திருப்திகரமான ஆட்சியை நடாத்தும் திறன் சஜித் அணியிடமே இருக்கிறது – பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் விடிவெள்ளிக்கு வழங்கிய நேர்காணல்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அநுர குமாரவுக்கு ஆதரவளித்தது. இந்த தேர்தலில் அவருக்கான ஆதரவு அதிகரித்துள்ள போதிலும் நீங்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ளீர்கள். ஏன் இந்த நிலைப்பாடு? அதற்கு காரணம் என்ன?
தேர்தல் முடிவுகளை பொது நன்மைகளை முன்னிறுத்தியே நாம் மேற்கொள்ள வேண்டும். எனது கட்சிக்கு என்ன நன்மை? எனக்கு என்ன நன்மை? இந்த விடயங்களை மையப்படுத்தியே ஏராளமானவர்கள் யோசிக்கிறார்கள். இவ்வாறான அணுகுமுறைகளில் இருந்து நாங்கள் விலகி நிற்கிறோம். அத்தோடு பொது நன்மை என்பது ஒவ்வொரு கால சூழலுக்குமேற்ப வேறுபடுகின்ற ஒன்றாகும். கடந்த தேர்தலில் இருந்த சூழ்நிலை வேறு இப்போது இருக்கின்ற சூழ்நிலை வேறு. கடந்த தேர்தலில் ஈஸ்டர் குண்டு தாக்குதலை தொடர்ந்து இனவாதம் மேலோங்கி இருந்தது. இனவாதத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தலை வெல்வதற்கான அனைத்து தயார் நிலையிலும் ராஜபக்ஷ அணியினர் இருந்தனர். அந்த சூழலில் வேறு வேட்பாளர்கள் வெல்வதற்கான வாய்ப்பு இல்லை. எனவே தான் அந்த தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை கொண்டு ராஜபக்சேக்களை தோற்கடிக்க முடியாவிட்டாலும் எதிர்க்கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது பொது நோக்கமாக இருந்தது. அந்த வகையில் தான் மூன்றாவது சக்தியினை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் என் பி பி அணியின் அநுர குமாரவுக்கு நாம் ஆதரவு வழங்கினோம். அந்த நேரத்தில் அநுரவுக்கு ஆதரவளிப்பதற்கு இப்போது இருப்பது போல வேறு எவரும் முன்வரவும் இல்லை. நாம் அதனை தியாகத்தோடும் பொது நன்மைக்காகவும் செய்தோம். அந்த அத்திவாரத்தில் கட்டப்பட்ட தேசிய மக்கள் சக்தி தான் இன்று பலமான ஒரு சக்தியாக வளர்ந்து நிற்கிறது என்பதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறது.
ஆனால் இந்தத் தேர்தலில் சூழ்நிலைகள் வித்தியாசமானது. எல்லா வழிகளிலும் நாட்டை நாசமாக்கிய ராஜபக்ஷ்களை, பிழையான ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்து விட்டார்கள். அதற்கு மாற்றீடான நல்லதொரு அரசாங்கம் எதிர்வரும் தேர்தலில் அமைய வேண்டும் என்பதே தற்போதைய பொதுநோக்காக இருக்கிறது.
அரசாங்கம் என்பது ஜனாதிபதியால் மட்டும் உருவாகின்ற ஒன்றல்ல. அவரோடு சேர்த்து அவரது அமைச்சரவை, அவரது ஆளும் அணி என ஒரு கூட்டுப் பொறுப்பாகும். அந்தக் கூட்டுப் பொறுப்பினை செய்யக்கூடிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை வழங்கக்கூடிய நடைமுறை சாத்தியமான திட்டங்களும் அவற்றை அமுல்படுத்தக்கூடிய ஆற்றல்களும் கொண்டவர்களை ஒப்பீட்டளவில் நாம் மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
இன்னொரு வகையில் சொன்னால் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தல் என்பது மிக மிக பாரதூரமான ஒன்றாகும். ஆட்சி செய்யும் விடயத்தில் ஒரு சில அம்சங்களில் சறுக்கி விட்டாலும் என்ன நடக்கும் என்பதை நாம் கடந்த காலத்தில் அனுபவித்திருக்கிறோம். ஒரு அம்சத்தை மட்டும் வைத்து அது தொடர்பாக சொல்லப்படும் கோஷங்களை வைத்து மட்டும் ஆட்சியினை ஒரு தரப்பிடம் ஒப்படைத்து விட முடியாது. நல்லதொரு ஆட்சியை வழங்குவதற்கு அவசியமான சகல விடயங்களையும் பட்டியலிட்டு அதன் அடிப்படையில் இருக்கின்ற தெரிவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அந்த வகையில் தான் எஸ்.ஜே.பி அணியானது தற்போதைய சூழலில் இருக்கின்ற தெரிவுகளுக்கு மத்தியில் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது. இதனுடைய அர்த்தம் என்.பி.பி போன்ற சக்திகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது அல்ல. அவர்களும் இந்த நாட்டுக்கு மிக அவசியமான ஒரு சக்தியே. எதிர்காலத்தில் அவர்கள் இன்னும் முதிர்ச்சி அடைந்து தமது ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளோடு அதற்குரிய ஆள் பலத்தோடு முன் வருகிற போது நிச்சயமாக இந்த ஆட்சியை அவர்கள் பொறுப்பேற்கவும் முடியும்.
சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என உங்கள் கட்சி தீர்மானித்தமைக்கான காரணங்கள் என்ன? எஸ்.ஜே.பி. உடன் ஏதேனும் விசேட ஒப்பந்தங்கள் உள்ளனவா?
ஒன்றை மட்டும் நான் முதலில் உறுதியாக சொல்ல வேண்டும். அதாவது இந்த தேர்தலை பொறுத்த அளவில் யாருக்கு வாக்களித்தால் எமது கட்சிக்கு நன்மை; எமக்கு நன்மை என்ற ஒரு துளி எண்ணம் கூட எங்களிடம் இருக்கவில்லை. அல்லாஹ் மீது ஆணையாக. சத்தியமிட்டு ஒரு முஸ்லிமாக இதனை உறுதிப்படுத்த முடியும். ஏற்கனவே எமக்கு எஸ்.ஜே.பி அணியோடு தொடர்பு இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அவசரப்பட்டு அந்தத் தெரிவை நாம் மேற்கொள்ளவில்லை. அதேபோல என் பி பி அணிக்கு கடந்த காலங்களில் ஆதரவளித்தோம் என்பதனால் அவர்களுக்கே இம்முறையும் ஆதரவு என முடிவெடுக்கவும் இல்லை.
எமது கட்சியின் தலைமைத்துவ சபை மூன்று அம்சங்களின் அடிப்படையில் வேட்பாளர்களை கூட்டணிகளை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுத்தது. முதலாவதாக ஜனநாயகத்தை, நீதித்துறையை, நாட்டின் சட்டங்களை மதித்து இந்த நாட்டுக்கு அவசியமான சீர்திருத்தங்களை அதாவது ஊழல் மோசடிகள் இனவாதம் என்பவற்றை நடைமுறைச் சாத்தியமான வழியில் இல்லாமல் செய்கின்ற மாற்றங்களை செய்ய வேண்டும். இரண்டாவதாக இந்த நாட்டு மக்கள் எதிர்கொள்கின்ற உடனடி பிரச்சினைகளான பொருளாதாரப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கக்கூடிய ஆற்றல்களை கொண்டிருக்க வேண்டும். மூன்றாவதாக சட்டம் ஒழுங்கினை சமமாக அமுல்படுத்துகின்ற புதிய ஆட்சி முறை ஒன்றினை உருவாக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் எஸ்ஜேபி அணியோடு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். என்பிபி அணியோடும் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை உத்தியோகபூர்வமாக கோரி இருந்தோம். துரதிஷ்டவசமாக அவர்கள் அதற்கு முன்வரவில்லை. இதற்கிடையில் தான் கடந்த ஆகஸ்ட் எட்டாம் திகதி எஸ்ஜேபி கூட்டணி பிரகடனம் செய்கின்ற நிகழ்வு கொழும்பிலே நடந்தது. ஏற்கனவே அந்த கூட்டணியில் இருந்ததன் அடிப்படையில் எமக்கும் அழைப்பு கிடைத்தது. கலந்து கொண்டோம். அந்த பிரகடனத்தில் சொல்லப்பட்ட நோக்கங்கள் நாட்டுக்கு அவசியமானவை என்பதை எவரும் மறக்க மாட்டார்கள் என்பதனால் அதில் கலந்து கொண்டோம். ஆனால் அவற்றை எவ்வாறு அடைவது என்கின்ற வேலைத்திட்டங்களை எஸ் ஜேபி முன்வைக்க வேண்டும் அதன் அடிப்படையில் தான் நாம் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அந்த பிரகடனத்தில் சொல்லப்பட்ட விடயங்களுக்கான எமது ஆலோசனைகளையும் இன்னும் பல ஆலோசனைகளையும் எழுத்து மூலம் அவர்களுக்கு வழங்கினோம்.
அதேபோல என்பிபி அணி கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் வராத போதிலும் கூட அவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்தோம். எமது கருத்துக்களை சொன்னோம். அவர்கள் பற்றிய குறை நிறைகளை அவர்களுக்கு நேரடியாகவே சொன்னோம். அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தோம். கொள்கை சார்ந்த பல விடயங்களுக்கு நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர்களிடம் இருந்து திருப்தியான பதில் கிடைக்கவில்லை. அத்தோடு மாத்திரம் நாம் முடிவு எடுக்கவில்லை. இரண்டு தரப்புடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும் வரையில் பொறுமையாக காத்திருந்தோம். அவை இரண்டையும் படித்துப் பார்த்தோம். அதை அடிப்படையாகக் கொண்டு நடந்த பல தளங்களிலான விவாதங்களை பார்த்தோம். இதிலிருந்து எம்மால் ஒன்றை புரிந்து கொள்ள முடிந்தது.
இரண்டு அணிகளுமே நல்லதொரு ஆட்சியை நாட்டுக்கு வழங்கப் போகிறோம் என்று சொன்னாலும் நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள், அதற்கு ஏற்ற ஆற்றலும் ஆளுமையும், அதனைக் கொண்டிருக்கின்ற ஆளணி பலம், இந்தத் திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே மேற்கொண்டு இருக்கின்ற அர்த்தபூர்வமான சில நடவடிக்கைகள் என்பவற்றின் அடிப்படையில் ஒப்பீட்டளவில் எஸ்.ஜே.பி.யினால் எல்லா வகைகளிலும் ஓரளவு திருப்திப்படக்கூடிய ஆட்சியை வழங்க முடியும் என்று நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
ஊழல் மோசடிகளுக்கு முற்றுப் புள்ளிவைப்போம் என என்.பி.பி. உறுதியாகக் கூறுகிறதே? அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?
திருடர்களை பிடிப்போம் என்கின்ற கோஷம் என்.பி.பி தரப்பில் மேலோங்கி இருந்தாலும் அதிலும் அவர்கள் 100% நேர்மையாக செயல்படவில்லை என்ற ஆதாரபூர்வமான அவதானமும் எமக்கு இருக்கிறது. ஊழல் எதிர்ப்பு விடயத்திலும் கூட பாரபட்சங்களோடே செயல்படுகிறார்கள் என்ற அவதானம் இருக்கிறது. அதனை நான் நேரடியாகவே அவர்களுக்கு கூறியிருக்கிறேன். அதற்கு திருப்தியான எந்த பதிலையும் அவர்கள் வழங்கவில்லை. அத்தோடு ஊழல் எதிர்ப்பு விடயத்தை சட்டம் ஒழுங்கு நடைமுறைகளுக்கு வெளியில் சென்று ஒவ்வொருவரும் கையில் எடுத்து தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்கின்ற ஒன்றாக மாற்றிக் கொள்வார்களோ என்கின்ற அச்சமும் இப்போது மேலோங்கி இருக்கிறது. அவர்களது மேல்மட்டம் முதல் கீழ்மட்ட உறுப்பினர்கள் வரையில் தெரிவிக்கும் கருத்துக்கள் இதனை நிரூபிக்கின்றன.
பொருளாதாரத் திட்டங்களை பொறுத்தவரையில் அவர்களின் பதில்கள் மழுப்பலாகவே இருக்கிறது. அவர்களின் எதிர்கால நிதி அமைச்சர் என அடையாளப்படுத்தப்படும் நபர் பொதுத்தளங்களில் கூறிவரும் கருத்துக்கள் பெரும் ஏமாற்றம் அளிக்கின்றன. முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. ஆட்சிமுறை தொடர்பிலும் அவர்கள் கூறும் கருத்துக்கள் அவர்களின் தடுமாற்றத்தை காட்டுகிறது. எனவே அரசாங்கத்தை பொறுப்பேற்று நடத்துதல் என்கின்ற இந்தப் பாரதூரமான விடயங்களில் இன்னும் அவர்கள் முதிர்ச்சியும் அனுபவமும் பெற வேண்டி இருக்கிறது.
அப்படியானால் எஸ்ஜேபி இவற்றைச் செய்யும் என்று உங்களால் எப்படிக் கூற முடியும்?
எஸ்ஜேபி அணியுடைய இந்த விவகாரங்களையும் மதிப்பீடு செய்தோம். ஒப்பீட்டு அளவில் இந்த எல்லா விடயங்களிலும் அவர்களது திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமானவைகளாக இருக்கின்றன. அத்தோடு ஜனாதிபதியோடு சேர்த்து இந்த நாட்டுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஆளுமை உள்ள ஒரு குழுவும் அங்கு இருக்கிறது. மேலும் கடந்த நான்கு வருடங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சகல விடயங்களிலும் மக்களுக்கு விசுவாசமாக நடந்த வரலாறும் அவர்களுக்கு இருக்கிறது. மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என கூறும் முக்கிய விடயங்களை எதிர்க்கட்சியில் இருக்கும் போதே செய்யத் தொடங்கி இருக்கின்ற அவதாரங்களையும் பார்க்க முடிகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் அந்த அணி ஆட்சிப் பொறுப்பை ஏற்பதுதான் நாட்டுக்கு உகந்தது என நினைக்கிறேன்.
இதனுடைய அர்த்தம் என் பி பி அணி ஒருபோதும் இந்த நாட்டில் ஆட்சி செய்யக்கூடாது என்பதல்ல. அவர்கள் இன்னும் அதிகமாக முதிர்ச்சி அடைந்த நிலையில் அனுபவப்பட்ட நிலையில் நடைமுறைச் சாத்தியமான திட்டங்களைப் புரிந்து கொண்ட வகையில் அவர்கள் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரலாம். நிச்சயமாக அந்த நேரத்தில் நாட்டு நலன் என்கின்ற பொது நோக்கத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு நாம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை.
நமது நாட்டின் அவசர தீர்வாக தேவைப்படுவது பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வே. அந்த வகையில் எஸ்ஜேபி அணி தான் அதற்கு மிகப் பொருத்தமானது என எவ்வாறு கூறுவீர்கள்?
ஒவ்வொரு வேட்பாளரும் நாட்டின் பொருளாதாரத்துக்குரிய சிறந்த தீர்வினை தாம் கொண்டிருப்பதாகவே கூறுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் தேர்தல் விஞ்ஞாபனங்களை மட்டும் வைத்து நாம் இறுதி முடிவுகளை எடுக்க முடியாது.
இன்னும் பல விடயங்களை நாம் பார்க்க வேண்டும். முதலில் இந்த நாட்டினுடைய பொருளாதார விடயத்தில் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு வேட்பாளரினதும் பார்வை எப்படி இருந்தது என்பது மிக முக்கியம். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்துக்காக ஒன்றை கூறுவதும், பின்னர் ஆளும் கட்சியாக மாற நினைக்கும் போது இன்னொன்றை கூறுவதுமாக இருந்தால் அது ஒரு கட்சியினுடைய நேர்மையீனத்தையே காட்டுவதாக அமையும். மக்களுக்கு விசுவாசமாக அவர்கள் இல்லை என்பதையே அது உறுதி செய்யும். உதாரணமாக IMF இடம் கடன் பெறுவதானது நாட்டுக்கு தீர்வே அல்ல என என்.பி.பி முன்னர் கூறியது.
ஆனால் இப்போது ஐஎம்எப் உதவியுடன் தான் நாம் நாட்டின் பொருளாதாரத்தை முன் கொண்டு செல்வோம் என கூறுகிறார்கள். அப்படி என்றால் அவர்களது நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இல்லை. அல்லது அரசியலுக்காக இவ்வாறான ஒரு பாரதூரமான விடயத்தில் தவறாக மக்களை வழி நடத்துகிறார்கள். எஸ்ஜேபியை பொறுத்தளவில் இப்போது அவர்கள் கூறும் நிலைப்பாட்டையே 2020லும் கூறினார்கள். அதாவது மக்களுக்கு சுமை ஏற்படுத்தாத நாட்டுக்கு பொருத்தமான நிபந்தனைகளோடு IMF கடனைப் பெற்று நாட்டை பொருளாதார வீழ்ச்சி நிலையிலிருந்து மீட்டெடுத்து பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்கிறார்கள். ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது IMF கூறும் ஒரு முக்கிய நிபந்தனையாகும். இது நாட்டுக்கு அவசியமான ஒரு நிபந்தனையே. இந்த விடயத்தில் என்.பி.பி.யும் பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறது. எஸ்.ஜே.பி.யும் பேசியிருக்கிறார்கள். ஆனால் ஊழல்கள் பற்றி பேசுவதற்கும் அப்பால் சென்று எஸ் ஜே பி ஆனது அர்த்தபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது என்பதுதான் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அந்த வகையில் தான் மருந்து இறக்குமதியில் மோசடி செய்த அமைச்சர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல்களுக்கு எல்லாம் தாய் ஊழலான VFS ஊழல் எஸ்.ஜே.பி யின் நடவடிக்கைகள் காரணமாக தற்போது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. தமது அரசாங்கத்தில் இந்த ஊழல் ஒப்பந்தம் முற்றாக ரத்து செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். இந்த விடயத்தில் என்பிபி இன்னும் மௌனமாகவே இருந்து வருகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. இது பற்றி அவர்களிடம் நான் நேரடியாகவே கேள்வி எழுப்பியிருக்கிறேன். அதற்கு அவர்கள் வழங்கிய பதில் மழுப்பலாகவே இருந்தது. இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற ராஜபக்சக்களை நீதிமன்றத்தின் முன்னால் எஸ்ஜேபி நிறுத்தி குற்றவாளிகள் என தீர்ப்பும் பெற்றிருக்கிறது. திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கு அவசியமான புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் எஸ்ஜேபி ஏற்கனவே சமர்ப்பித்திருக்கிறது. இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 28% பங்குகளை முறைகேடாக விற்கும் நடவடிக்கையினை தடுப்பதற்காக நீதிமன்றத்திற்கு போய் இப்போது எஸ்ஜேபி அணி போராடி வருகிறது. ஆக, ஊழல் மோசடி விடயத்திலும் பாராளுமன்ற பேச்சுக்களுக்கும் அப்பால் சென்று காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட அணியாக எஸ்ஜே பியை நாம் பார்க்கலாம். தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தளவில் நடைமுறைச் சாத்தியமான திட்டங்களா அவை என்பதனை முதலில் பார்க்க வேண்டும். தாம் கூறும் பொருளாதாரத் திட்டங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்கின்ற ஒரு விரிவான திட்டம் ஒன்றினை (blue print 3.0) எஸ்ஜேபி இப்போது மக்கள் முன் சமர்ப்பித்து இருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டங்களும் எவ்வாறான கால எல்லைக்குள் அமுல்படுத்தப்படும் என்பதையும் மிக தெளிவாக கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் தமது பொருளாதார திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமானவை என்பதனையும் அதற்குரிய சிறந்த ஆளுமையும் ஆளணிகளும் அரசியல் மன உறுதியும் தம்மிடம் இருக்கிறது என்பதையும் எஸ்.ஜே.பி நிரூபித்திருக்கிறது. ஆனால் என்பிபி இதுபோன்ற தெளிவான திட்டங்களை இதுவரை முன்வைக்கவில்லை. பலரும் சவால் விட்டபோதிலும் கூட அவர்கள் இன்னும் அதனை செய்யவில்லை. இன்னொரு பக்கத்தில் அவர்களின் பொருளாதார நிபுணர்களும் வருங்கால நிதி அமைச்சரும் என சொல்லப்படும் நபர்களும் கூறும் கருத்துக்கள் அவர்கள் இந்த விடயத்தில் தெளிவு நிலையில் இல்லை என்பதை காட்டுகிறது. மாத்திரமன்றி பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்து விடுவார்களோ என்கின்ற பாரிய அச்சம் பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொருளாதார நிலைமைகளை புரிந்து கொள்ளக்கூடிய நபர்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், எஸ்ஜேபி அணியானது மிகத் தெளிவான பொருளாதார நிலைப்பாடுகளை கொண்டிருக்கிறது. மிக விவரமான நடைமுறைச் சாத்தியமான பொருளாதார திட்டத்தை முன் வைத்திருக்கிறது.அதற்குரிய நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கிறது..அதற்கு அவசியமான அரசியல் மன உறுதியினை வெளிப்படுத்தி இருக்கிறது… இதற்கு அத்திவாரமான பல நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியும் இருக்கிறது…. என்ற காரணங்களின் அடிப்படையில் இந்த நாட்டுக்கு தற்கால சூழலில் பொருளாதாரத் தீர்வை வழங்கக்கூடிய மிகப் பொருத்தமான அணியாக அவர்களை நாம் பார்க்கலாம். – Vidivelli