இனத்துவ கட்சிகள் மீது நம்பிக்கையிழக்கும் சமூகம்

0 33

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வர இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கின்ற நிலையில் யார் வெல்வார் என்பதை உறுதியாகக் கூற முடியாதளவு பலத்த போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. வாக்குகள் பல வேட்பாளர்களிடையே சிதறுண்டு செல்வதற்கான வாய்ப்புகளே இன்று வரை தெரிகின்றன. விருப்பு வாக்குகள் மூலமாகவே இம்முறை ஜனாதிபதியைத் தீர்மானிக்க வேண்டி வரும் என்ற எதிர்பார்ப்பே நிலவுகிறது. இதற்கான தயார்படுத்தல்களை தேர்தல் ஆணைக்குழுவும் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் சமகால போக்குகளை வைத்து அவதானிக்கும்போது நமக்குப் புலப்படும் முக்கியமானதொரு அம்சம்தான் முஸ்லிம் சமூகம் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மீதும் அவற்றின் தலைவர்கள் மீதும் நம்பிக்கையிழந்து மாற்று சக்திகளை நோக்கித் திரும்பியிருப்பதாகும். குறிப்பாக சமூகத்தின் இள வயதினர் முஸ்லிம் அரசியலை இன்று கேள்விக்குட்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதுவரை காலமும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறிய பொய்களையும் ஏமாற்று வார்த்தைகளையும் அவர்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்கவும் அரசியல்வாதிகளின் சுயநலப்போக்குகளை விமர்சிக்கவும் துணிந்துள்ளனர். இது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வை தெளிவாக உணர்த்துவதாக உள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மறைந்து இம்மாதத்துடன் சரியாக 24 வருடங்களாகின்ற நிலையிலேயே நாம் ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ளோம். எனினும் அவர் மறைந்த இந்த இரு தசாப்தங்களுக்கும் மேலான காலப்பகுதியில் சமூகம் பெருமைப்படும்படியாக அவரது அரசியல் வாரிசுகள் எதனையும் சாதிக்கவில்லை. மாறாக இவர்களது நேர்மையற்ற அரசியல் காரணமாக சமூகத்தையே பலிக்கடாவாக்கியிருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் கட்சி தாவி தமது பொக்கற்றுக்களை மாத்திரம் நிரப்பிக் கொள்ளும் முஸ்லிம் அரசியல் கலாசாரம் சமூகத்திற்கு தலைகுனிவையே கொண்டு வந்துள்ளது.

மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கு எதிராக இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கவும் காரணமாக அமைந்துள்ளது என்பதை கடந்த கால கசப்பான சம்பவங்கள் மூலம் நாம் உணர்ந்திருக்கிறோம். இம்முறை தேர்தலிலும் அணி அணியாகப் பிரிந்து நின்று அரசியல் செய்யும் இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை இளம் தலைமுறையினர் பகிரங்கமாகவே நிராகரித்து வருவதை அவதானிக்கமுடிகிறது. இதன் பிரதிபலிப்பை நிச்சயம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நம்மால் காண முடியும்.

வருடாந்தம் அஷ்ரபின் மறைவை நினைவுகூரவும் அவருக்கு விழா எடுக்கவும் பின்னிற்காத முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவர் காட்டிய சமூகத்தை முன்னிறுத்திய துணிச்சலான பயணத்தை தொடரத் திராணியற்றவர்களாக இருப்பதும் சலுகை அரசியலுக்கு விலை போயிருப்பதும் பெருந்துயராகும்.

எவ்வாறு தேசிய அரசியலில் புரையோடிப் போயுள்ள ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஒரு அரகலய வெடித்ததோ அதே போன்று முஸ்லிம் அரசியலில் புரையோடிப் போயுள்ள ஊழல் மோசடிகள், சந்தர்ப்பவாதம், கட்சி தாவல், பொய், இனவாதம் என அனைத்துக்கு எதிராகவும் இளம் தலைமுறை எழுந்து நிற்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதைத்தான் இப்போதைய தேர்தல் கள நிலைவரங்கள் நமக்குச் சொல்கின்றன.

வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் தேசியக் கட்சிகள் மூலமாகவே தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை தெரிவாகக் கொண்டுள்ளனர். எனினும் வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்களே இன்றும் இனத்துவ கட்சிகளோடு உள்ளனர். ஆனாலும் வடக்கு கிழக்கிலுள்ள இளம் முஸ்லிம் தலைமுறை தற்போது சிந்திக்கத் தலைப்பட்டுள்ளது.

இனத்துவ கட்சிகளால் தமக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை உணர ஆரம்பித்துள்ளது. இனவாதமற்ற தேசியக் கட்சிகள் மூலமாக பயணிப்பதுதான் சிறந்தது என்பதை அவர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றம் சொல்லும் செய்தியை உணர்ந்து முஸ்லிம் கட்சிகள் சுதாகரித்துக் கொள்ளுமா இல்லையா என்ற கேள்விக்கு காலம் விரைவில் பதில் தரும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.