பொதுவாக அனைத்து சமூகங்களுடன், குறிப்பாக முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை உள்ளடக்கிய வகையில் ஆவணம் ஒன்றை தேசிய ஷூரா சபை தயாரித்து ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் வழங்கியுள்ளது.
இந்த ஆவணத்தை தயாரிப்பதில் தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக் குழு மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான உப குழு உறுப்பினர்கள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
விரிவான அந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கருத்துக்களது சாராம்சம் வருமாறு:-
தேசிய அளவிலான பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் குடை அமைப்பான தேசிய ஷூரா சபை, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பின்வரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருக்கிறது. தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என அது எதிர்பார்க்கிறது:-
- ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவாக நடாத்துதல்.
- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல்.
- ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் சட்டத்தின் ஆட்சியை விரைவாக நிறுவுவதற்கும், உணவில் தன்னிறைவை அடைவதற்கும், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும், விரைவான பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கும் கொள்கைகள் மற்றும் திறமையான திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுதல்.
- தேசிய ஒற்றுமை, அமைதி, சகவாழ்வு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்குதல்.
- தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்துவதன் மூலம் அனைத்துப் பிரஜைகளும் பயனடையக்கூடிய ஒரு புதிய கல்விக் கொள்கையையும் முறைகளையும் உருவாக்குதல்.
- அதிகாரத் துஷ்பிரயோகம், வெறுப்புப் பேச்சு, பாரபட்ச நடவடிக்கைகள், துன்புறுத்தல்கள், இலஞ்சம், ஊழல், சித்திரவதை அல்லது பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற நடத்தை, அவமானப்படுத்தல், தன்னிச்சையான தண்டனை முறை ஆகியவற்றை நீக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்தல்.
- கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் முறைகேடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குதல்.
- சுற்றுலா மற்றும் வர்த்தக பெயரைப் பயன்படுத்தி வெளிநாட்டு பிரஜைகள் நாட்டுக்குள் ஊடுருவுவதை அடையாளம் காண ஒரு பொறிமுறையை உருவாக்குதல்.
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழித்தல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை பாரபட்சமின்றி செயல்படுத்துதல், ஒன்லைன் பாதுகாப்புச் சட்ட வரைபின் கீழ் முறைகேடுகள் நிகழ்வதை, பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல். இவை மிகத் துரிதமாக மேற்கொள்ளப்படல்.
- இலங்கையில், முறைப்பாடு செய்வதற்கும் பரிகாரம் கோருவதற்குமான பொதுமக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் வகுக்கப்படல்.
- கொவிட்-19 மரணித்தவர்களின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்தமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் நீதி வழங்கப்பட வேண்டும்.
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படல்.
- அளுத்கமை, திகனை, கிந்தோட்டை, அம்பாறை, மினுவாங்கொடை, குருநாகல் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கும் உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கும் ஒரு தனியான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தல்.
- மதம் அல்லது கலாசாரம் தொடர்பாக அரசாங்கத்தின் கீழ் வரும் விவகாரங்கள் அந்தந்த மதம் சார்ந்த சமூகத்திற்கு ஒதுக்கப்படல். அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு அமைச்சரை நியமித்தல்.
- முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் அல்லது வக்ஃப் சட்டங்களும் இவற்றுடன் தொடர்புடைய சட்டங்களும் முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளைக் கவனத்தில் எடுத்து பொருத்தமான முறையில் திருத்தப்பட்டு இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு இணங்க நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் திருத்தப்படல்.
- காதி நீதிபதிகள், மேலதிக நீதிவான்களாகத் தரமுயர்த்தப்பட்டு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மேம்படுத்தப்படல்.
- முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் போன்று வக்ஃப் சொத்துக்கள் விடயத்தில் காலவிதிப்புரிமை பிரயோகிக்கப்படாதிருத்தல்.
- அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள மத மற்றும் கலாசார உரிமைகளுக்கான உத்தரவாதங்கள் அனைத்து அம்சங்களையும் பாதுகாக்கக்கூடிய வகையில் ஒரு குறிப்பான சட்டவாக்க வடிவில் உறுதிப்படுத்தப்படுதல்.
- இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக உள்ளூராட்சி வரவுசெலவுத் திட்டங்கள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துதல்.
- அனைத்துச் சமுதாயங்களினதும் சுகாதார உரிமைகளும் நலன்களும் பொருத்தமான பொறிமுறைகள் மேம்படுத்தப்படுதல்.
- யூனானி மருத்துவ உத்தியோகத்தர்களின் நியமன செயன்முறையை மேம்படுத்துவதன் மூலமூம் யூனானித் துறையின் தரத்தை பல்கலைக்கழகப் பீடங்களின் மட்டத்திற்கு உயர்த்துவதன் மூலமும் யூனானி மருத்துவ முறையை மேம்படுத்துதல்.
- வடக்கு கிழக்கிலும் மற்றும் நாட்டின் ஏனைய எல்லாப் பாகங்களிலுமுள்ள இழந்த காணிகளும், வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட அனைத்துக் காணிகளும், சொத்துக்களும் அவற்றின் சட்டரீதியான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்படல்.
- கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவுக்கு மீளவழங்குதல்.
- நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளை, அத்திட்டம் தொடங்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் உடனடியாக ஒதுக்கீடு செய்தல்.
- தோப்பூர் பிரதேசத்தில் தற்போதுள்ள உப பிரதேச அலுவலகத்திற்குப் பதிலாக 1994 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டவாறு தோப்பூர் பிரதேச செயலாளர் பிரிவை நடைமுறைப்படுத்தி அதற்கான தனியான உள்ளூராட்சி மன்றமொன்றை உருவாக்குவதற்கு உதவுதல்.
- உத்தியோகபூர்வ பிரகடனமின்றி 1989ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கல்முனையில் உருவாக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கல்முனை தமிழ் உப பிரதேச செயலாளர் பிரிவைக் கலைத்தல்.
- கல்முனை நகரில் காணி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குதல்.
- அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகப் பகுதி, உனவட்டுனை, வாத்துவை, பொல்ஹேனை போன்ற பிரதேசங்களில் விசேட கவனம் செலுத்தி நாட்டின் கரையோரப் பகுதி முழுவதும் நிகழும் கடல் அரிப்பைத் தடுப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்துதல்.
- வனப்பகுதியை மேம்படுத்த புதிய தாவரங்கள் மற்றும் பசுமைத் தாவரங்களையும் நடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து நேர்மறையான காபன் கிரெடிட்டை (ஒத்த காடாக்கம் மூலம்) பெறுவதற்கான நோக்கத்துடன் பூச்சிய காபன் உமிழ்வை உறுதி செய்தல்.
- மத மற்றும் கலாசார மரபுகளைப் பின்பற்றுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், அவை நிறுவப்பட்ட சட்டங்களுக்கு இசைவானதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தெளிவான நியதிச் சட்ட ஏற்பாடுகளை உருவாக்குதல்.
- எந்தவொரு சமுதாய நலனும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்து நீதியானதும் சமத்துவமானதுமான கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான மாவட்ட செயலாளர்களை/அரசாங்க அதிபர்களை நியமித்தல்.
- சமத்துவம் மற்றும் சமூக நீதிக் கோட்பாட்டின் கீழ் சனத்தொகையின் பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், தவிசாளர்கள் போன்ற முக்கிய பதவிகளுக்கான நியமனங்களில் இன விகிதாசாரங்கள் பேணப்படுவதை உறுதி செய்தல்.
- இலங்கையில் கிடைக்க வேண்டிய சிரேஷ்ட நிர்வாகப் பதவிகள் பாகுபாடான முறையில் மறுக்கப்படுவதை நிறுத்தி சமத்துவ அடிப்படையிலும் முற்றிலும் திறமையின் அடிப்படையிலும் தெரிவுகளைச் செய்தல்.
- ஒவ்வொரு பொலிஸ் பிரிவுடன் தொடர்புடையதாக இன விகிதாசாரத்தைப் பிரதிபலிக்கக்கூடிய, சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யக்கூடிய சமூகப் பொலிஸ் முறையொன்றை உருவாக்குதல்.
- இனரீதியான பிரதிநிதித்துவத்தைச் சமநிலைப்படுத்தி சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்கும் சமுதாயங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மேம்படுத்தும் பிராந்திய பொலிஸ் அமைப்பு ஒன்றை உருவாக்குதல்.
- அனைத்துச் சமுதாயங்களினதும் விடயங்களிலும் பிரச்சினைகளை சிறப்பான முறையில் தீர்க்கக்கூடியதாக சட்டத்தில் எந்தவொரு இடைவெளியும் இல்லாதவிதத்தில் நியதிச் சட்ட இடவெளியை நிரப்புவதற்குத் தேவையான ஒரு முறையான சட்டமுறையை உருவாக்குதல்.
- வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவான, நீதியான மற்றும் சமத்துவமான அளவுகோல்களை உருவாக்குதல்.
- சமுதாய நலன்களையும் சனத்தொகை இயல்புகளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றங்களில், மாகாண சபைகளில், பாராளுமன்றத்தில் போதுமானளவு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்.
- ஊடகப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும், சமநிலையான அறிக்கையிடலை ஊக்குவிப்பதற்கும் அமைப்புகளை உருவாக்குதல்
- அனைத்து சிக்கல்களும் பிரச்சினைகளும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுசேர்த்து அறிவியில் முறைப்படி வழிநடாத்தப்படும் ஆராய்ச்சியின் அடிப்படையிலான பொறிமுறைகளின் ஊடாக அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்படுதல்.- Vidivelli