றிப்தி அலி
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கான தேர்தலுக்கு இன்னும் எட்டு நாட்கள் மாத்திரமே உள்ளன. இதற்காக தற்போது களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசா, அனுர குமார திசாநாயக்க மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய நான்கு பேர் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த தேர்தல்களைப் போலில்லாமல், இந்த முறை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முற்றிலும் மாறுபட்டுள்ளன. அதாவது 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மையினர் இலக்குவைக்கப்பட்டனர். அது மாத்திரமல்லாமல், இனவாத விடயங்களுக்கே தேர்தல் பிரசார மேடைகளில் முக்கியத்துவம் வழங்கப்பட்டன.
ஆனால் இந்த தேர்தலில் இனவாதப் பிரசாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அதேவேளை, இனவாத பிரசாரத்தினை மேற்கொள்ளும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால், வேட்பாளர்கள் இனவாத பிரசாரங்களை கைவிட்டுவிட்டு பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த அரசியல்வாதிகளே இனவாத பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பிரசார மேடைகளில் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமலேயே அவர்கள் பேசி வருகின்றனர். இதனால் அவர்களுடைய உரைகள் தொடர்ச்சியாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதுடன் மக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள செல்வாக்கையும் இழக்கச் செய்வதைக் காண முடிகின்றது.
அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவினை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் அனைவருக்கும் முன்னுதாரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் செயற்பட்டிருந்தார். அதாவது, ‘‘தெற்கு மக்கள் விரும்புகின்ற மாற்றத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வடக்கு மக்கள் எடுப்பார்களாயின் அது தெற்கு மக்களை அதிருப்திக்குள்ளாக்கும்’’ என்ற தொனியிலான கருத்தொன்றினை அண்மையில் அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்து வடக்கு மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விமர்சித்திருந்தார். எனினும் அனுர குமார திசாநாயக்கவின் கருத்தின் பின்னணியில் இனவாதம் இருப்பதாக தான் கருதவில்லை என்றும் அவர் அவ்வாறு இனவாதம் பேசுகின்ற ஒருவரல்ல என்பதை தான் நன்கு அறிவேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த கருத்து சிங்கள் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி அரசியல் விமர்சகர்களினதும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமந்திரன் ௪ஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற நிலையில் அவர் நினைத்திருந்தால் இதனை அனுரவுக்கு எதிராக திசை திருப்பியிருக்கலாம். எனினும் அவர் மிகவும் நேர்மையாக இதனைக் கையாண்டிருந்தால்.
இவ்வாறான நிலையிலேயே முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் அனுர குமார திசாநாயக்க தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்தொன்று இன்று பாரிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
காத்தான்குடியிலுள்ள பிரபலமான அல் – அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ் “தான் ஆட்சிக்கு வந்தால் சிங்கள மக்களுக்கு ஒரு பெருநாள், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பெருநாள், தமிழ் மக்களுக்கு ஒரு பெருநாள் என்று இல்லை. நாட்டில் எல்லோரும் சமம், அதனால், எல்லோருக்கும் ஒரு நாள் தான் பெருநாள்” என்று அனுர குமார திசாநாயக்க ஒரு பிரசார மேடையில் சிங்களத்தில் பேசியதாக குறிப்பிட்டார்.
இதற்கமைய, அனுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் எல்லோருக்கு ஒரு நாள் தான் பெருநாள் தான் கொண்டாட வேண்டும். சீனாவில் பெருநாள் கொண்டாடுவது போன்றே இலங்கையிலும் பெருநாள் கொண்டாட வேண்டியுள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்தின் ஒரு வாரத்திற்குள் நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் மற்றும் தைப் பொங்கல் ஆகியவற்றனை கொண்டாட வேண்டி வரும் எனவும் இக்கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவினால் சிங்களத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த உரை தொடர்பான வீடியோ தன்னிடமுள்ளதாகவும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். எனினும், அனுர குமார திசாநாயக்கவின் குறித்த வீடியோவினை இன்று வரை ஹிஸ்புல்லாஹ் வெளியிடவில்லை.
ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்துக்கு அவரது ஆதரவாளர்களே சமூக வலைத்தளங்களில் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான பொய்களை இனியும் தாம் நம்பத்தயாரில்லை என சமூக ஊடக பதிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவரின் குறித்த உரையினைக் கண்டித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளரான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், ஹிஸ்புல்லாவிற்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார்.
‘இனவாதத்தை தூண்டக்கூடிய பொய் பிரசாரங்களை செய்ய வேண்டாம்’ என்ற தலைப்பிலேயே இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த உரையின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு குறித்த வீடியோவை பகிர்ந்து கொள்ளுமாறும் அப்துர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் காலங்களில் சிங்கள மக்களை உசுப்பேற்றுகின்ற பேச்சுக்கள் தற்போது அருகியுள்ள நிலையில், சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தினை உசுப்பேற்றுகின்ற நிலை தொடர்ந்து செல்கின்றமை கவலையளிக்கின்றது.
மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யான பரப்புரைகளை செய்வது என்ற விடயம் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புதிய விடயம் அல்ல. ஆனால், பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலில் அல்லாஹ்வை பயந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவதாக இந்த பொய்கள் ஏற்படுத்தும் சமூக பாதிப்புகளையும் அவர்கள் புரிந்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறு மக்களை பிழையாக வழிநடத்தும் அரசியல் வழிமுறைகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடனடியாக கைவிட வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான தெஹியத்தக் கண்டியிலுள்ள சிங்கள மக்கள் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக அதே கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
அது போன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு கண்டி மாவட்டத்திலுள்ள சிங்கள மக்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்ற விடயம் யாவரும் அறிந்த உண்மையாகும். இவ்வாறு சிறுபான்மை கட்சியான முஸ்லிம் காங்கிரஸுடனும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் பெரும்பான்மை இன மக்கள் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்ற சமயத்தில் ஏன் அக்கட்சியின் உறுப்பினர்கள் இனவாத பேச்சுக்களை கைவிடத் தயாரில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக தலையிட வேண்டியுள்ளது. அவ்வாறில்லாத பட்சத்தில் கண்டி மாவட்டத்தின் அவருடைய இருப்பு கேள்விக்குறியாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அது மாத்திரமல்லாமல், முன்னாள் அமைச்சர் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி, இனவாத கட்சி என்ற தோற்றப்பாடே பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் நிலைக்கும்! – Vidivelli