மெத்திகா பங்கேற்கவிருந்த நிகழ்வை இரத்துச் செய்வது குறித்து ஆலோசனை
அவரது பெயரை நீக்குவதாக உப வேந்தரும் தெரிவிப்பு
கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான ஆய்வு மாநாட்டில் மெத்திகா விதானகே சிறப்புரையாற்றுவதற்கு எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து குறித்த நிகழ்வை இரத்துச் செய்வது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிய வருகிறது.
கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான ஆய்வு மாநாட்டில் மெத்திகா விதானகே உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு சிரேஷ்ட வைத்தியர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் வேண்டுகோள்களை முன்வைத்திருந்தனர். குறிப்பாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ருவைஸ் ஹனீபா,யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் கலாநிதி முரளி வல்லிபுரனாதன் உட்பட பலர் இது தொடர்பில் தமது கரிசனையை கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
இந் நிலையிலேயே இது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் இந்நிகழ்ச்சியை இரத்துச் செய்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது எனவும் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.
மெத்திகா விதானகேவின் பின்புலம் குறித்து அறியாத நிலையிலேயே இந்நிகழ்வுக்கு அவர் அழைக்கப்பட்டதாகவும் தற்போது அவர் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளதால் நிகழ்ச்சியை இரத்துச் செய்வதே பொருத்தமானது என ஏற்பாட்டாளர்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கலாநிதி முரளி வல்லிபுரனாதன் அனுப்பி மின்னஞ்சலுக்கு பதிலளித்துள்ள கிழக்கப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வீ.கனகசிங்கம் இது தொடர்பில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு தாம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் இந்நிகழ்ச்சி நிரலிலிருந்து மெத்திகாவின் பெயரை நீக்குவார்கள் என தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி கிழக்கப் பல்கலைக்கழகத்தில் ‘பிராந்திய சவால்களை சமாளிப்பதில் விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகள்’ எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் சிறப்பு பேச்சாளராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெத்திகா விதானகே அழைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்பட வேண்டும் என்ற ஆதாரமற்ற விஞ்ஞான ஆய்வினை சமர்ப்பித்ததன் மூலம் இது தொடர்பில் சர்வதேச ரீதியாக முன்வைக்கப்பட்ட வழிகாட்டல்களைப் புறந்தள்ளவும் காரணமாக அமைந்த மெத்திகா விதானகே இந்நிகழ்வுக்கு அழைக்கப்படக் கூடாது என கல்விச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli