பொதுத் தேர்தலும் முஸ்லிம் வாக்காளர்களும்

0 265

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இந்தக் கட்­டு­ரையை ஆரம்­பிக்கும் முன்னர் என்­னைப்­பற்­றிய ஓரிரு உண்­மை­களை வாச­கர்­க­ளுக்கு உணர்த்த விரும்­பு­கிறேன். சுய­பு­ராணம் பாடு­வ­தற்­காக என்னை மன்­னிக்­கவும் வேண்­டு­கிறேன்.

கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கும் மேலாக இலங்­கையின் அர­சி­யலில் அடிப்­ப­டை­யான மாற்­றங்கள் மக்கள் சக்­தியின் தலைவர் அநுர குமார திச­நா­ய­காவின் ஜனா­தி­பதி ஆட்­சி­யின்கீழ் ஏற்­ப­ட­வேண்டும் என்று நான் இடை­ய­றாது வலி­யு­றுத்­தி­வந்­ததை விடி­வெள்ளி வாச­கர்கள் தமி­ழிலும் கொழும்பு ரெலி­கிராப், டெய்லி எப்ரி ஆகிய ஏடு­களில் ஆங்­கி­லத்­திலும் அறிந்­தி­ருப்பர். இருந்தும் நான் அநுர­வையோ அவ­ரது கட்­சி­யி­ன­ரையோ சந்­தித்­ததும் இல்லை, அவர்­க­ளுடன் பேசி­யதும் இல்லை. நான் அந்தக் கட்­சியின் அங்­கத்­த­வனும் அல்ல. ஆனால் அவர்­க­ளு­டைய கொள்­கைகளால் கவ­ரப்­பட்­டவன். அது­மட்­டு­மல்ல, நான் பிறந்­து­வ­ளர்ந்து என்னை உரு­வாக்­கி­விட்ட தாய்த்­திரு நாடு எவ்­வாறு இன­வாத அர­சியல் வெறிக்கு ஆளாகி இன­வா­தி­களின் ஊழல் நிறைந்த ஆட்­சிக்கு உட்­பட்டுச் சீர­ழிந்­ததை கண்டு அந்த நாட்டைச் சீர்­ப­டுத்த கண்­ணி­ய­மிக்க இளம் தலை­மு­றை­யொன்று உரு­வா­க­வேண்டும் என்று பல­வ­ரு­டங்­க­ளாகக் கன­வு­கண்டேன். எனது கனவின் பல­னாக 2022ல் அர­க­லயக் கிளர்ச்சி உரு­வா­ன­போது மட்­டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அந்த இளைய தலை­மு­றையின் அர­சியல் சாயம் பூசப்­ப­டாத இன­மத பேத­மற்ற, அதே சமயம் அமைப்பு மாற்றம் ஒன்றே வேண்டும் என்ற ஏகோ­பித்த குரலைக் கேட்­டபின் இலங்­கைக்கு விடி­வு­காலம் வந்­து­விட்­ட­தெனப் பெரு­மைப்­பட்டேன். அதன் பின்னர் தேசிய மக்கள் சக்தி என்ற ஒரு கூட்­டணி உரு­வா­கி­யதும் அதன் தலை­வ­ராக அநுர குமார திச­ாநா­யக்க தெரி­யப்­பட்­டதும் எனக்கு மேலும் ஊக்­க­ம­ளித்­தன. அதன் பலனே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அநுர வெற்­றி­பெற்­றமை என்­பதைக் கூறிக்­கொள்­வ­திலே பெரு­மைப்­ப­டு­கின்றேன். ஆனாலும் அவ­ரு­டைய வெற்­றியைப் பூர­ண­மா­ககக் கொண்­டா­டு­வ­தற்கு ஒரு தடை­யாக அமைந்­தது எனது முஸ்லிம் உடன்­பி­றப்­புகள் அதிலும் கிழக்­கி­லங்கை முஸ்லிம் வாக்­கா­ளர்கள் அநுர­வுக்குப் பெரு­ம­ளவில் வாக்­க­ளிக்கத் தவ­றி­யமை. அதற்­கு­ரிய கார­ணத்தை விளக்கி அந்தத் தவறு எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் நடை­பெ­றக்­கூ­டாது என்ற எண்­ணத்­தி­லுமே இக்­கட்­டுரை வரை­யப்­பட்­டுள்­ளது.

அர­க­லய இளை­ஞரின்
விழிப்­பு­ணர்வு
அர­சாங்கம் மாற­வேண்டும், ஆளும் கட்சி மாற­வேண்டும், அமைச்­சர்கள் மாற­வேண்டும் என்­று­தானே சுதந்­திரம் கிடைத்த காலம் தொடக்கம் அர­சியல் பிரச்­சார மேடை­க­ளிலே கிளர்ச்சிக் கோஷம் எழுப்­பப்­பட்­டது? அதற்­கேற்ப கட்­சிகள் மாறின, அர­சாங்­கங்கள் மாறின, அமைச்­சர்கள் மாறினர். அதா­வது தலை­யி­டியை அகற்றத் தலை­ய­ணை­கள்தான் மாற்­றப்­பட்­ட­னவே ஒழிய தலை­யி­டிக்­கான சரி­யான பரி­கா­ரத்தை யாரும் நாட­வில்லை. நடை­மு­றை­யி­லி­ருந்த அர­சியல் கலாச்­சா­ரமே ஊழலும் வர்க்­க­பே­தமும் இனப் பார­பட்­சமும் நிறைந்­து­கா­ணப்­பட்ட வேளையில் யாரா­வது அந்­தக்­க­லாச்­சா­ரத்­தையே மாற்­ற­வேண்­டு­மெனக் குரல் எழுப்­பி­னரா? இல்­லவே இல்­லையே. ஆனால் முதல் முத­லாக 2022லேதான் ஒரு புதிய தலை­மு­றை­யினர் காலி­மு­கத்­தி­ட­லிலே குழுமி அமைப்­பையே மாற்று எனக் குரல் கொடுத்­தனர். அந்தக் குரலின் எதி­ரொ­லி­யா­கத்தான் அர­சியல் கலாசா­ரத்­தையே மாற்­றுவேன் என்று பின்னர் அநுர குமார திச­ாநா­யக்க பகி­ரங்­கத்­தி­லேயே பறை­சாற்­றி­யது. இந்த அறை­கூவல் ஏற்­ப­டுத்­திய விழிப்­பு­ணர்வே பெரும்­பான்மைச் சிங்­கள சமூ­கத்தை ஓர் அர­சியல் சுனா­மிக்குள் தள்­ளி­யது. அந்தச் சுனா­மியின் விளை­வா­கவே அநுர ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­பட்டார். ஆனால் அந்தச் சுனாமி கிழக்­கி­லங்கை முஸ்­லிம்­களை தொட்டுச் சென்­றதே ஒழிய அதன் வீச்­சுக்குள் அவர்­களை இழுக்­க­வில்லை. நடந்­து­மு­டிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கிழக்கில் அநுர ரணி­லையும் சஜித்­தை­யும்­விட குறை­வான வாக்­கு­க­ளையே பெற்­றமை இதற்­கான ஆதா­ர­மாகும். இந்த நிலை எப்­படி ஏற்­பட்­டது?

பிர­தே­ச­வா­தமும்
மதக்­கண்­ணா­டியும்
கிழக்­கி­லங்கை முஸ்­லிம்­களின் பிர­தே­ச­வாதம் பழ­மை­யா­னது. மட்­டக்­க­ளப்புப் பிர­தே­சத்­தி­லி­ருந்து கரை­வா­குப்­பற்று வேறு­பட்­டது என்ற கருத்தை விதைத்­த­வர்கள் பிரித்­தா­னியக் குடி­யேற்­ற­வா­திகள். அது அவர்­களின் பிரித்­தாளும் தந்­தி­ரங்­களுள் ஒன்று. அந்­தப்­ பி­ரி­வி­னையைக் கட்­டிக்­காத்து வந்­த­வர்கள் அப்­பி­ர­தே­சங்­களின் அர­சியல் தலை­வர்கள். இது 1947ல் ஆரம்­பித்த ஒரு கதை. அது ஒரு புற­மி­ருக்க, நாட­ளா­விய எந்­த­வொரு பிரச்­சி­னை­யையும் மதக்­கண்­ணாடி ஊடாக நோக்கும் ஒரு மரபை மதத்­த­லை­வர்கள் விதைத்­துள்­ளார்கள். எந்த ஒரு தேச­மாற்­றத்­தையும் அது முஸ்­லி­முக்குப் பொருந்­துமா பொருந்­தாதா என்ற எடையில் வைத்து நிறுத்து அதன்­படி மக்­க­ளுக்கு அந்த மாற்­றத்தை ஏற்­பதா இல்­லையா என முடிவு செய்­தனர். உதா­ர­ண­மாக, 1950களில் சிங்­கள ஸ்ரீ பிரச்­சினை தோன்­றி­ய­போது சிங்­க­ள­வர்கள் அதனை தமது வாக­னங்­க­ளிலே பொறிக்க அதே­வேளை தமி­ழர்கள் அதனை தமிழ் வடி­வத்தில் பொறிக்க கல்­மு­னை­யி­லி­ருந்த ஒரு முஸ்லிம் அர­சி­யல்­வாதி அதனை அர­பியில் எழுதிப் பொறித்­தமை ஞாப­கத்­து­ககு வரு­கின்­றது. அந்த அள­வுக்கு முல்லா இஸ்லாம் கிழக்­கி­லங்கை முஸ்­லிம்­களை ஆட்­கொண்­டி­ருந்­ததால் தேசிய நீரோட்­டத்­தி­லி­ருந்து அவர்கள் வில­கியே நின்­றனர். இதனை சமூ­க­வியல் அடிப்­ப­டையில் முஸ்­லிம்­களின் வர­லாற்றை ஆய்வோர் புரிந்­து­கொள்வர். இந்தக் கார­ணி­களே இம்­மு­றையும் அர­க­லய ஏற்­ப­டுத்­திய அர­சியல் விழிப்­பி­லி­ருந்து கிழக்­கி­லங்கை முஸ்­லிம்­களை ஒதுக்கி வைத்­தது எனலாம்.

அதே­வேளை கிழக்­கி­லங்கை முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களோ இந்த நீரோட்­டங்கள் முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் சிந்­த­னை­களை ஆட்­கொண்டு அவர்­களை தங்­க­ளுக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கச்­செய்யும் என்ற ஒரு பயத்தால் மத­வெ­றி­யூட்டித் தங்­களைப் பாது­காத்­துக்­கொண்­டனர். உதா­ர­ண­மாக, கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித்துக்குச் சார்­பாகப் பிரச்­சா­ரம் ­செய்த ஒரு மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் பிர­பலம் அநு­ரவின் அமைப்பு மாற்­றங்கள் நடை­மு­றைக்கு வந்தால் முஸ்­லிம்கள் இரண்டு பெரு­நாட்­களுள் ஒன்­றைத்தான் கொண்­டாட அனு­ம­திக்­கப்­ப­டுவர் என்றும் அவர்­க­ளது தின­சரித் தொழு­கை­க­ளுக்கும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­படும் என்றும் அப்­பட்­ட­மான பொய்­களைப் பரப்­பி­யதை மறுக்­க­மு­டி­யாது. இவ்­வா­றான பிரச்­சா­ரங்­க­ளா­லேதான் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியும் அப்­பி­ர­தே­சத்தில் தளம் கொண்­டி­ருக்­கி­ற­தெனின் அது மிகை­யா­காது. இந்த நிலை தொட­ரு­மாயின் இம்­முஸ்­லிம்கள் தேசிய நீரோட்­டத்­தி­லி­ருந்து ஓரங்­கட்­டப்­ப­டுவர். அதன் விளை­வுகள் பார­தூ­ர­மா­னவை.

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலும்
கிழக்­கி­லங்கை முஸ்­லிம்­களும்
தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அநுர ஜனா­தி­ப­தி­யாகப் பெரும்­பான்மை இனத்தின் பெரும்­பான்மை வாக்­கு­களால் தெரி­வு­செய்­யப்­பட்­டமை அர­க­லய தலை­மு­றையின் பாதி வெற்­றியே. அதன் அடுத்த முக்­கிய பாதி அக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் நாடா­ளு­மன்­றத்தை கைப்­பற்­று­வ­திலே தங்கி உள்­ளது. அதற்கு சிறு­பான்மை இனங்­களின் ஆத­ரவு மிக அவ­சியம்.

இன­பே­த­மற்ற, ஊழல் அகன்ற, சம­தர்ம ஜன­நா­யக ஆட்­சி­யொன்றை உரு­வாக்கி இன­நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நியா­ய­மான பங்­கீட்டின் அடிப்­ப­டையில் பொரு­ளா­தார வளர்ச்­சி­கா­ண­வெனத் திட­சங்­கற்பம் பூண்­டுள்­ளனர் புதிய ஜனா­தி­ப­தியும் அவரின் கட்சி உறுப்­பி­னர்­களும். ஜனா­தி­ப­தியின் வெற்­றி­யைக்­கண்டு சர்­வ­தேச நாணய நிதி நாட்­டை­விட்டு ஓட­வில்லை. உலக வங்கி உதவ முன்­வந்­துள்­ளது. ஜப்­பானோ தடுத்து நிறுத்­தப்­பட்ட பதி­னொரு செயற்­திட்­டங்­க­ளையும் மீண்டும் செயற்­ப­டுத்த இணங்­கி­யுள்­ளது. மூடி என்னும் சர்­வ­தேச நாண­ய­மாற்று நிறு­வனம் புதிய மாற்­றத்­துக்குப் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ளது. கொழும்புப் பங்குச் சந்­தையும் சுறு­சு­றுப்­ப­டைந்­துள்­ளது. சுற்­று­லாத்­து­றையும் உற்­சாகம் அடைந்­துள்­ளது. ஏற்­று­ம­தி­யா­ளர்­களும் வர­வேற்­றுள்­ளனர். சுருக்­க­மாகச் சொன்னால் அநு­ரவின் வெற்­றியைத் தொடர்ந்து ஓர் ஆரோக்­கி­ய­மான சூழல் உரு­வா­கி­யுள்­ளதை எதி­ரி­க­ளாலும் மறுக்க முடி­யாது.

ஆனாலும் ஜனா­தி­ப­தியின் திட்­டங்கள் யாவற்­றையும் நிறை­வேற்ற வேண்­டு­மாயின் அவ­ருக்குப் பக்­க­ப­ல­மாக பாரா­ளு­மன்றம் இயங்­க­வேண்டும். என­வேதான் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்­றியை ஈட்­ட­ வேண்­டி­யுள்­ளது. இங்­கேதான் சிறு­பான்மை இனங்­களின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. முதலில் ஓர் ஆரோக்­கி­ய­மா­னதும் அதே சமயம் வினோ­த­மா­ன­து­மான மாற்­றத்தை சிறு­பான்மை இனங்கள் உணரல் வேண்டும். இது­வரை அர­சி­யலை பேரி­ன­வெ­றியால் ஆட்­கொண்டு நாட்­டையே சீர­ழித்­தபின் அந்த வெறியை உத­றித்­தள்ளி எல்லா இனங்­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒரு தார்­மீக ஜன­நா­யக ஆட்­சியை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று பெரும்­பான்மை இனத்­தி­டையே விழிப்­பு­ணர்­வெ­டுக்க, சிறு­பான்மை அர­சி­யல்­வா­தி­களோ பழ­மை­யையே இன்னும் தழு­விக்­கொண்டு வியா­பார அர­சியல் நடத்த விரும்­பு­வதன் மர்மம் என்­னவோ? முதலில் நாங்கள் தமிழர் அல்­லது முஸ்­லிம்கள் என்ற எண்ணம் நீங்கி நாங்கள் முதலில் இலங்­கையர் பின்­புதான் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் என்ற மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும். அந்த மாற்­றத்தைத் தழு­வி­னா­லொ­ழிய இன­நல்­லி­ணக்கம் காண முடி­யாது. அதனை சிங்­கள இளம் தலை­முறை உணர்ந்­து­விட்­டது. அந்த உணர்ச்­சியின் பிர­தி­ப­லிப்பே அர­க­லய.
முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தமது சுய­லா­பத்­துக்­காக ஷைத்­தா­னு­டனும் சேர்ந்­து­கொள்ளத் தயார் என்­பதை அவர்­களின் கடந்­த­கால வர­லாறு வெளிப்­ப­டுத்தும். அவர்­களை, அந்த ஆஷா­ட­பூ­தி­களை, குறிப்பாக கிழக்கிலங்கையிலிருந்து ஓரங்­கட்­டு­வ­தற்கு அங்­குள்ள முஸ்லிம் வாக்­கா­ளர்கள் தயா­ராக வேண்­டு­மென இக்­கட்­டுரை வலி­யு­றுத்­து­கி­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் இழைத்த தவறை பொதுத்­தேர்­த­லிலும் இழைக்­கக்­கூ­டாது. இது காலத்தின்கட்டாயம்.

முஸ்லிம் குழுக்கள் ஒன்று சேர்ந்து துடிப்­புள்ள அதே­ச­மயம் நாட்டின் அர­சியல் நீரோட்­டத்தை நன்கு உணர்ந்த இளம் புத்­தி­ஜீ­வி­களை எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் அபேட்­ச­கர்­க­ளாக நிறுத்த முயற்­சிப்­பதை பாராட்­டாமல் இருக்க முடி­யாது. அந்தத் தெரிவில் முஸ்லிம் பெண்­களும் அடங்­க­ வேண்டும். அப்­ப­டிப்­பட்­ட­வர்­களே இப்­பு­திய சகாப்­தத்துள் முதலில் இலங்­கையர் நாங்கள், ஆனாலும் முஸ்­லிம்கள் என்ற தோர­ணை­யிலே மற்ற இனங்­க­ளுடன் கைகோர்த்துச் செய­லாற்ற முடியும். அவர்­க­ளுக்குப் பின்னால் முஸ்லிம் வாக்­கா­ளர்கள் அணி­திரள வேண்டும். முஸ்­லிம்கள் புதிய சகாப்­தத்தின் பார்­வை­யா­ளர்கள் அல்­லாமல் அதன் பங்­கா­ளி­க­ளாக மாறுதல் வேண்டும்.

இறு­தி­யாக, திரு­ம­றையின் திரு­வ­சனம் ஒன்றை மீண்டும் மீண்டும் நினை­வூட்­டு­கி­றது இக்­கட்­டுரை. ஓர் இனம் தன்னைத்தானே திருத்தும்வரை இறையும் அதனைத் தொடாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.