அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரை விடுதலைசெய்ய துணைபோகக் கூடாது
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்
நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரை விடுதலை செய்யக்கூடாது, அதற்கு துணை போகவும் கூடாது என்பதில் நாம் மிகவும் தெளிவாகவே இருக்கிறோம். நாட்டில் இரத்தக்கறை படிந்த சம்பவங்கள் அரங்கேறுவதற்கு தேசத்தை நேசிக்கும் எந்தவொரு முஸ்லிமும் துணைபோக மாட்டான் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் விடுதலைக்கான சில முயற்சிகள் அண்மைக்காலமாக திரைமறைவில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின் இனவாதிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. எனினும், இரண்டு பாரதூரமான சம்பவங்கள் கிந்தோட்டையிலும் கண்டியிலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டன. கடந்த அரசாங்கத்தில் இனவாத செயற்பாடுகளை அரங்கேற்றியவர்களே இதன் பின்னணியில் இருந்தனர். மஹிந்த ஆட்சியில் இவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை செய்யவில்லை. எனினும் நல்லாட்சியில் சில கைதுகள் இடம்பெற்றன. இதனால் நாம் ஓரளவு திருப்திப்பட்டோம் எனினும் முழுமையாகத் திருப்தியடைவதற்குத் தேவையான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுத்து வருகிறோம். எல்லா ஆட்சிக் காலத்திலும் இனவாதம் இருந்தே வருகிறது.
மஹிந்த ஆட்சியில் கூடுதலாகவும் ரணில் ஆட்சியில் குறைவாகவும் இருந்திருக்கிறது. எந்த தரப்பிலும் முற்றுமுழுதாக இனவாதம் இல்லாதிருந்ததில்லை. நாம் குறைவாக இனவாதம் இருக்கும் தரப்பிலிருந்து அதனை முற்றாக இல்லாமல் செய்வதற்கே பாடுபடுகிறோம்.
ஞானசார தேரர் தான் அளுத்கம கலவரத்தின் பிரதான சூத்திரதாரி. அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அவர் சட்டத்தை மீறி இன்னும் பல குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ளார். ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை குறித்த விவகாரத்திலேயே அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெறும் நபரை விடுவிக்க நாம் துணை போவதானது சட்டவிரோதமான செயற்பாடாகவே இருக்கிறது.
பொதுபல சேனா அமைப்புடன் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அங்கு என்ன பேசப்பட்டது என்று நமக்குத் தெரியாது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கியவர்கள் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வரும்போது மக்கள் பிரதிநிதிகளை கைநீட்டுவார்கள்.
ஞானசார தேரரை விடுவிக்க துணைபோவதானது சட்டத்தை நசுக்கத் துணைபோவதற்கு சமமானதாகும். அவர் பல வகையிலும் நாட்டு சட்டத்தை மீறியுள்ளார். அத்தோடு சட்டத்தை தன் கையிலெடுத்து காடைத்தனத்தையும் அரங்கேற்றியுள்ளார். காலா காலமாக நட்புறவுடன் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறார். சமாதானத்தை விரும்புபவர்கள் அவரின் விடுதலைக்கு துணைபோக மாட்டார்கள்.
ஞானசார தேரர் குற்றத்துக்கு மேல் குற்றம் செய்திருக்கிறார். அவர் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டிருக்கின்றமையை கடந்தகால சம்பவங்கள் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். ஜனாதிபதிக்கும் சில ராஜபக் ஷாக்களுக்கும் அவர் தேவைப்படலாம். அதற்கும் முஸ்லிம் பெயர் தாங்கிய சிலர் துணைபோய் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் சிக்கவைக்கக்கூடாது.
மஹிந்த ராஜபக் ஷ பிரதமராகப் பதவியேற்ற சில தினங்களில் கண்டி கலவரத்திற்கு காரணமான அமித் வீரசிங்க உள்ளிட்ட சிலர் பிணையில் விடுதலையாகினர். தற்போது மாவனெல்லை பகுதியில் ஓர் அச்ச சூழல் உருவாகியிருக்கிறது. இத்தருணத்தில் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பளிப்பதானது மேலும் பல பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். எனவும் இம்ரான் மஹ்ரூப் மேலும் தெரிவித்துள்ளார்.