ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி/என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்!

0 177

எம்.எல்.எம்.மன்சூர்

சிங்­கள பெரும்­போக்கு ஊட­கங்­க­ளிலும், சமூக ஊட­கங்­க­ளிலும் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக கருத்­துக்­களை பதிவு செய்யும் அர­சியல் விமர்­ச­கர்கள் அனை­வரும் பொது­வாக பயன்­ப­டுத்தும் ஒரு சொல் ‘தீர­ணாத்­மக’ என்­பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடி­வாகப் போகும் தருணம்’ என்று சொல்­லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்­தி­ரத்­திற்கு பிற்­பட்ட 76 வருட கால வர­லாற்றில் மிக மிக நிர்­ண­ய­மான ஒரு கட்­டத்தில் வந்து நின்­றி­ருக்­கி­றது என்ற அபிப்­பி­ராயம் பொது­வாக அனைத்துத் தரப்­புக்கள் மத்­தி­யிலும் நிலவி வரு­கி­றது.

முன்னர் இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளுடன் ஒப்­பிட்டு நோக்கும் பொழுது இந்தத் தேர்தல் முற்­றிலும் வேறு­பட்ட ஓர் இயல்பை கொண்­டி­ருப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்­தல்­களில் இது­வ­ரையில் இருந்து வந்த இரு முனைப் போட்டி இந்தத் தடவை ஒரு நான்கு முனைப் போட்­டி­யாக மாற்­ற­ம­டைந்­தி­ருப்­பது முத­லா­வது விசேஷம். பலர் நாமல் ராஜ­பக்­சவின் பெயரை தவிர்த்து ‘இது ஒரு மும்­முனைப் போட்டி’ என்று சொல்லி வந்­தாலும் கூட, நாமலும் ஒரு குறிப்­பி­டத்­தக்க போட்­டி­யா­ள­ராக இருந்து வரு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை.

தேர்­தல்­களில் இது­வ­ரையில் 5% க்கு குறை­வான வாக்­கு­களை மட்­டுமே பெற்று வந்த ஒரு விளிம்பு நிலைக் கட்சி ஒரு முதன்மை போட்­டி­யா­ள­ராக எழுச்­சி­ய­டைந்­தி­ருப்­பது இரண்­டா­வது சிறப்­பம்சம். 1990கள் தொடக்கம் ஜனா­தி­பதி தேர்தல் பிரச்­சா­ரங்­களின் போது சிங்­கள சமூ­கத்தின் கொடிய எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த தமிழ் பிரி­வி­னை­வாதம், டயஸ்­போரா சமூகம் மற்றும் 2019 இல் முன்­வைக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் போன்ற கோஷங்கள் பிரச்­சார மேடை­க­ளி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருப்­பது. அடுத்த விசேஷம். அதா­வது, கடந்த 20 ஆண்­டு­களில் வெளிப்­ப­டை­யாக இன­வாதம் பேசப்­ப­டாமல் நடத்­தப்­படும் முத­லா­வது தேர்தல் இது.

சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் (Sinhala Heartland) தெளி­வா­கவே ஒரு ஜேவிபி / என்­பிபி ஆத­ரவு அலை நிலவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக வெவ்­வேறு தரப்­புக்­களால் பல்­வேறு இடங்­களில் நடத்­தப்­பட்ட கருத்துக் கணிப்­புக்கள் மீண்டும் மீண்டும் இதனை ஊர்­ஜிதம் செய்­தி­ருக்­கின்­றன. அநுர குமார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அணி மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைக்கும் அர­சியல் ஆய்­வா­ளர்­களும் கூட ‘ஆம் அவர்­க­ளுக்கு ஒரு ஆத­ரவு அலை இருந்து வரு­கி­றது; அதை மறுக்க முடி­யாது’ என்ற பீடி­கை­யு­ட­னேயே தமது கருத்­துக்­களை முன்­வைக்­கி­றார்கள்.
அதே வேளையில், சஜித் மற்றும் ரணில் ஆகியோர் இந்தத் தடவை முன்­வைத்­தி­ருக்கும் பிரச்­சார சுலோ­கங்கள் பெரி­தாக வாக்­கா­ளர்­களை கவ­ரக்­கூ­டி­ய­வை­யாக இருந்து வர­வில்லை. சார்­பு­ரீ­தியில், ஜேவிபி / என்­பிபி அணிக்குக் கிடைத்­தி­ருக்கும் குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய அனு­கூலம் – ‘எதிரி யார்’ என்­பதை தெளி­வாக அடை­யாளம் காட்டக் கூடிய ஆற்றல்.

சஜித் அணியை பொறுத்­த­வ­ரையில் அவர்கள் ‘வீழ்த்த விரும்பும் முதன்மை எதிரி’ யார் என்­பது அவர்­க­ளுக்கே தெளி­வில்­லாமல் இருப்­பது முக்­கி­ய­மான ஒரு பல­வீனம். ராஜ­பக்­ச­களின் அர­வ­ணைப்பில் இருந்த பலரை தனது அணிக்குள் உள்­ளீர்த்துக் கொண்ட பின்னர் ‘திரு­டர்­களை களை எடுப்போம்’ போன்ற ஜன­ரஞ்­சக சுலோ­கங்­களை முன்­வைக்கும் தார்­மீக உரி­மையை இழந்­தி­ருக்­கிறார் சஜித்.

அவ­ரு­டைய மற்­றொரு பல­வீனம் இன்­றைய இலங்­கையின் பொரு­ளா­தார யதார்த்­தங்­க­ளுக்கு துளியும் சம்­பந்­த­மில்­லாத விதத்தில் கோமா­ளித்­த­ன­மான வாக்­கு­று­தி­களை வழங்­கு­வது. சொல்­லப்­போனால் ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்­கி­ர­ம­ரத்ன போன்ற நாட்டு நடப்­புக்­களை நன்கு அறிந்து வைத்­தி­ருக்கும் SJB முக்­கி­யஸ்­தர்­களை பெரும் சங்­க­டத்தில் நெளிய வைக்கும் வாக்­கு­று­திகள் அவை.

‘அநுர குமா­ரவே எங்கள் தெரிவு’ என்று சொல்லும் பலர் அதற்கு முன்­வைக்கும் காரணம் ‘ஒரு தடவை அவர்­க­ளுக்கும் கொடுத்துப் பார்ப்­போமே’ என்­பது. அதா­வது, ‘இவ்­வ­ளவு காலமும் எத்­த­னையோ பேருக்கு வாக்­க­ளித்து ஏமாந்­தி­ருக்­கிறோம். கடை­சியில் இன்­றைய வங்­கு­ரோத்து நிலைதான் எமக்கு எஞ்­சி­யி­ருக்­கின்­றது’ என்ற ஆதங்­கமே இந்தப் பேச்­சுக்­களில் தொனிக்­கி­றது. அத­னையே அதா­வது – ‘ இந்தத் தடவை திசை­காட்­டிக்கு’ என்று மக்கள் சொல்­வ­தையே – ஜேவிபி/ என்­பிபி அணி தனது பிரச்­சார சுலோ­க­மாக பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

குறிப்­பாக, 2022 அற­க­லய மக்கள் எழுச்­சிக்குப் பின்னர் நாட்டில் உரு­வாக்­கி­யி­ருக்கும் ஜேவிபி/ என்­பிபி ஆத­ரவு அலையின் குடி­ச­ன­வியல் பண்­புகள் (Demographic Features) எவை, புதி­தாக ஜேவிபி ஆத­ர­வா­ளர்­க­ளாக சேர்ந்­தி­ருக்கும் பல இலட்சக் கணக்­கா­ன­வர்கள் எங்­கி­ருந்து வந்­தார்கள், இந்த முடிவை நோக்கி அவர்­களைத் தள்­ளிய சமூக, உள­வியல் கார­ணிகள் எவை போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு நாங்கள் 2004 வரைக்கும் பின்­நோக்கிச் செல்ல வேண்டும்.

2004 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜாதிக ஹெல உரு­மய (JHU) கட்சி சார்பில் மேல் மாகா­ணத்தில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­களில் 9 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­னார்கள். அவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் புத்த பிக்­குகள். விடு­தலைப் புலி­க­ளு­ட­னான போரை சந்­தி­ரிகா – மங்­கள அர­சாங்கம் கையாண்ட விதம் குறித்து கடும் விரக்தி நிலையில் இருந்து வந்த தீவிர சிங்­கள -பௌத்த உணர்­வா­ளர்­களின் ஒரு பிரி­வி­னரே இவ்­விதம் திடீர் JHU ஆத­ர­வா­ளர்­க­ளாக மாறி­யி­ருந்­தார்கள். அவர்­களை அவ்­விதம் அணி திரட்­டு­வதில் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க முதன்­மை­யான ஒரு பாத்­தி­ரத்தை வகித்­தி­ருந்தார். கங்­கொ­ட­வில சோம தேரர் உரு­வாக்­கிய பௌத்த எழுச்சி அலை­யினால் தூண்­டப்­பட்­டி­ருந்த ஒரு பிரி­வி­னரின் இன உணர்­வு­களை அச்­சந்­தர்ப்­பத்தில் ரண­வக்க மிகவும் சாதுர்­ய­மாக தனக்கு சாத­க­மான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருந்தார்.

இந்தச் சமூகப் பிரி­வினர் மேல் மாகா­ணத்தில் – குறிப்­பாக கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் – செறிந்து வாழ்ந்து வரு­கி­றார்கள். 1980 களில் உரு­வா­கிய தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்று, வெளி மாகா­ணங்­க­ளி­லி­ருந்து வந்து கொழும்பு புற நகர் பகு­தி­களில் குடி­யே­றி­ய­வர்கள். ஜே.ஆர். அறி­முகம் செய்து வைத்த திறந்த பொரு­ளா­தார கொள்­கையின் மூலம் பய­ன­டைந்த முதல் தலை­மு­றை­யினர் கிட்­டத்­தட்ட இரண்டு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கா­ளர்­களைக் கொண்­டி­ருக்கும் கெஸ்­பாவ, கடு­வெல, கோட்டே, மக­ர­கம, ஹோமா­கம போன்ற கொழும்பு மாவட்­டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகு­தி­களில் இந்த வகுப்­பி­னரின் பிர­சன்னம் அதிகம்.

சிங்­கள மத்­திய தர வரக்­கத்தின் ஒரு புதிய பிரி­வி­னரின் எழுச்­சி­யாக (Sociological Phenomenon) அப்­பொ­ழுது அது பார்க்­கப்­பட்­டது. கொழும்பு மாவட்­டத்தில் கெஸ்­பாவ மற்றும் மக­ர­கம போன்ற தொகு­தி­களில் வாக்­கு­களின் அடிப்­ப­டையில் யூஎன்­பியை மூன்­றா­வது இடத்­திற்கு தள்­ளி­விட்டு, JHU இரண்­டா­வது இடத்தை பிடித்துக் பிடித்துக் கொள்ளும் அள­வுக்கு அப்­போ­தைய சிங்­கள பௌத்த அலை வலு­வா­ன­தாக இருந்து வந்­தது. இதே­போல கம்­பஹா மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் JHU கணி­ச­மான அள­வி­லான வாக்­கு­களை பெற்றுக் கொண்­டி­ருந்­தது.

அதன் பின்னர் இந்தப் பிரி­வினர் 21 ஆம் நூற்­றாண்டு சிங்­கள பெருந் தேசி­ய­வா­தத்தின் ‘Trendsetter’ களாக உரு­வா­கி­ய­துடன், அவர்கள் தூண்­டி­விட்ட அந்த உணர்வு சிங்­கள சமூகம் நெடு­கிலும் மிக வேக­மாக பர­வி­யது. 2010, 2019 ஜனா­தி­பதி தேர்­தல்­களில் முறையே மஹிந்­த­வுக்கும், கோட்­டா­ப­ய­வுக்கும் இப்­பி­ரி­வி­னரே அமோக ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள்.
2022 பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது எரி­பொருள் மற்றும் எரி­வாயு தட்­டுப்­பா­டுகள் போன்ற பிரச்­சி­னைகள் அவர்கள் இது­வ­ரையில் அனு­ப­வித்து வந்த ‘Comfort Zone’ இலி­ருந்து அவர்­களை வெளியில் எடுத்து வந்­தன. அந்த நிலையில், ராஜ­பக்­ச­களை ஆத­ரித்த அதே அளவு தீவி­ரத்­துடன் அவர்­களை எதிர்க்­கவும் தொடங்­கி­னார்கள்.

சுருக்­க­மாகச் சொன்னால் 2019 இல் கோட்­டா­பய ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு வழங்­கிய படித்த சிங்­கள நடுத்­தர வர்க்­கத்தை சேர்ந்­த­வர்கள் பல இலட்­சக்­க­ணக்கில் இப்­பொ­ழுது திசை­காட்­டியின் பக்கம் வந்­தி­ருக்­கி­றார்கள்.

இந்த அலை ‘கம்­யூனிஸ்ட் / சோஷ­லிச ஆத­ரவு அலை அல்ல’. என்­பதை முதலில் சொல்ல வேண்டும். அநுர குமா­ரவும், அந்த அணியின் ஏனைய தலை­வர்­களும் (குறிப்­பாக லால் காந்த போன்­ற­வர்கள்) அதனை நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள். ஜேவிபி / என்­பிபி மேடையில் கழுத்­துப்­பட்டி அணிந்த கன­வான்கள் ஏராளம் பேர் உட்­கார்ந்­தி­ருக்கும் காட்சி மற்­றொரு சுவா­ரஸ்யம். யுஎன்பி மற்றும் லங்கா சுதந்­திர கட்சி போன்ற பாரம்­ப­ரிய கட்­சி­களின் பிரச்­சார மேடை­களில் கூட முன்னர் அந்த மாதி­ரி­யான காட்­சிகள் தென்­ப­ட­வில்லை. கட்­சிக்கு ஒரு கண்­ணி­ய­மான, மத்­திய தர வர்க்க முகத்­தோற்­றத்தை முன்­வைக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தின் குறி­யீடு அது. ஒரு பெரும்­போக்கு அர­சியல் கட்­சி­யாக (Mainstream Political Party) மாற்­ற­ம­டை­வ­தற்கு ஜேவிபி செலுத்­தி­யி­ருக்கும் விலையே என்­பிபி அணியின் இணைப்பு.

1971 மற்றும் 1987 – 1989 ஜேவிபி கிளர்ச்­சி­களின் போது நில­விய இலங்கை சமூகம் – குறிப்­பாக சிங்­கள சமூகம் – இப்­பொ­ழுது பெரும் மாற்­றங்­களை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது. நகர்ப்­பு­றங்­க­ளிலும், கிராமப் புறங்­க­ளிலும் புதிய மத்­திய தர வர்க்­கத்­தினர் எழுச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றார்கள். இன்­றைய இலங்­கையின் நுகர்வு கலா­சா­ரத்தின் பிர­மாண்­மான வளர்ச்­சியின் பின்­ன­ணியில் இருந்து வரு­ப­வர்கள் அவர்கள். முன்­னைய தலை­மு­றை­க­ளிலும் பார்க்க முற்­றிலும் வேறு­பட்ட அபி­லா­ஷை­களை கொண்­டி­ருப்­ப­வர்கள்.

இலங்கை பொது சமூ­கத்தில் 2022 இன் பின்னர் ஓங்கி ஒலித்து வரும் -‘உட­ன­டி­யாக எமக்­கொரு System Change தேவை’, ‘225 பேரையும் துரத்­தி­ய­டிப்போம்’ போன்ற கோஷங்­களை இச்­ச­மூகப் பிரி­வி­னரே கையில் எடுத்­தி­ருக்­கி­றார்கள். காலி­மு­கத்­திடல் அற­க­லய பூமியில் குமார் குண­ரத்­னத்தின் ‘பெரட்­டு­காமி’ கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட சுலோ­கங்கள் அவை. ஒரு விதத்தில், தீவிர கம்­யூ­னிஸ்­டுகள் காண விழையும் சமூக மாற்­றத்தை வலி­யு­றுத்­து­பவை. ஆனால், இன்­றைய இலங்­கையில் அச்­சு­லோ­கங்கள் அதே அர்த்­தத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதை இங்கு முக்­கி­ய­மாக சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்தக் கோஷங்­களை முன்­வைத்து வரு­ப­வர்கள் எதிர்­பார்க்கும் உண்­மை­யான ‘System Change’ எது? இன்­றைய ஊழல் அர­சி­யல்­வா­தி­களை பிர­தி­யீடு செய்யும் பொருட்டு எந்த வகை­யான மக்கள் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்? அவர்­க­ளு­டைய ஆதர்ச புர்­ஷர்கள் யார்?

தனது முறை வரும் வரையில் பொறு­மை­யுடன் கியூ வரி­சையில் காத்­தி­ருக்கும் ஒரு ஜனா­தி­பதி. போக்­கு­வ­ரத்து விதி மீற­லொன்றை இழைத்து விட்டு அதற்கு அப­ராதம் செலுத்தும் ஒரு பிர­தம மந்­திரி. தனது பிள்­ளையை பொறுப்­புடன் பள்­ளிக்கு அழைத்துச் செல்லும் தந்­தை­யான ஒரு அரச தலைவர் போன்­ற­வர்­களை காட்டும் காணொ­ளி­களை புதிய தலை­மு­றை­யினர் பிர­மிப்­புடன் பார்க்­கி­றார்கள். தமது ஆதர்­சங்­க­ளாக அவர்­களை கொண்­டாடி வரு­கி­றார்கள்.
ஆனால், மேற்­படி உதா­ர­ணங்கள் அனைத்தும் லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டவை என்­பது தான் இங்­குள்ள சுவா­ரஸ்யம்.

ஊழல், முறை­கே­டுகள் இல்­லாத எவ­ருக்கும் பார­பட்சம் காட்­டாத அரச நிர்­வாக கட்­ட­மைப்­புக்­க­ளுக்­கான ஆதர்­சங்­க­ளா­கவும் இந்த மேலைய லிபரல் ஜன­நா­யக நாடு­க­ளையே இவர்கள் சுட்டிக் காட்­டு­கி­றார்கள்.

“நான் சுதந்­தி­ரத்­திற்கு முன்னர் பிறந்­தவன். வாழ்நாள் முழு­வதும் ஒரு தேசா­பி­மா­னி­யா­கவே இருந்­தி­ருக்­கிறேன். எனது வாழ்க்­கையின் முதல் 75 ஆண்­டு­களை இந்த மண்­ணி­லேயே கழித்தேன். ஆனால், இங்கு வாழ முடி­யாத நிலையில் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் எனது பிள்­ளைகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு குடி­பெ­யர்ந்­தார்கள். அவர்­க­ளு­டைய வற்­பு­றுத்­தலின் பேரில் பின்னர் நானும் அங்கு சென்றேன். இரு நாடு­க­ளையும் ஒப்­பிட்டு பார்க்கும் பொழுது தான் நாங்கள் எந்த அள­வுக்கு சீர­ழிந்­த­வர்­க­ளாக இருந்து வரு­கிறோம் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது” என்­கிறார் 1971 ஜேவிபி கிளர்ச்­சியில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த ஒரு முன்­னணி சிங்­கள நாடகக் கலைஞர்.

மேற்­படி கூற்று இன்று ஜேவிபி / என்­பிபி அணியின் பின்னால் திரண்­டி­ருக்கும் சிங்­கள மத்­திய தர வர்க்­கத்­தி­னரின் மதிப்­பீ­டுகள் மற்றும் எதிர்­பார்ப்­புக்கள் என்­ப­வற்றின் துல்­லி­ய­மான ஒரு பிர­தி­ப­லிப்பு எனச் சொல்லலாம்.

சரி­யாகச் சொன்னால் இலங்­கையின் பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் அவர்கள் ஒரு தலைகீழ் மாற்­றத்தை எதிர்­பார்க்­க­வில்லை. இவர்­களில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யினர் நவ லிபரல் பொரு­ளா­தா­ரத்தின் ஆத­ர­வா­ளர்கள். ஆகவே, இந்தப் பின்­ன­ணியில், அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றி வைக்கும் விட­யத்­திலும், அவர்­களை தமது அணிக்குள் தக்க வைத்துக் கொள்ளும் விட­யத்­திலும் ஒரு எதிர்­கால ஜேவிபி / என்­பிபி அர­சாங்கம் கடும் சவால்­களை எதிர்­நோக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(வெற்றியின் பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்னவாக இருந்து வந்த போதிலும்) ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார வெற்றியீட்டினால் அது சுதந்திரத்திற்கு பிற்பட்ட இலங்கை அரசியலில் ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய மாற்றமாக (Paradigm Shift) வரலாற்றில் பதிவு செய்யப்படும். மறுபுறத்தில், ஜேவிபி/என்பிபி வேட்பாளர் தோற்றாலும் கூட, அதனை அந்த அணி எதிர்கொண்ட ஒரு பின்னடைவாக கருத வேண்டியதில்லை. ஏனென்றால், வாக்குகளின் அடிப்படையில் அது நிச்சயமாக நாட்டின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாக எழுச்சியடைந்திருக்கும். அந்த மாற்றமும் இலங்கை அரசியலுக்கு இதுவரையில் இல்லாத ஒரு புதிய இயங்கியலை (Dynamics) எடுத்து வர முடியும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.