(எம்.வை.எம்.சியாம்)
சட்டம் சீர்குலைந்துள்ள நிலையில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எமது அரசாங்கத்தில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டில் ஐயமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவோம். அதேபோன்று எதிர்காலத்தில் எந்தவித அராஜக நிலையும் ஏற்படாமல் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்போம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஹபராதுவவில் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாம் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசியல் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துக்காக தயாராகவுள்ளோம். கடந்த காலங்களில் நாட்டை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் காணப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் இருக்கவில்லை.எரிவாயு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார தடை ஏற்பட்டாலும் அதனை இல்லாமல் செய்ய முடியாது போனது.
டொலரை முகாமைத்துவம் செய்ய முடியாமல் போனால் எமது திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல முடியாமல் போகும்.எதிர்காலத்தில் எந்தவித அராஜக நிலையும் ஏற்படாமல் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். சட்டத்தின் ஆட்சி, அரசியல் ஸ்திரதன்மையை உறுதிப்படுத்தக்கூடிய மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய அரசாங்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்த வேண்டும்.சட்டம் சீர்குலைந்த ஒழுங்கற்ற நிலையில் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் எனும் சட்டவாட்சிக்கொள்கை நாம் கொண்டு வருவோம்.எமக்கு பலமிக்க அரசசேவை அவசியமாகும்.ஆனால் அரசசேவை சீர்குலைந்துள்ளது. அரசியல் தலையீடு, ஊழல், அரசியல் நியமனம், அரசியல் இடமாற்றம் என அரச கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என்றார்.- Vidivelli