நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் முஸ்லிம் மாணவர்களின் சமய கடமைகளுக்கு இடையூறு ; கல்வி அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு
தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கெடுபிடிகளை பிரயோகிப்பதாகவும் மதக் கடமைகளை நிறைவேற்ற தடை விதிப்பதாகவும் குறிப்பிட்டு நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவசர விஜயமொன்றை மேற்கொண்டு இது குறித்து நேரில் ஆராய்ந்துள்ளார்.
இது தொடர்பாக இன்னும் மூன்று வாரங்களில் (அதாவது தேர்தலுக்குப் பிறகு) விசாரணைக் குழுவொன்றின் ஊடாக முழுமையான விசாரணை நடத்தி அந்த விசாரணை அறிக்கையின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், அதிகார சபை தலைவர் எஸ்.குமார் ராஜபக்ச மற்றும் நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.எம்.றஸீன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இவ் அதிகாரசபையினால் நிந்தவூர் மாவட்ட அலுவலகத்திற்கு பிரதிப் பணிப்பாளராக அண்மையில் இடம்மாற்றம் செய்யப்பட்ட பிரதிப் பணிப்பாளர், மாணவர்கள் மீது கெடுபிடிகளை பிரயோகிப்பதாகவும் தொழுகைக்கு பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு கூட தடை விதிப்பதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கடந்த வாரம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குறிப்பிட்ட அதிகாரியை அங்கிருந்து வெளியேற்றுமாறும் கோரியிருந்தனர்.
இதேவேளை, மேற்படி மேலதிகாரியின் கடுமையான நிர்வாகச் செயற்பாடுகளால் தாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், மாவட்டத்தின் கற்பித்தல் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அமைதியின்மையைடுத்து, இது தொடர்பான உண்மை நிலைவரத்தை கண்டறிவதற்காக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி வளாகத்திற்கு வருகைதந்த போதே, 3 வாரங்களில் தீர்வு தருவதாக உறுதியளித்துள்ளார்.
இவ்விவகாரம் நிந்தவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக நல்லிணக்கத்தை பேணாத இந்த மேலதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டன.
மேலும், இதனைப் பயன்படுத்தி வேறு தரப்புகள், தனிநபர்கள் இவ்விடயத்தை தமது சுய இலாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது எனவும், வாக்குறுதியளித்தன் பிரகாரம் தீர்வு தரப்பட வேண்டும் என்பதையும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் பின்னணியில், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் எனத் தெரியாத சூழலில், கல்வி அமைச்சர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், இப்பிரச்சினைக்கு தாம் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் மாணவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.- Vidivelli