தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்குமான வளமான எதிர்காலத்தை உருவாக்குவேன்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நியாயம் என்கிறார் ரணில்

0 13

தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்துடனே தான் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன் வந்துள்ளதாகவும், கடந்த பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் துரிதமாக நியாயம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்க கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டு மக்கள் பொறுமை காக்கும் வேளையில், எதிர்க்கட்சியினர் அதிகாரத்தை மட்டுமே குறியாக வைத்து தேர்தல் கோரி போராட்டம் நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றையதினம் பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும், சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று உடன்படிக்கைகளை மீறி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
”சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்வதா அல்லது வரிசை யுகத்திற்குச் செல்வதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் எனது எதிர்காலமன்றி உங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். செப்டம்பர் 21 ஆம் திகதி மிக முக்கியமான நாளாகும். உங்கள் திருமண தினத்தின் பின்னர் முக்கியமான நாள் இது. இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ முன்வந்தார்களா? அவர்கள் எங்கிருந்தனர்.

பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் பின்வாங்கினார்கள். இன்று நாட்டில் அனைத்தும் இருக்கிறது. பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கஷ்டப்படும் போது வராமல் இப்பொழுது தேர்தலுக்காக உங்களிடம் வந்திருக்கும் இவர்களை தும்புத் தடியினால் அடித்துத் துரத்த வேண்டும். வாயில் இருந்து உமிழ்நீர் வடிய வந்து எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறார்கள்.

வரியைக் குறைப்பது ஐ.எம்.எப் நிபந்தனைக்கு முரணானது. சஜித்தும் அநுரவும் சொல்வதைப் போல தற்போதைய நிலையில் வரியைக் குறைத்தால் வருமானம் குறையும். நெருக்கடி ஏற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷர்ரப், முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.