ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சமூகம் மற்றும் சமாதானத்துக்கான மையம் (CSR), ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைக்கும் பரிந்துரைகள்
பொது மக்களின் உரிமைகளுக்காக ஆரம்பம் முதல் தலையீடுகளை செய்து நடவடிக்கை எடுத்துவரும் நிறுவனமே சமூகம் மற்றும் சமாதானத்துக்கான மையம் ( CSR) ஆகும். உயிர்த்த ஞாயிறு தின கொடூர தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்ட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சமூகம் மற்றும் சமாதானத்துக்கான மையத்தின் ஆய்வுக் குழு பரிந்துரைகளை தயாரித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் இப்பரிந்துரைகளை அமுல் செய்வது மிக அவசியம் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
அதன்படி, அதன் முதல் படி முறையாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இப்பரிந்துரைகளை அமுல் செய்வதற்கான இணக்கத்தை வெளிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். அதன்படி, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இது தொடர்பில் நியாயத்தை நிலைநாட்ட வேட்பாளர்களுக்கு உள்ள அபிப்பிராயத்தை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அறிவிக்குமாறு அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் கோருகின்றோம்.
நாம் முன் வைக்கும் பரிந்துரைகள் பின்வருமாறு:
01. உண்மையை கண்டறிதல், ஏற்றுக்கொள்ளல் மற்றும் வெளிப்படைத் தன்மை
* உயிர்த்த ஞாயிறு தின கொடூர தாக்குதல் தொடர்பில் உண்மையை கண்டறிய நியமிக்கப்பட்ட 03 குழு / ஆணைக் குழுக்கள் ஊடாக பல பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. நீதியரசர் விஜித் மலகொட தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஆகியனவே அக்குழுக்களாகும். பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பிலான அனைத்து கோவைகளும் (சாட்சி மற்றும் இறுதி அறிக்கை) பிரசித்தம் செய்யப்பட்டுள்ள போதும், நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான குழுக்களின் இறுதி அறிக்கைகள் மட்டுமே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. சாட்சிப் பதிவுகள் உள்ளிட்ட ஏனைய கோவைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. செனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தலின் பின்னர் அது தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றினை நியமித்த போதும் அதன் அறிக்கை தொடர்பில் எந்த தகவலும் இல்லை. எனவே இந்த குழுக்கள், ஜனாதிபதி ஆணைக் குழுக்களுடன் தொடர்புடைய அனைத்து கோவைகள், அறிக்கைகளையும் ஆர்வம் உள்ள தரப்பினரின் பரிசீலனைக்காக பகிரங்கப்படுத்தல் வேண்டும்.
* உயிர்த்த ஞாயிறு தின கொடூர தாக்குதல்கள் தொடர்பில் மூன்று குழுக்கள் ஊடாக விசாரணைகள் நடாத்தப்பட்டதாக நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அதே போல குற்றப் புலனாய்வுத் திணைக்களம் போன்ற விசாரணை நிறுவனங்களும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்தன. விஷேடமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியங்கள் ஊடாக வெளிப்பட்ட சில விடயங்கள், அதன் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படாமையும், நெளபர் மெளலவி போன்ற முக்கிய சாட்சியாளர்களின் சாட்சியங்களைப் பெறாமையும், அதன் இறுதி அறிக்கை கையளிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை புதிதாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்தும் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலையை சாட்சியங்கள் ஊடாக வெளிப்படுத்திக்கொள்ளல் அவசியமாகும். அதன் படி பூரண அதிகாரம் மிக்க ஆணைக்குழுவொன்று அவசியமாகிறது. இந் நடவடிக்கைகளுக்காக சுயாதீன ஆணைக் குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டும். அந்த ஆணைக் குழு சாட்சிகள் ஊடாக வெளிப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முடியுமானதாக இருத்தல் வேண்டும். அப்போதே அது பிரயோசனமானதாக அமையும். அதன்பின்னர் குற்றவியல் நீதி எனும் தலைப்பின் கீழ் பிரேரிக்கப்படும் வெளிநாட்டு விசாரணை அலுவலகம் ஊடாக அந்த விசாரணைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறான நடவடிக்கைகளுக்கான கட்டமைப்பு இல்லையெனில் விசாரணை ஆணைக் குழு சட்டத்தை திருத்தி பரந்த அதிகாரமுடைய ஆணைக் குழுவொன்றினை நிறுவ தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க பரிந்துரை செய்கின்றோம். அதன்படி பூரண அதிகாரமுடைய ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவை நியமிக்கவும், அவர்களது முதற் கடமையாக தற்போதும் ஆணைக் குழுக்களுக்கும், பொலிஸாருக்கும் பல்வேறு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்கு மூலங்கள், சாட்சிகள் அனைத்தையும் பரிசீலித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும் என ஆணைக் குழு அதிகார பத்திரத்தில் குறிப்பிடப்படல் வேண்டும்.
உள்நாட்டு வெளிநாட்டு பக்கச்சார்ப்பற்ற நீதிபதிகள், உள்நாட்டு வெளிநாட்டு விசாரணையாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஊடாக இந்த ஆணைக் குழுவும் அதன் விசாரணைப் பிரிவும் அமையப் பெறல் வேண்டும். குறித்த ஆணைக்குழு உறுப்பினர்களாக வெளிநாட்டவர்களை நியமிக்க சட்ட இயலுமை இல்லை எனில் மிக குறுகிய காலத்தில் அதற்கான சட்டம் இயற்றப்பட்டு அல்லது திருத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
ஆணைக் குழுவின் உறுப்பினர்களை நியமிக்கும் போது, இந்த தாக்குதல் தொடர்பில் நீதியை எதிர்பார்த்து ஆரம்பம் முதல் செயற்படும் நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் முன் வைக்கும் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
அந்த விசாரணை ஆணைக் குழுவின் வசதி கருதி தேவையான மற்றும் போதுமான அளவு ஊழியர்களுடன் நிதி வசதிகளும் செய்துகொடுக்கப்படல் வேண்டும்.
முக்கிய விடயம் என்னவென்றால், ஆணைக் குழுவின் அனைத்து சாட்சி விசாரணைகளையும் மேற்பார்வை செய்ய உள்நாட்டு, வெளிநாட்டு மேற்பார்வையாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்படல் வேண்டும். இந்த சாட்சி விசாரணைகளை ஊடகங்கள் / சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அத்துடன் இரகசியமாக பதிவு செய்யப்படல் வேண்டும் என ஆணைக் குழு ஏகமனதாக தீர்மானிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சாட்சியங்களை மட்டும் நேரடியாக ஒளிபரப்பாது பதிவு செய்ய முடியும்.
* உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நடைபெறும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அவை வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறல் வேண்டும். அத்துடன் அவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக பொது மக்களுக்கு தெரிந்துகொள்ளக் கூடியதாக இருத்தல் வேண்டும். அதன்படி குறிப்பிட்ட கால எல்லைக்கு ஒருதடவை அப்போதிருக்கும் நிலைமை தொடர்பிலான தகவல்களை பொது மக்களுக்கு முன் வைக்க வேண்டும். அதே போல அவ்விடயங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முறைமை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
நடைமுறை நிலைமை, எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை தொடர்பில் படிமுறை படிமுறையாக பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பொது மக்களை இரு மாதங்களுக்கு ஒரு தடவை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எந்தவொரு குடிமகனும் புரிந்துகொள்ளும் வகையில் தகவல்கள் முன் வைக்கப்படல் வேண்டும். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பிலும் புதிய தகவல்கள் அவ்வறிக்கைகளில் உள்ளடக்கப்படல் வேண்டும்.
02) நட்ட ஈடு
இந்த தாக்குதல் தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒன்றே நட்ட ஈடு செலுத்தலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதுமாகும். அவை பொருளாதார, சமூக மற்றும் உளவியல் நிவாரணங்கள் என்ற 3 பிரிவுகளின் கீழ் அமைதல் வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்காக இழப்பீட்டு அலுவலக சட்டம் மற்றும் அதன் கீழ் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களிலும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரமும் போதுமான சட்ட ஏற்பாடுகள் உள்ளன. நிவாரணம் வழங்கும் போது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சமமான அவர்களது தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளை யதார்த்தமாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினை பகுப்பாய்வு செய்ய விஷேட வேலைத் திட்டமொன்றை முன்னெடுக்க முடியும். அத்துடன் அதனூடாக ஒவ்வொரு குடும்பம் தொடர்பிலும் அளிக்கப்பட வேண்டிய நட்ட ஈட்டுத் தொகை நியாயமாகவும் தேவைகளுக்கு ஏற்பவும் தீர்மானிக்கப்படலாம்.
* அதேபோல உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் காரணமாக பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் நியாயம் நிலைநாட்டப்படுதல் இங்கு முக்கியமானதாகும். அதன்படி குறித்த அதிகாரிகள் எதிர்நோக்கிய மன அழுத்தம் தொடர்பில் அவர்களுக்கு நட்ட ஈடு செலுத்தவும் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கவும் உரிய முறைமை ஒன்று தயார் செய்யப்படல் வேண்டும்.
* கடந்த காலங்களில் அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறி குறிப்பிடத்தக்க ஒரு சாரார் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட சிலருக்கு எதிராக இன்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் மாதக் கணக்கில் விளக்கமறியலில் அல்லது தடுப்புக் காவலிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பதிவானது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் மற்றொரு முக்கியமான அங்கம், அத்தாக்குதலை தொடர்ந்து அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு கைது செய்யப்பட்டோருக்கு நிவாரணமளிப்பதாகும். அவர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவது மற்றும் வேறு நிவாரணங்களை வழங்க வேலைத் திட்டமொன்று முன் வைக்கப்படல் வேண்டும்.
* அதே போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பல பிரதேசங்களில் தாக்குதல்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் பதிவாகின. அந்த சம்பவங்களுக்கு முகம்கொடுத்தவர்களுக்கும் நட்ட ஈடு உள்ளிட்ட நிவாரணங்கள் அளிக்கப்படல் வேண்டும்.
03) குற்றவியல் நீதி
தற்போதைய நடைமுறையில் சட்ட மா அதிபரின் வகிபாகம் பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம், அரசின் சட்ட ஆலோசகரான சட்ட மா அதிபர், ஒரு கட்டத்தில் பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் ஆஜராவதுடனதொரு கட்டத்தில் அந்த பிரதிவாதிகளுக்கு எதிரான விசாரணைகளின் போது மேற்பார்வையாளராவதாகும். ஒரு நீதிமன்றில் பிரதிவாதிக்காக ஆஜராகும் சட்ட மா அதிபர் மற்றொரு நீதிமன்றில் அந்த பிரதிவாதிக்கு எதிராக ஆஜராகின்றார். சட்ட மா அதிபரின் இந்த செயற்பாடு முரண்பாட்டு நிலைமையை தோற்றுவிக்கின்றது. அப்படியானால் வழக்குகளை நெறிப்படுத்தவும், இதற்கு முன்னர் குறிப்பிட்ட விஷேட ஆணைக்குழு நடவடிக்கைகளை நெறிப்படுத்தவும் இதன் பின்னர் குறிப்பிடப்படும் விசாரணை அலுவலகம் கண்டறியும் விடயங்கள் தொடர்பில் தொடுக்கப்படும் வழக்குகள் தொடர்பிலும் விஷேட வழக்குத் தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படல் வேண்டும். அத்துடன் அந்த அலுவலகம் தொடர்பில் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படல் வேண்டும்.
* சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இச்சம்பவம் தொடர்பில் அடிப்படை குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெஹிவளை ட்ரொபிகல் இன் தங்குவிடுதியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரணை செய்தது. பின்னர் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர உட்பட இது தொடர்பில் விசாரணை செய்த அதிகாரிகள் நீக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டின் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீள ஒரு விசாரணையை முன்னெடுத்தது. இந்த இரு விசாரணைகளையும் அடிப்படையாக கொண்டு தற்போது மேல் நீதிமன்றங்களில் 90 சந்தேக நபர்களுக்கு எதிராக 41 வழக்குகள் வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கு மட்டும் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல் நடந்து 5 வருடங்கள் வரை கடந்துள்ள நிலையில், இத்தாக்குதல் தொடர்பில் சந்தேகத்துக்கு இடமான பல விடயங்கள் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. சஹ்ரான் ஹாஷிமுக்கு மேல் நிலையில் இருந்த அபூ ஹிந் எனும் நபர் தொடர்பிலும், தாக்குதல்தாரிகள் உளவுத்துறையுடன் தொடர்புகளைப் பேணியமை தொடர்பிலும் தற்போதும் பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இதுவரை குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதே போல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளிப்பட்ட சில விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட அதற்கு உதவி ஒத்தாசை அளித்த அதனை நெறிப்படுத்திய அனைவரையும் கண்டறிய குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் மிக முக்கியமான விடயமாகும்.
அதனால் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்கவும், அதனை மையப்படுத்தி விஷேட வழக்குத் தொடுநர் அலுவலகத்துக்கு வழக்குத் தொடுக்கவும் முடியுமான வண்ணம் பரந்த அதிகாரத்தை உள்ளடக்கிய விஷேட விசாரணை அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படுவதுடன் அது இச்சம்பவம் தொடர்பிலான விடயங்களை கண்டறியும் விஷேட ஆணைக் குழுவின் மேற்பார்வையின் கீழும் விஷேட வழக்குத் தொடுநரின் ஆலோசனையின் கீழ் செயற்படும் நிறுவமாக செயற்படல் வேண்டும்.
* உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுத்திருக்க முடியுமாக இருந்திருந்தும், அதனை தடுக்காத அதிகாரிகள் சிலர் தற்போதும் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் எதிர்காலத்தில் கண்டறியப்படும் ஏனையவர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
* உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணை தகவல்களை மாற்றுவதற்கும், சாட்சியங்களை மாற்றுவதற்கும், உண்மையை வெளிப்படுத்துவோரை பழிவாங்கும் வண்ணமும் செயற்பட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமானதாகும்.- Vidivelli