட்டங்களில் மக்கள் சேவை மூலம் உள்ளங்களை வென்று அரைநூற்றாண்டுக்கும் மேலாக பாராளுமன்ற அங்கத்துவத்தை பெற்று வரும் அனுபவசாலிகள் பலர் இந்த தேர்தலிலே போட்டியிடலாம். அரசியலில் அனுபவமற்ற இதுவரை மக்கள் சேவைக்கான சந்தர்ப்பம் கிடைக்காத தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் இதில் எந்தளவுக்கு வெற்றி பெறுவார்கள் என்பது சவாலுக்குரிய விடயமாகும். தேர்தல் நடக்கும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி அவர்களால் செய்யப்படும் அதிரடி மாற்றங்கள் மூலம் வாக்குப் பலத்தை அதிகரிக்கலாம் என்றால் தேர்தல் சட்டப்படி அதுவும் சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகிறது. எனினும் மக்கள் மனங்களில் மாற்றத்திற்கான எண்ணங்கள் துளிர்விட்டிருப்பதை பலமாக அல்லது சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதிசிறந்த வேட்பாளர்களை இனங்கண்டு போட்டியிடச் செய்ய வேண்டுமென்பது புதிய ஜனாதிபதியின் முன்னாலிருக்கும் அளப்பரிய சவாலாகும்.
கூட்டாக செயற்படுதல்
தற்சமயம் தேசிய மக்கள் சக்தியினால் பாராளுமன்ற பெரும்பான்மையை பெறமுடியாது போனால் அடுத்த நகர்வு என்ன? என்பது ஜனாதிபதி முன்னாலுள்ள மிகப்பெரிய கேள்வியாகும். யாரையும் கூட்டுச் சேர்க்க மாட்டோம் என்ற இவர்களின் கொள்கைப்படி கூட்டாட்சி அமைக்க முடியாது. தனியாட்சி அமைப்பதற்கான மக்கள் வரம் கிடைக்கவில்லை என்ற தீர்ப்பு ஒரு புறம், எவருடனும் கூட்டுச் சேர மாட்டோம் என்ற கொள்கை இன்னொரு புறம். இந்த முரண்பட்ட நிலைகளுக்கிடையே சமனிலைத் தன்மையைப் பேணி நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்ற ரீதியில் மக்கள் வழங்கிய ஆணையை புதிய ஜனாதிபதி எப்படி காப்பாற்றப் போகிறார் என்பது அடுத்த பெரும் சவாலாக நோக்கப்படுகிறது. வேறு வழியின்றி சிலரை கூட்டுச்சேர்த்துக் கொண்டு ஆட்சியை அமைப்பதென்றாலும் மீண்டும் ஊழல்வாதிகளும் ஏமாற்றுக்காரர்களும் பாராளுமன்ற அமைச்சுப் பதவிகளில் அமர்த்தப்படுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். எல்லா கட்சியினரிடையேயும் செல்வாக்குப் பெற்ற பாராளுமன்ற அங்கத்தவர்களை கூட்டிணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பதென்றால் அதுவும் சாத்தியப்பட மாட்டாது. ஏனெனில் தேசிய மக்கள் சக்தி கட்சி தாவல்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளது. அவ்வாறான நிலையேற்பட்டால் அது மக்களின் நம்பிக்கையை குறைப்பதாக அமைந்து நீண்ட காலத்தில் ஏனைய கட்சிகளைப் போலவே தேசிய மக்கள் சக்தியும் என்ற மனப்பாங்கைத் தோற்றுவித்துவிடும். இதற்கு ஒரே தீர்வு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுபான்மை கட்சிகளின் அங்கத்தவர்களை முழுமையாக இணைத்துக் கொள்வதுதான். இருந்தாலும் அப்படி இணைத்துக்கொண்டு ஆட்சி அமைப்பதற்கு பொருத்தமான சிறுபான்மை கட்சிகள் இருக்கிறதா என்றால் அதுவும் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய ஒரு விடயமாகும். அப்படியே சிறுபான்மை கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சி அமைக்கின்றபோது பெரும்பான்மை மக்கள் அதை மனதார விரும்பமாட்டார்கள். இனவாதிகள் அதை ஊதிப் பெருப்பித்து அரசியல் லாபம் தேட முயற்சிப்பார்கள். இதற்கு ஒரே மாற்றுவழி பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்கான வியூகங்களை வகுத்து செயற்படுவதுதான். அது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வெளிநாட்டு உறவுகளை
பலப்படுத்தல்
தேசிய மக்கள் சக்தியின் முன்னாலுள்ள இன்னொரு சவால்தான் சர்வதேச நாடுகளுடனான உறவை பேணிச் செல்வதாகும். இன்று உலகமயமாதல் என்ற எண்ணக்கருவின் கீழ் முழு உலகிற்கும் பொதுவான உலகளாவிய முறையொன்று தோற்றம் பெற்று வருகிறது. இந்நிலையில் எந்தவொரு நாடும் எந்தவொரு நாட்டையும் பகைத்துக் கொண்டு தனித்து செயற்பட முடியாது. உலக நாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு முதலீட்டுக்காக தனது சந்தைகளை திறந்து விட்ட நாடுகளே புதிய கைத்தொழில்மய நாடுகளாக பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்து செல்கின்றன. ஆனால் சர்வதேச உறவுகள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ள இடதுசாரி தேசிய மக்கள் சக்தி வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக என்ன கொள்கைகளைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பதை முழு உலகமும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.மேலும் இலங்கையில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டுக்கொள்கிறார்கள். சமவுடமை கொள்கை கொண்ட நட்பு நாடாக சீனாவுடன் நெருக்கமான தொடர்பை மேற்கொண்டால் கலப்பு பொருளாதார கொள்கையைப் பின்பற்றும் அண்மிய நாடான இந்தியாவுடன் பகைத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம். தனது சொந்த நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் இந்த இரு நாடுகளினதும் உறவுகளில் ஒரு சமத்துவத்தைப் பேண வேண்டுமானால் அதிசிறந்த வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை வகுத்து செயற்படுவது புதிய ஜனாதிபதிக்கு முன்னாலுள்ள பெரும் சவால்களில் ஒன்றாகும். சீனா, இந்தியாவுடன் மாத்திரமன்றி ஐரோப்பிய நாடுகளுடனும் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் இடதுசாரி, வலதுசாரி நாடுகளுடனும் அவசியமான உறவுகளைக் கட்டியெழுப்பி இலங்கையின் துரித அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். சர்வதேச நாடுகளிடையே இலங்கை ஒரு கௌரவமான இடத்தைப் பெற்று கீர்த்தியுடன் திகழ வேண்டுமெனில் அதற்கான அடிப்படையாக அதி உன்னதமான வெளிநாட்டுக் கொள்கையொன்றை வகுத்து பயணிக்க வேண்டும்.
உலக நாடுகளுடன் மாத்திரமன்றி உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களுடனான உறவைக் கட்டியெழுப்புவதும் ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த கால ஆட்சிகளில் இந்த நிறுவனங்களுடனான உறவு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் நன்கு திட்டமிடப்பட்ட நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச்செல்லக் கூடிய வெளிநாட்டுக் கொள்கை வகுப்பு என்பது புதிய ஜனாதிபதி முன்னாலுள்ள பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது.- Vidivelli