சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவித பேச்சுவார்த்தையும் நடாத்தவில்லை. அவரது விடுதலை தொடர்பில் எந்தக் கோரிக்கையும் விடவில்லை. தவறு செய்தவர் எவராக இருந்தாலும் நாட்டின் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உலமா சபை உறுதியாக இருக்கிறது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதி பாஸில் பாரூக் உட்பட, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதி, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் சிறையில் ஞானசார தேரரைச் சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் பலவற்றுக்கு நாமே முன்நின்றுள்ளோம், காரணமாக இருந்துள்ளோம். அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பு அவருடன் சுமுகமான பேச்சுவார்த்தைகள் நடாத்தியுள்ளோம். குர்ஆன் மற்றும் இஸ்லாம் மீதான சந்தேகங்களுக்குத் தெளிவு வழங்கியிருக்கிறோம். அன்று அவருடன் பேசி முஸ்லிம் சமூகத்தின் மீதான அவரது சந்தேகங்களைத் தீர்க்க வேண்டுமென்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைப்பாடு இல்லை. ஏனென்றால் இன்று அவர் ஒரு குற்றவாளி. உலமா சபை அஸ்கிரிய மற்றும் மல்வத்து உட்பட நான்கு பௌத்தபீட தலைவர்களுடன் உறவுகளைப் பேணிவருகிறது. பெரும்பான்மை சமூகம் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.
ஞானசார தேரரை சிறைச்சாலையில் பார்வையிட்டு நலம் விசாரித்த உலமா சபையின் பிரதிநிதியின் விஜயம் உத்தியோகபூர்வமான விஜயமல்ல, அது அவரது தனிப்பட்ட விஜயமாகும். ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு உலமா சபை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவில்லை. எந்தவோர் தீர்மானமும் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுவிலேயே மேற்கொள்ளப்படும்.
குற்றம் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இதுவே உலமாசபையின் நிலைப்பாடு என்றார். ஞானசார தேரரை நலம் விசாரிக்க வெலிக்கடைச் சிறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதி அஷ்ஷெய்க் பாஸில் பாரூக் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “எமது விஜயம் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நலம் விசாரிக்கவே சென்றோம். அவரது விடுதலை தொடர்பில் எந்த இடத்திலும் கலந்துரையாடவில்லை” என்றார்.
-Vidivelli