ரணில்-சஜித் இணைவு சாத்தியமே இல்லை
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் திட்டவட்டம்
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பிரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கான ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் அவரை வீழ்த்துவதற்காக ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணையப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
‘‘ சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அதனைத் திசை திருப்புவதற்காகவே இவ்வாறான கதைகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறான போலியான கதைகளின் பின்னால் மக்கள் அள்ளுண்டு செல்லக் கூடாது என நான் வேண்டுகோள்விடுக்க விரும்புகிறேன்.
இரு தனி நபர்களுக்கிடையிலான இணைவு இடம்பெறுவதை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அனுமதிக்காது. ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் பல கட்சிகள் ஒன்றிணைந்தே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. எனவே இக் கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களைத் தாண்டி எந்த தீர்மானங்களும் எடுக்கப்படமாட்டாது. எனவேதான் இவ்விரு வேட்பாளர்களும் இணைவார்கள் என்ற செய்தியை நான் மறுதலிக்கிறேன். அது ஒருபோதும் நடக்காது என்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி. மேலும் தெரிவித்தார்.- Vidivelli