எம்.எம்.எம். ரம்ஸீன்
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மறைந்து 24 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அரை நூற்றாண்டுக்கும் மேல் இரு பெரும் பேரின கட்சிகளுக்கு வாக்களித்து வந்த முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரியையும் அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்த பெருமை மர்ஹூம். எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களைச் சாரும்.
தேசிய கட்சிகளில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக அவ்வப்போது மாறுவதைக் கண்ட மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மாற்றுவழிகள் பற்றி சிந்தித்தார். இப்பெருந்தேசிய கட்சிகள் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்தவைகளைப் பற்றி சிந்தித்தார். வடகிழக்கில் இடம்பெற்று வந்த வன்முறைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்களால் முஸ்லிம் இளைஞர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்து ஆயுதமேந்த முற்பட்டால் ஏற்படப் போகும் விபரீதங்களை முன்னுணர்ந்தார். இளைஞர்களை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்வதற்காக அரசியல் ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தார். இதன் விளைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாகியது.
முஸ்லிம் அரசியல் வெறும் சலுகைகளுக்கான அரசியலன்றி சுயகௌரவத்துடனான உரிமைகளுக்கான அரசியலாக அமைய வேண்டும் என்று மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் விரும்பினார். அரசியல் களத்தில் அன்று இரு பெரும் அரசியல் முகாம்களுக்குள் சிறைப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்தை ஒரே கொடியின் கீழ் அணி திரளச் செய்து சாதனை படைத்தார்.
பன்முக ஆளுமைமிக்க தனித்துவ தலைவரின் அரசியல் பாசறையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் புடம் போடப்பட்டனர். அவர் கட்சி அரசியலில் பல அதிர்ச்சி தரும் தீர்மானங்களை மேற்கொண்டார். இதன் அடிப்படையில், கட்சிக்குள் நம்பிக்கைத் துரோகங்கள், கழுத்தறுப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள், குத்துவெட்டுக்களுக்கு முடிவு கட்டினார். எச்சந்தர்ப்பத்திலும் எவரையும் பதவி, அந்தஸ்த்து, தராதரம் பாராது துணிச்சலுடன் தூக்கி வெளியே வீசினார்.
அன்றைய அரசியல் களத்தில் அஷ்ரபின் இந்த முடிவுகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால் சந்தர்ப்பவாதம் மிகைத்த முஸ்லிம் அரசியல் களத்தில் அவரின் இந்நடவடிக்கைகள் பலராலும் பாராட்டும் வண்ணம் அமைந்திருந்தது. சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்தின் கொள்கைகள், கட்டுக்கோப்பு உடைந்து விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக நின்றார்.
முஸ்லிம்களின் அரசியலை அஷ்ரபிற்கு முந்திய காலம் அஷ்ரபிற்கு பிந்திய காலம் என்று கோடிட்டு ஆய்வு செய்யும் அளவுக்கு திருப்பங்கள் செய்த தலைவர் அவர். இதனால், முஸ்லிம் அரசியல் களத்தில் எம்.எச்.எம். அஷ்ரபின் கொள்கையின் பிரகாரம் அல்லது அவரின் கொள்கைக்கு மாற்றமாக அரசியல் செய்வதாக இருப்பினும் அஷ்ரப் என்ற பெயரைக்கூறித்தான் மக்கள் மத்தியில் அரசியல் செய்ய வேண்டும் என்றளவுக்கு அவரது ஆளுமையின் தாக்கம் காணப்படுகின்றது.
சமூகம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தலைவர் அஷ்ரப் துணிந்து நின்று குரல் கொடுத்து வந்துள்ளார். அவரின் இக்குரல் சமூகத்திற்குள்ளும் சமூகத்திற்கு வெளியிலும் ஓங்கி ஒலித்தது. இனப்பிரச்சினையில் ஓர் அங்கமான முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடுகள், அபிலாஷைகள் அன்றைய வட்ட மேசை மாநாடு, இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பவற்றில் கருத்திற்கொள்ளப்படாத போது கவலையடைந்த அவர் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கினார்.
வட, கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் சமூகத்துடன் கலந்து வாழ்கின்றனர். இனப்பிரச்சினைக்குரிய தீர்வு அதனையொட்டிய விடயங்களில் ஒரு சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட முடியாது. இரு சமூகங்களும் அநீதியின்றி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் தமிழ் சமூகத்துடன் ஆரோக்கியமிக்க உறவைப் பேணி வந்தார்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் அரசியல் வழிமுறைகளில் கவரப்பட்டு ஆரம்பம் முதல் தமிழ் பேசும் சமூகங்களின் ஐக்கியத்தையும் ஒன்றிணைந்த செயற்பாடுகளையும் வலியுறுத்தி வந்துள்ளதுடன் யாழ் நூலக எரிப்பைத் தொடர்ந்து, அதன் புனரமைப்புக்கு நிதி திரட்டி அனுப்பிய முதல் முஸ்லிம் தலைவராவார்.
அரசியல் பலத்தை உறுதிப்படுத்தி நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறி மர்ஹூம் அஷ்ரப் அரசியலில் உச்சத்தைத் தொட்டார். முஸ்லிம் வாக்கு வங்கியைக் தன்னகத்தே கொண்டிருந்த அவர் பெரும் கட்சிகளுடன் தேர்தல் காலங்களில் ஒப்பந்தங்கள் செய்தார். பேரம் பேசும் சக்தியினால் சமூகத்தின் தேவைகளை முதன்மைப்படுத்தினார். முஸ்லிம்களின் வாக்குகளை வாக்குறுதிகளுக்கும் சலுகைகளுக்கும் அள்ளிச் செல்ல முடியும் என்ற அரசியல்வாதிகளின் எண்ணங்களுக்கு ஆப்பு வைத்தார்.
அரசியலில் சாணக்கியமும் தொலைநோக்கும் கொண்ட அவர் சிறிய கட்சிகளின் நன்மைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் பேரம் பேசி 12 சதவீத பிரதிநித்துவ வெட்டுப்புள்ளியை 5 சதவீதமாக இரவோடிரவாக மாற்றினார். இது பிற்காலத்தில், மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலான சிறிய கட்சிகளின் இருப்பை பாதுகாத்துக் கொள்ள உதவியது.
அன்னாரை நினைவுகூறும் அரசியல்வாதிகள் அவரின் அரசியல் காய்நகர்த்தல்களில் இருந்து பாடம் படிக்க வேண்டும். அவரின் தூநோக்குமிக்க செயற்பாடுகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். இன்றேல், பாதிக்கப்படுவது சமூகம் மட்டுமேயாகும்.
இன்று வெவ்வேறு முகாம்களுக்குள் பிரிந்து நின்று அரசியல் செய்யும் தலைமைகள் மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் வழிகாட்டல்கள், அணுகுமுறைகள், அரசியல் சாணக்கியம் முதலானவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கின்றது. இந்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத போது சமூகம் ஏமாற்றத்திற்குள்ளாவது மட்டுமன்றி சமூகம் அரசியலில் பிளவுபட்டு செல்லும் என்பதும் தவிர்க்கமுடியாதது.
இந்நாட்டு முஸ்லிம்களுக்கு மீளமுடியாத அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய அரசியல் தலைவரொருவரின் இழப்பாக அஷ்ரப் அவர்களின் திடீர் இழப்பு அமைந்தது.
2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கிழக்கில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகொப்டரில் புறப்பட்ட எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் 45 நிமிடங்களில் அரநாயக்க ஊரகந்த பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தார்.
முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக இரவு, பகல் பாராது பாடுபட்ட தலைவரின் திடீர் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்குப் பேரிழப்பாக இன்று வரை இருந்து வருகின்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா அன்னாரின் பிழைகளை பொறுத்து சுவர்க்கத்தில் நுழைவிப்பானாக. ஆமீன்.- Vidivelli