வரக்காமுறையூர் ராசிக்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்
இலங்கை ஜனநாய சோசலிஷ குடியரசின் ஒன்தாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்பாராத திருப்பு முனைகளோடு நிறைவு பெற்றிருக்கிறது. இந்த நாட்டிலே முதல் தடவையாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற ஒரு தேர்தலாக இதைப் பார்க்க முடிகிறது.
எனினும் இந்த தேர்தல் முடிவு ஏற்படுத்திய அதிர்வலைகளும் அதிர்ச்சிகளும் பழம்பெரும் அரசியல்வாதிகளை ஆட்டம் காண வைத்திருக்கிறது. அரசியலில் ஆழ்ந்த அறிவு ஞானமும், அனுபவமும் பெற்ற எட்டாவது ஜனாதிபதியுடனும் அரசியல் குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்து பல்வேறு மூத்த அரசியல் தலைவர்களோடு ஒன்றிணைந்து பயணித்து துறைசார்ந்த அறிவைப் பெற்றவருடனும் போட்டியிட்டு சாதாரண ஒருவர் வெற்றி பெறுவதென்பது ஆச்சரியத்திற்குரியதாகும்.
இலங்கைக்குள்ளும் வெளியேயும் யாரும் இப்படியொரு முடிவை எதிர்பார்க்காதபோதும் வாக்காள பெருமக்கள் ஒருமித்து எடுத்த முடிவு இலங்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. கடைசி வரை எதிர்வு கூற முடியாமல் மக்கள் அனைவரும் குழம்பிய நிலையில்தான் வாக்கெடுப்பு இடம்பெற்றது. ஆனால் ஒட்டுமொத்த மக்களும் மாற்றத்தை வேண்டியே பயணித்திருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்திவிட்டன. இதையும் தாண்டி இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் ஆதரவாளர்களுக்கும், இதுவரை ஆட்சிசெய்த தலைவர்களுக்கும் இந்த தேர்தல் பல பாடங்களை போதித்துவிட்டு சென்றிருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக தொகுத்து பார்ப்பதே ஏற்புடையதாகும்.
இதைவிட இன்னொரு தெரிவுக்கு
சந்தர்ப்பம் இல்லாமை
இந்த தேர்தலிலே போட்டியிட்டவர்களுள் மூன்று வேட்பாளர்கள் மட்டுமே பிரதானமானவர்களாக இருந்தார்கள். அதில் முதலாமவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்தவர் சஜித் பிரேமதாஸ, மூன்றாமவர்தான் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க. இவர்கள் மூவரையும் ஒப்புநோக்குகின்றபோது ரணில் விக்ரமசிங்க ஆழ்ந்த அரசியல் புலமையும், அனுபவமும் கொண்டவர் மாத்திரமன்றி இக்கட்டான ஒரு சூழ்நிலையில் நாட்டை மீட்டெடுத்தவர். ஆனால் மக்கள் அவரைப் பார்த்ததைவிட அவரோடு சுற்றி இருந்தவர்களையே நோக்கினார்கள். அதனால் அவரை நிராகரித்தார்கள்.
அதேபோன்று சஜித் பிரேமதாஸ அவர்களும் நல்லதொரு அரசியல் பின்புலத்தைக் கொண்டவர். பலதரப்பட்ட அரசியல் ஜாம்பவான்களோடு பயணித்தவர். அந்த இடத்தில் மக்கள் அவரைப் பார்க்கவில்லை. அவரோடு சேர்ந்திருந்தவர்களைத்தான் பார்த்தார்கள். இந்த இருவருக்கும் வாக்களித்தால் மீண்டும் நாம் சுரண்டப்படுவோம் என்பதை உணர்ந்து கொண்டார்கள். இந்நிலையில் வேறு தெரிவொன்று இருக்கவில்லை. நலவோ, கெடுதியோ அதுவரைக்கும் எந்த கொள்ளைக் கூட்டத்துடனும் சகவாசம் வைக்காத ஒரே நபர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் என்பதை உணர்ந்த மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அவர் வெற்றிபெற வேண்டும் என வாக்களித்த மக்களைவிட தங்கள் வாக்குகளை கறைபடியாத ஒருவருக்கு வழங்க வேண்டும் என்ற சிந்தனையில் வாக்களித்த மக்களே அதிகம். எனவே நல்லவர் ஒருவரும் கெட்டவர் நாற்பது பேரும் சேர்ந்து கூட்டணி அமைத்து இனியும் இந்த நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்ற பாடத்தை இந்த தேர்தல் போதித்திருக்கிறது.
குடும்ப ஆட்சி, பரம்பரை
ஆட்சியை ஏற்காமை
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்ப மற்றும் பரம்பரை ஆட்சியால் இலங்கை சின்னாபின்னப்பட்டிருந்தது. தாம் நாட்டு மக்களால் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு பிரதான கட்சியில் சேர்ந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்லாது தண்டனைகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ளச் செய்கிறார்கள். நல்லவர்களின் நிழலில் வாழ்ந்துகொண்டு தனது வங்குரோத்து அரசியலை மீள கட்டியெழுப்ப நினைப்பவர்களுக்கு மாத்திரமல்ல அவர்களை இணைத்துக்கொள்ளும் நல்ல அரசியல் தலைவர்களையும் நாம் நிராகரிப்போம் என்பதை இந்த தேர்தலிலே மக்கள் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.
ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஊழல் என்ற பொறிக்குள் அகப்பட்டிருக்கிறது. பொதுத் துறை நிர்வாகம் மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை ஊழல்வாதிகளால் சூழப்பட்டிருக்கிறது. மேல்மட்டம் ஊழல் செய்கின்றபோது கீழ் மட்டத்திலுள்ள ஊழல்களை ஒழிக்க முடியாது. ஊழலை ஒழிப்பதாகச் சொல்லி ஆட்சிக்கு வருபவர்கள் அத்தனை பேரும் அவர்களின் பாதுகாவலர்களாக மாறிவிடுகிறார்கள். இந்த ஊழல் கடைசி கால்நூற்றாண்டிலே இலங்கையை பெரும் பொருளாதார சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது. எனவே கடைசி சந்தர்ப்பமாக ஊழலற்ற ஒரு தலைமைத்துவத்தை தெரிவு செய்வதன் மூலம் ஊழல்வாதிகளுக்கு ஒரு மரண பயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இனவாத, மதவாத
அரசியலுக்கு எதிராக
2015, 2019 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் இனவாதம் மதவாதம் முக்கியமான கருப் பொருளாக இருந்தது. ஒரு இனத்தை இன்னொரு இனத்தின் மீது தூண்டிவிட்டு அல்லது பெரும்பான்மை சுகோதரர்களை மூளைச் சலவைக்கு உட்படுத்தி வாக்குகளைக் கொள்ளையடிக்கும் மிக மோசமானதொரு அரசியல் கலாசாரம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. தமது கொள்கைகள் தோல்வி அடைகின்றபோது இனவாதம் கையிலெடுக்கப்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் அநாகரிகம் அண்மைக் காலம் வரை இருந்தது. ஆனால் இனவாதம் மதவாதம் கடந்து சகல இனங்களையும் இணைக்கும் அவர்கள் அனைவரையும் சமமாக மதிக்கும் ஒருவரை இனங்கண்டால் அவரின் பின்புலம் பார்க்காது தலைவராக்குவோம் என்ற ஒரு செய்தியையும் இந்த ஜனாதிபதி தேர்தல் போதித்திருக்கிறது.
ஏமாற்றமும் துரோகமும்
இதுவரை காலமும் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இரு கட்சிகளுக்கு அல்லது அவர்களின் கூட்டணிகளுக்கு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளாக இந்த மக்களுக்கு ஒரு மூன்றாவது தெரிவுக்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. அவ்வாறான ஒரு வாய்ப்பு உருவாகுவதை இரண்டு பிரதான கட்சிகளும் விரும்பவில்லை. பரம்பரையாக காத்து வந்த கட்சியையும் சின்னத்தையும் தூக்கி வீசிவிட்டு புதிய கூட்டணியைத் தோற்றுவித்து இரு தரப்பினரே மாறி மாறி ஆட்சிக்கு வந்தார்கள். இதனால் மக்களும் சுலபமாக ஏமாற்றப்பட்டார்கள். மக்கள் தெளிவு பெற்றால் மூன்றாவது ஒரு சக்தியை முதலாவது இடத்திற்கு கொண்டுவர முடியும் என்பதை இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது.
நாடு கொள்ளையடிக்கப்பட்டமை
இலங்கை வளமமிக்க ஒரு நாடு. ஒரு காலத்தில் இலங்கையை போல் ஆவதற்கு கனவு கண்ட சிங்கப்பூர் இன்று விருத்தியடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால் இன்று எமது நாடு பொருளாதார, கலாசார ரீதியில் வீழ்ச்சியடைந்த ஒரு நாடாக மாறிச் செல்கிறது. நாட்புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு நாட்டிலிருந்து கொண்டு ஒரு மீன் டின்னுக்கு அடுத்த நாட்டிலே கையேந்துகின்றோம். அந்தளவுக்கு எமது பொருளாதாரத் திட்டங்கள் நலிவடைந்து போயிருக்கின்றன. இதற்கு பிரதான காரணம் அரசியல் ரீதியான கொள்ளைகளே. அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரிலும் வீதி அபிருத்தித்தி என்ற அடிப்படையிலும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்தல் என்ற போர்வையிலும் நாட்டின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இதன் விளைவாக பொருளாதார ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்திந்தது. இந்த நெருக்கடியிலிருந்து தாய் நாட்டை மீட்டெடுத்த ஒரு அரசியல் ஞானியைக் கூட மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவரைச் சூழ்ந்திருந்த அரசியல் கொள்ளைக் காரர்களே அதற்கு காரணம். எனவே கொள்ளையடிப்பவர்களை மட்டுமல்ல கொள்ளையர்களை பாதுகாக்க நினைக்கும் அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் அத்தனை பேரும் மக்களால் நிராகரிக்கப்படுவர்கள் என்பதை இந்த தேர்தல் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது.
சம்பள உயர்வை விட
நாட்டு நலனே உயர்வானது
இந்த தேர்தலிலே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இறுதியாக இருந்த அமைச்சரவை சம்பள உயர்வுக்கான அனுமதியை தங்குதடையின்றி வழங்கியிருந்தது. கடந்த காலங்களில் அரச ஊழியர்கள் குறிப்பாக அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடாத்தி இருந்தார்கள். இந்த நிலையில் பெரும்பான்மையான அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அரசதுறை மறுசீரமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
தங்கள் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் சம்பள உயர்வைவிட நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் நன்மை ஏற்படும் விதத்தில் பொருளாதார மாற்றம் ஏற்பட வேண்டும். கடன் சுமை, விலைமட்டம் குறைந்து நாடு முழுமையான அபிவிருத்தியை அடைய வேண்டும் என்ற பரந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாங்கள் சம்பளத்தை விடவும் அதைவிட நாட்டை அபிவிருத்தி நோக்கி முன்னெடுத்துச் செல்லுக் கூடிய ஊழலற்ற, இனவாதம் மதவாதம் இல்லாத ஒரு தலைவரை விரும்புகிறோம் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.
இளைஞர், யுவதிகள், புத்தி ஜீவிகள் இணைந்தால் எதையும் மாற்றலாம்
இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு நாட்டின் இளைஞர்களும் யுவதிகளும் புத்தி ஜீவிகளும் ஒன்றுபட்டு சிந்தித்திருக்கிறார்கள். இவர்களின் ஒட்டு மொத்த கருத்துக்களை செவிமடுக்கின்றபோது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக சிந்தனை ரீதியான ஒரு புரட்சியையும் அர்ப்பணிப்பையும் செய்திருக்கிறார்கள். இனவாத பேச்சுக்களால் கவரப்பட்டு, தூண்டப்பட்டு எதிர்த் திசையில் பயணித்தவர்கள் சரியான பாதைக்கு திரும்பி மாற்றத்திற்கான ஒரு தலைமை வேண்டும் என்பதை உணர்ந்து அதை தீய சக்திகளுக்கு உணர்த்தியும் இருக்கிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் புத்தி ஜீவிகளும் சிந்தனா சக்தியுடனும் இதய சுத்தியுடனும் இணைந்தால் ஒரே நாளில் ஐந்து இலட்சத்தை ஐம்பது இலட்சமாக்கலாம் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
சிறுபான்மை கட்சிகளின்
தலைவர்கள்
எமது நாட்டிலே செயற்படுகின்ற சில சிறுபான்மை கட்சிகளுக்கு தமது மக்கள் எப்போதும் தாம் சொல்வதையே கேட்பார்கள் என்றதொரு எண்ணம் வேரூன்றியிருந்தது. தொன்று தொட்டு நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றும் அவர்கள் கர்ஜிப்பது உண்டு. ஆனால் சில பிரதேசங்களில் இந்த தேர்தல் அதை பொய்யாக்கி விட்டது. சிறுபான்மையினர் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களில் அவர்கள் சொல்வதைக் கேட்டாலும் பெரும்பான்மை மக்களுடன் பரந்து வாழுகின்ற பிரதேசங்களில் அவர்களது கருத்துக்கள் எடுபடவில்லை என்பதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது. மக்களை ஏமாற்றி அரசியல் நாடகமாடும் கட்சித் தலைவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு சாட்டை அடியாகும்.
இப்படியே வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கின்றபோது நடந்து முடிந்த இந்த தேர்தலானது பலவேறு பாடங்களை போதித்துவிட்டுச் சென்றிருக்கிறது. 42 வீதமான மக்கள் மாறினாலும் இன்னும் 58 வீதமான மக்கள் மாறாமல் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் இந்த தேர்தல் இனி இனவாதம் செல்லுபடியாகாது என்பதை வலியுறுத்திவிட்டு சென்றிருக்கிறது. அதேபோன்று 4.3 மில்லியன் வாக்குகளைப் பெற்றவரினதும் 2.2 மில்லியன் வாக்குகளைப் பெற்றவரினதும் உதவி எப்போது வேண்டுமானாலும் தேவைப்படலாம் என்பதையும் சொல்லி இருக்கிறது.
இன்னும் மாகாண ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் மக்கள் பிரிந்தே இருக்கிறார்கள். நாடு என வருகின்றபோது இனம் என்றே சிந்திக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டுமானால் சகல இனத்தையும் சமமாக நடத்துகின்ற பாரபட்சமற்ற தலைமைத்துவம் ஒன்று தோற்றுவிக்கப்படல் வேண்டும். இதை புதிய ஜனாதிபதி செய்வார் என 42 வீதமான மக்கள் நம்பினாலும் 58 வீதமான மக்கள் அதை நம்பவில்லை. பல்லினக் கலாசாரம் ஊடுருவி காணப்படும் இந்த நாட்டிலே இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் சமவாய்ப்புகளையும் புதிய ஜனாதிபதி கட்டி எழுப்ப வேண்டும். இன்று தூய்மையான ஒரு மனிதராகப் பார்க்கப்படும் புதிய ஜனாதிபதி அவர்கள் எமது தாய்த்திரு நாட்டை தூய்மைப்படுத்துவார் என சகல இன மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் இது அவ்வளவு இலகுவானதொரு பணியல்ல. உடனடியாக ஒரு பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள் கொடுத்த அதே ஆதரவை பொதுத் தேர்தலிலும் கொடுப்பார்களா? தனித்து ஒரு அரசாங்கத்தை தோற்றுவிக்க முடியுமா? என்பதெல்லாம் புதிய ஜனாதிபதியின் முன்னால் இருக்கும் கேள்விகளாகும். அது மாத்திரமன்றி நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள், தவறிழைத்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்களா? என்றெல்லாம் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தியினால் தனித்து செயற்பட்டு இந்த நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல முடியுமா? அல்லது ஏனைய கட்சிகளிலுள்ள தூய்மையான அரசியல்வாதிகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டுமா என்பதையும் புதிய ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். அதேநேரம் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் அந்த கட்சியை சேர்ந்தவர்களல்லர். பல்வேறு கட்சிகளில் இருந்து கொண்டே மாற்றத்தை வேண்டி வாக்குகளை வழங்கியுள்ளார்கள். அவர்களை தக்க வைத்துக்கொள்வதோடு புதியவர்களையும் கவர்வதிலேயே தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலம் தங்கியுள்ளது. இதற்காக புதிய ஜனாதிபதி அவர்கள் பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த சவால்கள் தொடர்பில் இன்னொரு கட்டுரையில் ஆராய்வோம்.- Vidivelli