(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இந்த குறித்த வழக்கு நாளை (4) வெள்ளிக்கிழமை நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பின் சாட்சியாளர்கள் பெரும்பாலும் சாட்சியம் அளித்து முடித்துவிட்ட நிலையில், இறுதிக் கட்டமாக பொலிஸ் அதிகாரிகள் ஓரிருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. அதனை தொடர்ந்து பெரும்பாலும் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவையின் 200 ஆம் அத்தியாயத்தின் கீழ் தம்மை விடுவிக்கக் கோரி வாதங்கள், சட்டத்தரணி ஹிஜாஸ் தரப்பினரால் முன் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ரதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் ஆஜராகின்றனர்.
2 ஆம் பிரதிவாதியான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையில் குழுவினர் ஆஜராவர்.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம ஆஜராகி வருகின்றார்.
அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் பிரசன்னமாகி வருகின்றமை விஷேட அம்சமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதிநிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற்பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை காண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.- Vidivelli