சாப்தீன் மீரா
இலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி வரும் ஜனாதிபதித் தேர்தல் ஆடுகளமானது, இந்த நாட்டின் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு மக்கள் மயமாகி காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டோடுகிறது.
பெரும்பான்மை இன சகோதரர்களின் வாக்குகளே தீர்மானம் மிக்க பிரதான சக்தியாக திகழ்கின்ற போதிலும், இம்முறை தேர்தலானது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளபடியால், சிறுபான்மை இன மக்களின் பங்களிப்பும் அனுசரணையும் கடந்த காலங்களை விடவும் அதிக முக்கியத்துவம் மிக்கவையாக உள்ளது.
இந் நிலையிலே தான் இந்த நாட்டிலே வாழுகின்ற சிறுபான்மை இன முஸ்லிம்களும் சகோதர இனத் தமிழர்களும் எவ்விதமான வகிபாகங்களை எடுத்துக்கொள்ளப் போகின்றனர் என்பது பற்றிய அவதானம் அரசியல் அரங்கிலே உற்று நோக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களிலே சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டு வந்த இன மோதல்களும் அட்டூழியங்களும் அநியாயங்களும் புறக்கணிப்புகளும் விவாதிக்கப்பட்டு, அதன் சாதக பாதக நிலைமைகள் ஆராயப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றும் படலங்கள் பல்வேறு சிறுபான்மை இனக்குழுமங்களினாலும் அல்லது பல்வேறு சிறுபான்மை இனக் கட்சிகளினாலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
எது எப்படி இருப்பினும், இந்த நாட்டிலே வாழுகின்ற சிறுபான்மையினர் பன்னெடுங்காலமாக “இலவு காத்த கிளி போல” எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கொள்கை, கோட்பாட்டு உரிமைகளை இவர்களில் யார் வென்றாலும் அள்ளிக் கொடுத்து விடப் போவதில்லை என்பதே பட்டறிவு கற்றுத் தந்த பாடமாகும்.
இவர்கள் மூவரிடமும் இனவாதம் கடுகளவும் இல்லையென இலகுவில் நிரூபித்து விட முடியாது. அவை ஒருவருக்கொருவர் வேறுபட்டு கூடிக் குறைந்து இருக்கலாமே ஒழிய ஒட்டுமொத்த இனவாதம் இவர்களது இதயங்களில் இல்லை என எவராலும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. பரவாயில்லை இருக்கட்டும். எந்த ஒரு மனிதனிடமும் தன் இனத்தின் மீதான பற்று ஆழ்மனதில் இருக்கத்தான் செய்யும். இருக்கட்டும்.
அது இனப்பற்றாக இருக்கும் வரை பிரச்சனை இருக்காது. அதுவே தீவிர இனவாதமாக மாறி அரசியல் இயந்திரத்திற்குள் பிரயோகிக்கப்படுகின்ற பொழுதே இனத்துவேஷம் தழைத்தோங்கி விடுகிறது. பின்னர் படிப்படியாக விஸ்வரூபமெடுத்து சிறுபான்மை இனங்களைக் குறி வைத்துத் தாக்குவதற்காக கையிலெடுக்கும் ஆயுதமாக அது பரிணமிக்கிறது. அதுவே, பின்னர் இன முறுகலையும் இனப் பிரச்சினைகளையும் நாட்டிலே தோற்றுவித்து விடுகிறது.
இவ்வாறான நாசகார அரசியல் சித்து விளையாட்டுகளை அரசியல் கட்சித் தலைமைகளின் ஆதரவு பெற்ற ஏனைய அணிகள் அல்லது குழுக்கள் நிறைவேற்றி வந்தாலும் அவையும் அந்தத் தலைமைகளின் தீவிரவாத செயல்களாகவே நோக்கப்படுகிறது. கடந்து வந்த பாதை நெடுகிலும் இவ்விதமான துரோகச் செயல்களால் சிறுபான்மையினர் வதைக்கப்பட்டுள்ளமை வெள்ளிடை மலை போல் மக்கள் மனங்களில் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கின்றன.
எனவே, அகக்கண் பார்வை கொண்டு உற்று நோக்கி தொலை நோக்குணர்வு திறனுடையவர்களாக சிறுபான்மை இனத் தலைமைகள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.
தற்போதைய நிலையிலே இம்மூவரிடமிருந்தும் இனவாத பிரதிபலிப்புக்கள் இல்லையாயினும் அல்லது குறைவாகினும் அல்லது குறைந்தபட்ச இனப்பற்று மாத்திரமே காணப்படுகிறது என எடுகோள் கருதினாலும், எதிர்காலத்தில் இவர்களது நிலை எவ்வாறு மாறலாம் என ஊகித்துக் கொண்டு உறுதியான தீர்மானங்களை எடுத்து அந்த வேட்பாளரின் பின்னால் அணிதிரள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
ஏனெனில், இன்றைய காலகட்டத்து சமூக அரசியல் பின்னணியிலே இனவாத அரசியல் வெற்றி பெறாது என்பது தான் தற்போது தரித்து நிற்கும் அரசியல் சுற்றுச் சுழற்சி புள்ளியில் அளவீடு செய்யப்படுகின்ற கருதுகோள். இருப்பினும், இன்னும் ஒரு தசாப்த காலத்தின் பின்னர் இனவாத அரசியலில்லாது வெல்ல முடியாது என்ற நிலை தோன்றலாம். அதனையே கடந்த 70 ஆண்டுகால வரலாறுகள் படிப்பினையாக எமக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன.
எனவே, அவ்வாறான ஒரு நிலைமை எதிர்காலத்தில் தோன்றுகின்ற பொழுது ஒருவர் இனவாதத்தைத் தொடங்கி அரசியல் காய் நகர்த்தல்களை முன்னெடுக்க ஆரம்பிக்கின்ற வேளை, மற்றவர்களும் அதில் பங்கு போட்டுக் கொள்கின்ற அல்லது போட்டி போட்டு இனவாத சவாரியில் முந்திக்கொள்ள முண்டியடிக்கின்ற நிலைமை தோன்றலாம். இதுவும் எமக்கு புடம் போடப்பட்ட வரலாற்றுப் பாடமே.
எனவே, அவ்வாறானதொரு எதிர்கால நிலைமை தோன்றுகின்ற பொழுதும், இனவாத நிகழ்ச்சி நிரலை அல்லது தீவிர இனவாத கொள்கையை கையிலெடுக்க முற்பட மாட்டாரெனக் கருதும் ஒரு வேட்பாளரை இனங்கண்டுகொள்ள முடியுமாயின் அதுவே மிக உன்னத தெரிவாகும்.
அதனை விடப் பொருத்தமான வேறொரு தெரிவு இருக்க முடியாது. அதுவே சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாக நாளை தோற்றம் பெறும். அவ்வாறான தலைமைத்துவத்தை இனங்கண்டு கொண்டு பயணிப்பதே சிறுபான்மையினருக்கு பயன் மிக்கதாகவும் பாதுகாப்புக் கவசமாகவும் அமையும்.
அதுவே ஒரு சிறந்த தற்காப்பு உணர்திறனுடைய அரசியல் பயணமாகும்.
எனவே, தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சமூக சிந்தனையாளர்களும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் இளைஞர் அணியினரும் ஓரணியில் திரண்டு பாமர மக்களை வழிப்படுத்தி ஊழலில்லாத சமதர்ம தேசமொன்றைக் கட்டி எழுப்ப இன்றே புறப்படுவோம்!- Vidivelli