எஸ்.என்.எம்.சுஹைல்
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் முற்றிலும் மாறுபட்ட அரசியல் களமாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இன, மதவாதங்களே மூலதனமாகக்கொள்ளப்பட்டது. எனினும், இம்முறை தேர்தல் அவ்வாறல்லாத புதிய கலாசாரத்தை தோற்றுவித்திருக்கிறது.
அதற்கு பிரதான காரணியாக தேர்தலில் களமிறங்கியிருக்கும் மூன்று பிரதான வேட்பாளர்களும் இனவாத, கடும்போக்குவாதிகளாக இல்லை. அவர்கள் இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கவில்லை. இது வரவேற்கத்தக்க நிலைமையாகும்.
எனினும், இந்த தேர்தல்களத்தில் இனவாத கருத்தொன்றை முன்வைத்து பிரசார மேடைகளில் முழங்க ஆரம்பித்தவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இருக்கிறார்.
2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றை வைத்து ஹக்கீம் தேர்தல் மேடைகளில் பேச ஆரம்பித்தார்.
கடந்த இரண்டு வாரகாலமாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அவர்களின் மேடையில் பிரதான பேச்சாளராக கலந்துகொள்ளும் ரவூப் ஹக்கீம் மீண்டும் மீண்டும் இதே விடயத்தைப்பற்றி பேசி வருகிறார். அத்தோடு, அவருக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவும் இதுவிடயமாக கருத்துகளை முன்வைத்து வருகின்றார்.
இருவருக்குமிடையேயான இந்த பேசுபொருளானது கடந்த வாரம் ஜம்இய்யதுல் உலமா வரை சென்றது.
‘‘தான் கரு சம்பந்தப்பட்டும், தீவிரவாதம் சம்பந்தப்பட்டும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் திரிபுப்படுத்தி பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகின்றார்’’ என கடந்த வாரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
“அண்மையில் பிரதானமாக பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் பாராளுமன்றத்தில் நான் கூறிய ஒரு விடயத்தை திரிபுபடுத்தி கொண்டுச் செல்கிறார்கள். குறிப்பாக நான் கண்டேன், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதனைப் பற்றி பகிரங்கமாக கூறிவருகிறார்’’ என்றும் அனுர கூறினார்.
மேலும், முஸ்லிம் சமூகத்திலும் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைக்கு வழிசமைத்தது. அது ஒட்டுமொத்த மக்களுமல்ல. அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் இல்லை. அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த சிங்கள மக்களும் இல்லை. தான் அந்த சமூகத்தில் தோன்றுகின்ற தீவிரவாதம் தான் வன்முறைகளின் கருவறையாக மாறுகின்றன என்பதையே பாராளுமன்றில் கூறியிருந்தேன். எனினும், அந்த விடயங்களை நாங்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்த பின்னர் அது பற்றிய மிகுந்த குறைகூறல்கள் வட்சப் மூலமாக சஞ்சரித்து வருவதை நாங்கள் அறிகிறோம்.
இவை ரவூப் ஹக்கீமின் அரசியல் வங்குரோத்து நிலைமையையும் நிர்க்கதி நிலைமையுமேயாகும். கரு சம்பந்தப்பட்டு திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகிறார்கள். நாங்கள் குறிப்பாக ஜம்மியத்துல் உலமா அமைப்பிற்கு இந்த இனவாத போக்கு பற்றியும் பொய்யான விடயங்கள் பற்றியும் எமது சார்பிலான விடயங்களை எடுத்துரைத்தோம்.” என்றும் தேசிய மக்கள் சக்தி விளக்கமளித்துள்ளது.
தொடர்ந்தும் ஹக்கீம் இவ்வாறு அவதூறு பரப்பி வந்தால் நீதிமன்றத்தில் சந்திக்க நேரிடும் என்றும் அநுர எச்சரிக்கை விடுத்தார். அத்தோடு நின்று விடாது ஹக்கீமிடம் 2 பில்லியன் ரூபா நஷ்டயீடு கோரிய தனது சட்டத்தரணி ஊடாக அநுர ஹக்கீமுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை அக்குறணையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தின்போது ஹக்கீம் இதற்குப் பதிலளித்தார், ‘தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க நஷ்ட ஈடு கோரி எனக்கு கடிதம் அனுப்புவது பிரச்சினையே இல்லை. நீதிமன்றத்தில் நானாகவே வாதாட தயாராக இருப்பதோடு, அவரை தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றேன்” என்றார்.
இப்படி இருவரும் மாறி மாறி அரசியல் மேடைகளில் ஒருவரையொருவர் வெறுப்புப் பிரசாரத்திலும் அவதூறு செய்திகளை பரப்பி முட்டி மோதிக்கொள்வதானது இந்த தேர்தல் மேடைகளில் பேசப்படும் இன வெறுப்புப் பேச்சுகளாகவே அவதானிக்க முடிகிறது.
இம்முறை அமைதியான வன்முறைகள் குறைவான தேர்தல் நடக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். இந்த சூழலில் இவ்வாறான பிரச்சினைகளை தூக்கிப் பிடித்துக்கொண்டு அரசியல் செய்வதானது பெரும் பிற்போக்குத் தனம் என்றே சுட்டிக்காட்ட முடியும்.
இதுதவிர, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியை காப்பாற்றவே சஜித்தை ஆதரித்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை அழிவடையச் செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது என்ற பிரச்சாரத்தையும் இந்த தேர்தலில் முடுக்கிவிட்டுள்ளார்.
உண்மையில் இது ஜனாதிபதித் தேர்தல், இங்கு பிரதான வேட்பாளர்கள் கூட்டணியாகவோ சுயேட்சையாகவோ களமிறங்கி ஜனாதிபதியாக தெரிவாவதை எதிர்பார்க்கின்றனர். இந்த இடத்தில் முஸ்லிம் காங்கிரஸை காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வாக்கு கேட்பதானது அடுத்த ஆதரவாளர்களை உசுப்பேற்றி வாக்குவேட்டையில் ஈடுபடும் ஒரு செயலாகவே கருத முடியும்.
மேலும், நேற்றுமுன்தினம் அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஹக்கீம் பிரதேசவாதத்தை கூர்மையடையச் செய்யும் வகையில் உரையாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அதாவுல்லாஹ்வுக்கு எதிராக பேச முற்படும் அவர் அக்கரைப்பற்று என்று விழித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
இங்கு, இன ரீதியான வெறுப்பு பிரசாரம், அவதூறு வெறுப்பு பிரசாரம், பிரதேச ரீதியிலான வெறுப்புப் பிரசாரம் என ஹக்கீம் மீதான குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே செல்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹக்கீம் இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. மக்கள் தற்போது அரசியல் ரீதியாக நன்கு விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள். சமூகம் மெல்ல மெல்ல முற்போக்காக சிந்திக்கும் சூழலில் முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள அரசியல் பிரதானிகளின் செயற்பாடுகள் மக்களை இனம் மற்றும் பிரதேசவாதத்தை தூண்டுவதாக அமையக் கூடாது என்பதே அனைவரதும் விருப்பமாகும்.- Vidivelli