2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த சலசலப்பைத் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
57 வயதுடைய சந்தேக நபர் குறித்த வினாத்தாளிலிருந்த பல கேள்விகளை வெளியில் கசியவிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பரீட்சையின் வினாத்தாள் கசிந்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை கூறப்பட்டதை அடுத்து, பரீட்சைகள் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தநிலையில், முதற்கட்ட விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்து சம்பந்தப்பட்ட விசாரணைகளின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் மூன்று வினாக்கள் அடங்கிய மாதிரி வினாத்தாளை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை அடுத்தே இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.
இதனையடுத்து பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்தே தற்போது, மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த பிரத்தியேக வகுப்பாசிரியர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய பிரத்தியேக வகுப்பாசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரத்தியேக வகுப்பாசிரியர் சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புலமைப்பரிசில் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று வினாக்களின் மதிப்பெண்களை சமமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கடந்த 18 ஆம் பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக மாணவர்கள் இந்தப் பரீட்சைக்காக இரவு பகலாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளமை விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.
இப் பரீட்சையை மீண்டும் நடாத்துவதாயின் அது மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் சிரமத்தில் தள்ளும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப் பரீட்சை சிறார்களை கடுமையான மன அழுத்தத்தினுள் தள்ளுவதாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப் பரீட்சையை கல்வி அமைச்சு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் இடம்பெற்றதுடன், 323,879 பரீட்சார்த்திகள் அதில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli