(எப்.அய்னா)
புதிய ஆளுநர்கள் 9 பேர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று புதன்கிழமை (25) பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி மேல் மாகாண ஆளுநராக எக்ஸ்போ லங்கா உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமான ஹனீப் யூசுப் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்துக்கு முன்னாள் உப வேந்தர் ஒருவரும், வட மாகாணத்துக்கு சிரேஷ்ட அரச அதிகாரியான நாகலிங்கம் வேதநாயகமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்கள் பின்வருமாறு :
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தின் முன்னாள் உப வேந்ததர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளராக கடமையாற்றிய அனுபவம் மிக்க சிரேஷ்ட அரச அதிகாரியான பந்துல ஹரிஸ்சந்திர தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் சரத் அபேகோன் மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட அரச அதிகாரியான நாகலிங்கம் வேதநாயகம் வட மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவர் வட மாகாணத்தில் அதிக சேவைக் காலம் கொண்ட அரச அதிகாரியாவார். அவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியவராவார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன ஆவார். இவர் நல்லாட்சி அரசு காலத்தில் ஊழல் மோசடிகளை விசாரிக்கவென ஏற்படுத்தப்பட்ட நிரந்தர விஷேட மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதியாக கடமையாற்றியவராவார்.
வட மத்திய மாகாண ஆளுநராக வசந்த குமார விமலசிறியும், வட மேல் மாகாண ஆளுநராக திஸ்ஸ வர்ணசூரியவும், ஊவா மாகாண ஆளுநராக கபில ஜயசேகர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.- Vidivelli