- ஐக்கிய மக்கள் கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸ்
- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானமில்லை
- தேசிய காங்கிரஸ் கிழக்கில் தனித்து களமிறங்கும்
- ஐக்கிய மக்கள் கூட்டணியில் ந.தே.மு. இல்லை
- ஐ.ச.கூ., நுஆ, துஆ, ஐ.தே.கூ தனித்து போட்டி; ச.நீ. க. புதிய கூட்டணி
(எஸ்.என்.எம்.சுஹைல்)
17 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதா? அல்லது தனித்து களமிறங்குவதா? என்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்த கட்சிகள் கூட்டாகவும் தனித்தும் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
அத்துடன், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, தேசிய ஐக்கிய கூட்டணி (நுஆ) ஆகிய கட்சிகள் இம்முறை தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளன.
இதனிடையே, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சமூக நீதிக் கட்சி என்பன புதிய மாற்றுக் கூட்டணி குறித்து ஆராய்ந்து வருகின்றன.
ஜனநாயக ஐக்கிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கூட்டணி என்பன இதுவரை தெளிவான தீர்மானமொன்றுக்கு வரவில்லை என தெரியவருகிறது.
எனினும், எந்தவெரு முஸ்லிம் கட்சியும் இதுவரை இறுதித் தீர்மானத்தை எட்டவில்லை என அக்கட்சிகளின் பிரதானிகள் தெரிவித்தனர்.
முஸ்லிம் காங்கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணியில் நாடுமுழுவதும் போட்டியிடும் என மு.கா.வின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
மேலும், கட்சி கடந்த முறையும் இதே கூட்டணியில் போட்டியிட்டது. ஆனால், புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தோம். இம்முறை அம்மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றும் மு.கா. செயலாளர் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் குறித்து இன்னும் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை என அக்கட்சியின் தவிசாளர் சட்டத்தரணி அமீர் அலி தெரிவித்தார்.
கூட்டணி அமைப்பது குறித்து தேசிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கட்சி மட்டத்திலான பேச்சுவார்த்தைகளும் மும்முரமாக இடம்பெறுகின்றன. இது குறித்த இறுதித் தீர்மானத்தை ஓரிரு தினங்களில் அறிவிக்க முடியுமாக இருக்கும் என அ.இ.ம.கா. தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ்
அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தனித்து குதிரை சின்னத்தில் களமிறங்குவதற்கே தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் உப தலைவர் டாக்டர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களுடைய கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டணி குறித்து முன்னாள் ஆளுநர் நஸீர் அஹமட் போன்றோரும் எம்முடன் பேச்சுவார்ததைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்த, தே.கா. உப தலைவர், நாங்கள் பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அமைக்கப்பட்ட புதிய கூட்டணியுடன் இணைந்து போட்டியிட போவதில்லை என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு
நாடுமுழுவதும் தனித்து போட்டியிடுவதற்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் எம்.ரி.ஹஸனலி தெரிவித்தார்.
மேலும், நாங்கள் புதிய கூட்டணி குறித்து சிந்திக்கவில்லை. எல்லா தரப்பையும் மக்கள் நிராகரித்துள்ளனர். எனவே, நாம் தனி வழியில் சென்று இந்த தேர்தலை சந்திக்க தீர்மானித்துள்ளோம். நாடுமுழுவதும் புதுமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் ஹஸனலி தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணி(நுஆ)
இளைஞர், யுவதிகளுக்கு களமமைத்துக்கொடுத்து இந்த தேர்தலை முகம்கொடுக்க தீர்மானித்துள்ளதா தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) கட்சியின் செயலாளர் அஸாத் சாலி தெரிவித்தார்.
நாடு புதிய மாற்றத்தை வேண்டி நிற்பதால் நாம் புதிய தலைமைகளை உருவாக்கி அவர்களிடம் இந்த நாட்டின் ஆட்சியை கையளிக்க வேண்டும் என்பதற்காக நாடுமுழுவதும் தனித்து எமது புறா சின்னத்தில் போட்டியிடவுள்ளோம் என்றும் நுஆவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளித்தது. எனினும், பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டணியில் இணைந்து போட்டியிட மாட்டோம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணியொன்று மாற்று சக்தியாக இந்த தேர்தலில் நாடுமுழுவதும் போட்டியிடும். இதில் முற்போக்கு சிந்தனையுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய முகங்கள் போட்டியிடவுள்ளனர். தேசிய மக்கள் சக்தி எனும் கட்சி அதிகாரத்தில் இருக்கின்றபோது, அந்த கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கும், அவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டவும் ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு தகுதி இல்லாமையால் நாம் இந்த தேர்தலில் களமிறங்கி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும் எனவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
சமூக நீதிக்கட்சி
தமிழ், முஸ்லிம், சிங்கள தரப்புகளை இணைத்துக்கொண்டு புதிய மாற்றுக் கூட்டணி ஊடாக இந்த பொதுத் தேர்தலில் சமூக நீதிக் கட்சி களமிறங்கும் என அதன் தலைவர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.
நாங்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே விலகிவிட்டோம். எனினும், நாம் முற்போக்கு சிந்தனையுடனும் புதிய மாற்றத்துக்கான கொள்கையுடனுமே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம். இந்த அடிப்படையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கான சிந்தனையுடன் நாம் இந்த பொதுத் தேர்தலுக்கு புது கூட்டணியாக களமிறங்குவோம் என்றும் சமூக நீதிக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு சில மாவட்டங்களில் தனித்து தராசு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அதன் செயலாளர் எம்.நயீமுல்லாஹ் தெரிவித்தார்.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என இருந்த கட்சியின் பெயரை ஐக்கிய தேசியக் கூட்டணி என மாற்றியதையடுத்து இந்த கட்சியின் ஊடாக பல்லின வேட்பாளர்களே களமிறங்கவுள்ளனர். எனவே, தனி முஸ்லிம் தரப்பாக அல்லாமல் நாம் இந்த தேர்தலை முகம் கொடுக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயக ஐக்கிய கூட்டணி (துஆ)
ஜனநாயக ஐக்கிய கூட்டணியானது இந்த தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது. எனினும், அக்கட்சியின் இறுதி தீர்மானம் குறித்து இதுவரை எந்தவொரு உறுதியான தகவல்களும் வெளியாவில்லை.
பிரதான தேசிய கட்சிகள்
ஐக்கிய மக்கள் சக்தியில் முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன போட்டியிடவுள்ளன. இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, ஐக்கிய மக்கள் கூட்டணியில் செயலாளராக முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் கண்டியிலும், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கொழும்பிலும், இம்ரான் மகரூப் திருகோணமலையிலும் கபீர் ஹாஷிம் கேகாலையிலும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
களுத்துறையில் இப்திகார் ஜெமீல், பதுளையில் லத்தீப் மௌலவி, காலியில் பயாஸ் ஆகியோரும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்பஹா, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இத் தேர்தலில் எவ்வாறு களமிறங்கப் போகின்றது என்பது குறித்து இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே, பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறி முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட தரப்பின் தீர்மானங்களும் வெளியாகவில்லை.
எனினும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவது குறித்து முஸ்லிம் சமூக மட்டத்தில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.- Vidivelli